உதவி பெறுதல்
நீங்கள் பாலியல் தொந்தரவுக்குள்ளாகியிருந்தால், எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் வருமாறு:-
குரல் எழுப்புங்கள். உங்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பவரிடம், அவருடைய நடத்தை விரும்பத்தகாதது மற்றும் அதை அவர் நிறுத்த வேண்டும் என்று உறுதியாகக் கூறுங்கள். உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் சில வழிகள் வருமாறு:
- “நீங்கள் என்னை அப்படிப் பார்க்கும்பொழுது எனக்கு அசௌகரியமாக உள்ளது. தயவு செய்து அவ்வாறு பார்ப்பதை நிறுத்துங்கள்!”
- “இதற்கு முன்பு உங்களுடன் வெளியே செல்ல நீங்கள் என்னை அழைத்தபொழுது நான் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டேன். என்னுடைய முடிவை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீங்கள் இதனை நிறுத்தாவிடில், நான் XXXX இடம் அறிவிக்கப்போகிறேன். (XXXX என்பவர் உங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவை நிறுத்த உதவும் நபர் அல்லது அதிகாரத் தரப்பாக இருக்கலாம்)
- “நீங்கள் என்னைத் தொட்டால் அல்லது அதே வார்த்தையை மறுபடியும் கூறினால் நான் புகார் செய்யப்போகிறேன்.”
- “ஆமாம். எனக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. ஆனால் நீங்கள் கூறுவது நகைச்சுவை கிடையாது. அது பாலியல் தொந்தரவு. நீங்கள் அதை நிறுத்தாவிடில் நான் XXXX இடம் பேச வேண்டியிருக்கும்.”
உங்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை/சம்பவங்களைப் பதிவு செய்யுங்கள்.
எப்பொழுது, எங்கு மற்றும் எப்படி அந்தச் சம்பவம் நடந்தது என்ற விபரங்கள் இருப்பின் உங்களைத் தொந்தரவு செய்பவர் மீது புகார் கொடுக்க அது உதவியாக இருக்கும். அதே நபர் உங்களுடன் பணியாற்றுபவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தால் அவர்களையும் சம்பவங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளவும்.
ஒருவரோடு பேசுங்கள். பாலியல் தொந்தரவுகள் தொடருமானால், உங்களுக்கு மனோரீதியான ஆதரவை நல்கி உதவ இயன்ற ஒருவரிடம் பேசுங்கள். அதோடு நீங்கள் ஆலோசனை பெறுவதற்காகப் பெண்கள் அமைப்புகளைத் தொடர்புகொள்ளலாம். பாலியல் தொந்தரவுக்குள்ளான பெரும்பாலோருக்கு ஏற்படும் பயம், மனக்கவலை மற்றும் சுயமதிப்பின்மையிலிருந்து நீங்கள் விடுபட ஒருவருடன் பேசுவது நன்மை பயக்கும்.
பெண்கள் அமைப்பின் உதவியை நாடவும். பாலியல் தொந்தரவை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதனைக் கலந்தாலோசிக்க பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) போன்ற பெண்கள் அமைப்புக்கு அழைக்கவும் அல்லது செல்லவும். பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் உங்களுக்கு ஆலோசனை மற்றும் நீதிமன்ற ஆதரவுகளை வழங்கும்.
மருத்துவ உதவி பெறவும். பாலியல் தொந்தரவுகள் உங்களுக்கு மனதளவில் நாசங்களை ஏற்படுத்தும். உங்கள் மனநிலையை சரிசெய்ய நீங்கள் ஆலோசனைகள் அல்லது மனநல மருத்துவரிடமிருந்து சிகிச்சைகளைப் பெறலாம். இந்த மன ஆரோக்கிய மதிப்பீடு அறிக்கையை உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொந்தரவுகளுக்கு ஆதாரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாலியல் தொந்தரவுக்கு எதிரான தீர்ப்பாயத்தில் புகார் செய்யுங்கள். பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் 2022-ஐ மலேசியா நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் அன்றாட வாழ்வின் பாலியல் தொந்தரவுக்கு ஆளான எந்தவொரு நபருக்கும் பரிகாரம் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தீர்ப்பு மன்றத்தை நிறுவியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் செய்யவும். நீங்கள் காவல்துறையில் புகார் பதிவு செய்தால், காவல்துறை, பொது குற்றவியல் சட்டத்தைப் (தண்டனைச் சட்டம், Penal Code) பார்த்து எந்தப் பிரிவில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது குற்றஞ்சாட்டலாம் என்பதனை முடிவு செய்யும். இந்தப் பிரச்சனை மற்றபாலியல் குற்றங்கள் போலவே கையாளப்படும். பாலியல் தொந்தரவுகளால் நீங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கான மனநிலை மதிப்பாய்வு அறிக்கை இருக்குமானால், விசாரணை நோக்கத்திற்காக அதனை நீங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கலாம்.
எந்தக் காவல்நிலையத்திலும் நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கத் தேவையான விபரங்கள் வருமாறு:-
- எப்பொழுது: எப்பொழுது நடந்தது? – சம்பவம்/சம்பவங்கள் நடந்த தேதி மற்றும் நேரம்.
- எங்கு: எங்கு அது நடந்தது – இடம்?
- என்ன மற்றும் எப்படி: என்ன சம்பவம் நடந்தது, எப்படி நடந்தது மற்றும் எத்தனை முறை நடந்தது? – சம்பவம்/சம்பவங்களின் விபரங்கள்.
- யார்: யார் இதில் சம்பந்தப்பட்டது மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்தது யார்?
- பாதிப்பு: சம்பவத்திற்குப் பிறகு உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? மனச்சோர்வு, இன்னும் பல.
- ஏன்: ஏன் புகார் செய்யப்படுகிறது? பாதுகாப்புக்காக, காவல்துறை நடவடிக்கை எடுக்க, இன்னும் பல.
நீங்கள் காவல்துறையில் கொடுத்த புகார், பாலியல் தொந்தரவு கொடுத்தவர் தவறிழைத்திருக்கிறார் என்பதனை அவருக்கு உணர்த்தும். காவல்துறை விசாரணையின் மூலம், பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம். (மலேசிய பிரிவில் உள்ள சட்டங்களைப் பார்க்கவும்)
பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது வழக்கு தொடர்தல். பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது நீங்கள் உரிமையியல் வழக்கு (civil suit) தொடர நினைத்தால் ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையை நாடுவது அவசியம். வேறு எந்த விதமான நீதிமன்ற வழக்குகள் போன்று இதற்கும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. வழக்கறிஞர் உங்களைப் பிரதிநிதித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனாலும், வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது பெருஞ்செலவினை உண்டாக்குவதோடு அதிக காலத்தையும் எடுத்துக்கொள்ளும்.
நீங்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானால் செய்ய வேண்டியது என்ன?
பணியிடத்தில் உங்களுக்கு ஏற்படும் எந்த வடிவிலான பாலியல் தொந்தரவுகளையும் துல்லியமாகப் பதிவு செய்யுங்கள். மின்தகவல்கள், மின்னஞ்சல் அல்லது தொந்தரவு கொடுத்தவர் அனுப்பிய வேறு பாலியல் பொருள்களை அச்சு எடுங்கள். சில வரையறைகள் இருந்தாலும், 2012-லிருந்து, பணியிடத்தில் நிகழும் பாலியல் தொந்தரவுகள், தொழில் சட்டம் 1955 (Employment Act 1955)-ன் கீழ் அங்கீகரிக்கப்படுகின்றன (மலேசிய பிரிவில் உள்ள சட்டங்களைப் பார்க்கவும்). குரல் எழுப்புவதன் மூலம், உங்களுக்கும், அதே நபரிடமிருந்து பாலியல் தொந்தரவுகளை அனுபவிக்கும் ஏனையோருக்கும் நீங்கள் உதவ முடியும். பாலியல் தொந்தரவு கொடுத்தவர் எதிர்காலத்தில் அதே தவற்றைச் செய்யாமல் இருக்க நீங்கள் உதவுகிறீர்கள்.
அ) மனிதவளப் பிரிவு/நிர்வாகி/இயக்குநர் வாரியம் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமான புகாரை அளிக்கவும்.
நீங்கள் சேகரித்த எல்லா ஆதாரங்களையும் இணைக்கவும் (உதாரணத்திற்கு, எழுதப்பட்ட குறிப்புகள், காணொளிப் பதிவுகள், இன்னும் பல). மனிதவளப் பிரிவு (Human Resources (HR) department) அல்லது உங்கள் நிர்வாகி (manager) மற்றும் இயக்குநர் வாரியத்திற்கு (Board of Directors) அல்லது வேறு உயர் அதிகாரத் தரப்புக்கும் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமான எழுத்துப்பூர்வமான புகாரை அளியுங்கள். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்களுடைய கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் விளக்குங்கள். பணியிடத்தில் நிகழும் பாலியல் தொந்தரவுகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான வரைவுகளை உங்கள் முதலாளி வைத்திருக்கலாம். விசாரணை கோர உங்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளன.
புகார் கிடைத்தவுடன், உங்கள் முதலாளி நிறுவனத்திற்குள் இது தொடர்பாக விசாரித்து அல்லது நிறுவனத்திற்குள்ளேயே ஒரு நடுநிலையான வாரியத்தின் முன்னிலையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். நடுநிலை வாரியம் கண்டறிந்தனவற்றை வைத்துப் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆ) தொழிலாளர் இலாகாவுக்கு ஒரு எழுத்துப்பூர்வமான புகாரை அளிக்கவும்.
உங்கள் முதலாளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், தொழிலாளர் இலாகாவிற்கு (Labour Department) கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் எழுத்துப்பூர்வமான புகாரை அளியுங்கள். அந்தப் புகாரின் ஒரு பிரதியை நீங்கள் பணி புரியும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கவும். பிரச்சனை தொழிலாளர் இலாகாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரியவரும்பொழுதுதான் அதன் தீவிரம் உங்கள் முதலாளிக்குப் புரிய வரும்.
புகாரை விசாரித்து, விசாரணை அறிக்கையை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நீங்கள் பணி புரியும் நிறுவனத்திற்குத் தொழிலாளர் இலாகா ஆணையிடும். அப்படிப் பாலியல் தொந்தரவுப் புகார் நிறுவனத்தின் ஒரே உரிமையாளர் மீது கொடுக்கப்பட்டிருந்தால், தொழிலாளர் இலாகாவே நேரடியாக வந்து விசாரணையை மேற்கொள்ளும். விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.
இது எதுவும் சாத்தியம் இல்லை என்றால் அல்லது உங்கள் முதலாளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நீங்கள் வெளி நிறுவனங்களின் உதவியை நாடலாம்.
பாலியல் தொந்தரவுகளைப் புகார் செய்ய முன் வந்ததால் உங்களை யாராவது பழிவாங்கினால் அல்லது பாலியல் தொந்தரவினால் நீங்கள் வேலையிலிருந்து விலக நினைத்தால், நீங்கள் தொழிற்துறை தொடர்பு இலாகாவின் (Industrial Relations Department) உதவியை நாடலாம்.
அ) நீங்கள் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால்.
நீங்கள் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், உங்களை வேலையில் திரும்ப அமர்த்த வேண்டும் எனவும், பணி நீக்கம் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் தொழிற்துறை தொடர்பு இலாகாவிடம் (Industrial Relations Department) புகார் செய்ய வேண்டும். தொழிற்துறை தொடர்பு சட்டம் (Industrial Relations Act) 1967-ன் பிரிவு 20-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. சமரசம் செய்து வைப்பதற்காகத் தொழிற்துறை தொடர்பு இலாகா உங்களையும் உங்கள் முதலாளியையும் சந்திப்புக் கூட்டத்திற்கு அழைக்கும். இங்கு நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று உங்கள் முதலாளி நிரூபித்தாக வேண்டும்.
அப்படி உங்களுடைய பணி நீக்கம் நியாயமற்றது என்பது உறுதியானால், தொழிற்துறை தொடர்பு இலாகா, உங்களை மீண்டும் பணியில் அமர்த்தவோ அல்லது அதற்குப் பதிலாக இழப்பீடு கொடுக்கவோ பரிந்துரைக்க வேண்டும். எந்தத் தீர்வும் எடுக்கப்படாவிட்டால், மேல் நடவடிக்கைகாக, பிரச்னையை மனித வள அமைச்சின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது தொடர்பாக, சரியான காரணங்கள் இல்லாமல் நீங்கள் எந்தவொரு சந்திப்புக் கூட்டத்திற்கும் வரத் தவறினால், உங்கள் புகாரை மீட்டுக்கொண்டுள்ளீர்கள் என்று கருதப்படும். (மலேசிய பிரிவில் உள்ள சட்டங்களைப் பார்க்கவும்)
ஆ) பாலியல் தொந்தரவு காரணமாக நீங்கள் பணி விலகியிருந்தால்.
பாலியல் தொந்தரவின் காரணமாக உங்கள் நிலைமை மிகவும் மோசமாகி, நிறுவனம் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்து நீங்கள் வேலையை விட்டு விலகியிருந்தால், நீங்களாகவே வேலையை விட்டு விலகுவதற்கான நெருக்கடிகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே உருவாக்கிக் கொடுத்திருக்கிறது (constructive dismissal) என்று பொருள்படும். இதற்கு நீங்கள் தொழிற்துறை தொடர்பு இலாகாவில் புகார் அளிக்க வேண்டும். நெருக்கடிகளின் காரணமாக நீங்கள் வேலையிலிருந்து விலகிய பட்சத்தில், உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தீர்கள் என்பதனையும் நிரூபிக்க வேண்டும்.
இ) பெண்கள் மறுமலர்ச்சி மையம் போன்ற அரசாங்க சார்பற்ற அமைப்புகளிடமிருந்து உதவி பெறுதல்.
பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) போன்ற அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு அழைப்பு செய்து அல்லது நேரடியாகச் சென்று, நீங்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதை கலந்தாலோசிக்கவும். அங்குள்ள சமூகப் பணியாளர், உங்களுக்கான தேர்வுகள் மற்றும் நீங்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.
நீங்கள் இயங்கலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானால் என்ன செய்வது?
நீங்கள் இயங்கலை வழி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருந்தால் அந்தச் சம்பவங்களைத் துல்லியமாகப் பதிவு செய்து, திரைநிலைப்படம் (screenshot), செய்திகள், URL இணைப்பு மற்றும் அதற்கான பட ஆதாரங்களைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
சில இயங்கலைத் தளங்கள் அவற்றின் சொந்த புகார் செய்வதற்கான இயங்கமைவைக் கொண்டுள்ளன. பகிரப்பட்ட செய்தியை குறிப்பிட்ட தளங்களில் எப்படிப் புகார் செய்வது என்று தெரிந்துகொண்டு புகார் செய்யுங்கள். நீங்கள் இப்படிச் செய்யும் பட்சத்தில் உங்களைப் பற்றிய ஒவ்வாத செய்திகள் நீக்கப்படலாம்.
அதோடு நீங்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். புகாரை எந்தக் காவல் நிலையத்திலும் அளிக்கலாம். காவல்துறை புகாருக்குத் தேவையான விபரங்கள் வருமாறு:-
- எப்பொழுது: எப்பொழுது நடந்தது? – சம்பவம்/சம்பவங்கள் நடந்த தேதி மற்றும் நேரம்.
- என்ன, எது மற்றும் எப்படி: என்ன சம்பவம் நடந்தது, எந்த இயங்கலைத் தளம், எப்படி நடந்தது மற்றும் எத்தனை முறை நடந்தது? – சம்பவம்/சம்பவங்களின் விபரங்கள்.
- யார்: இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டவர் யார்?
- பாதிப்பு: சம்பவத்திற்குப் பிறகு உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? மனச்சோர்வு, பயம், இன்னும் பல.
- ஏன்: ஏன் புகார் செய்யப்படுகிறது? பாதுகாப்புக்காக, காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்காக, இன்னும் பல.
காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை அரசு வழக்கு விசாரணை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும். சம்பந்தப்பட்ட நபர் குற்றஞ்சாட்டப்படுவாரா என்பதனை இந்த விசாரணை அலுவலகம் முடிவு செய்யும். போதுமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். இல்லாவிடில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
நீங்கள் மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திலும் (MCMC – Malaysian Communications and Multimedia Commission) புகார் கொடுக்கலாம். இயங்கலை அல்லது வேறு பல்லூடக ஆணைய அலுவலகத்தின் வாயிலாக இந்தப் புகாரை அளிக்கலாம். உங்கள் புகார் ஒரு குறிப்பு எண்ணோடு பதிவு செய்யப்படும். நீங்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதை முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு, பிறகு அந்தப் புகாரை இதனோடு சேர்த்து இணைத்துக் கொடுப்பது நல்லது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு நீங்கள் மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் அகப்பக்கத்தைப் பார்க்கவும்; https://www.mcmc.gov.my/en/make-a-complaint/complaint-circle
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாலியல் தொந்தரவு பற்றி நான் புகார் செய்ததால், நான் பணியாற்றிய நிறுவனம் என்னைப் பணி நீக்கம் செய்தால் என்ன செய்வது?
பாலியல் தொந்தரவுக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டிய காரணத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் தொழிற்துறை தொடர்பு இலாகாவிற்கு எழுத்துப் பூர்வமான புகாரை 60 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப நாங்கள் ஊக்குவிக்கிறோம். பாலியல் தொந்தரவு பற்றி போதுமான ஆதரவும் ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில், அரசாங்கம் இது தொடர்பான பயனான சட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க முடியும். (உதவி கோருதல் பிரிவைப் பார்க்கவும்)
நிலைமை மோசமாகி நான் வேலையை விட்டு விலகும் நிலை வந்தால் என்ன செய்வது?
நிலைமை மோசமான காரணத்தால், நீங்களே வேலையிலிருந்து விலகிக் கொள்ளும் நிலை வந்தால் (constructive dismissal), நீங்கள் அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை நிறுத்துவதற்கு நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும். ராஜினாமாக் கடிதத்தில் என்ன காரணத்திற்காகப் பணியிலிருந்து விலகுகிறீர்கள் என்பதற்கான காரணங்களைக் குறிப்பிடுங்கள். தொழிற்துறை தொடர்பு இலாகாவிலும் நீங்கள் புகார் செய்யலாம். நிறுவனம் கொடுத்த நெருக்குதல்களால் நீங்கள் வேலையிலிருந்து விலகியிருக்கும் ஒரு சூழலில், நீங்கள் பலவாறான முயற்சிகளை மேற்கொண்டும் பாலியல் தொந்தரவு நிற்கவில்லை என்பதனை நிரூபிக்க வேண்டும். (உதவி கோருதல் பிரிவைப் பார்க்கவும்)
நான் காவல்துறையில் புகார் செய்தால், குற்றமிழைத்தவரை நீதிமன்றத்தில் நிறுத்த காவல்துறை மற்றும் அரசுத்தரப்பு, எந்த சட்டத்தை உபயோகப்படுத்தும்?
தண்டனைச் சட்டத்தில் (குற்றவியல் சட்டம், Penal Code) சில பிரிவுகள் உள்ளன. காவல்துறை இந்த சட்டத்தை வைத்துப் பாலியல் தொந்தரவு பிரச்சனைகளைக் கையாளும். உதாரணத்திற்கு:-
- பிரிவு 354: ஒருவரை மானப்பங்கப்படுத்தும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல்.
- பிரிவு 377D: ஒருவரின் கண்ணியத்தைக் குலைத்தல்.
- பிரிவு 509: ஒருவரின் தன்மானத்தைக் குலைக்கும் நோக்கில் வார்த்தைகள் மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்துதல்.
தேவையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீங்கள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். நீங்கள் மௌனமாக இருந்தால், பாலியல் தொந்தரவுகளுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
பெண்கள் மட்டும்தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்களா?
இல்லை. ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஆண்கள்தான் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவுகளைக் கொடுக்கிறார்கள். ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு. அவ்வப்பொழுது ஆண்கள் மற்ற ஆண்களையும் பாலியல் தொந்தரவு செய்கின்றனர்.
ஒரு பாலியல் நடத்தை விரும்பத்தகாதது என்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?
பாலியல் தொந்தரவு என்பது பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்தே பார்க்கப்படுகிறது. உங்கள் நடவடிக்கை ஒருவருக்கு அசௌகரியத்தையும் அவமானத்தையும் உருவாக்குமானால் அது விரும்பத்தகாத நடத்தையாகும். உங்களுடைய நடத்தைக்கு ஒருவர் உற்சாகம் அளிக்கவில்லை என்றால் அல்லது அவர் உங்களைத் தவிர்த்தால் அல்லது மன வேதனைக்கு ஆளானால், இதுவே உங்களுடைய நடத்தை விரும்பத்தகாதது என்பதற்கான அறிகுறிகளாகும். ஒருவர் “வேண்டாம்” என்று வெட்ட வெளிச்சமாக மறுத்துக்கூறத் தேவையில்லை.
ஒரு நகைச்சுவைப் பேச்சு பாலியல் தொந்தரவாகிவிடுமா என்ன?
ஒரு சிறிய நகைச்சுவையான உரையாடல் தொந்தரவாகிவிடாது என்றாலும் அது “விரோத சூழலுக்கு” வித்திட்டுவிடும். இது போன்ற சூழலில் ஒரு “நியாயமான ஆள்” அதனை ஒரு அவமதிப்பாக எடுத்துக்கொள்வாரா என்பதுதான் இங்கு கேள்வி. சிறு சம்பவங்கள் கூட “விரோதமான சூழலை” உருவாக்கி அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அவர் கல்வி கற்கும் மற்றும் பணியாற்றும் சூழலில் இடையூறுகளை ஏற்படுத்திவிடும். உதாரணத்திற்கு, தன்னுடைய பாலியல் சில்மிஷங்களைப் பொறுத்துக்கொள்ளாவிடில், பதவிக்கு ஆபத்து வரும் என்று ஒரு முதலாளி தன் தொழிலாளியிடம் கூறுதல்.
ஏன் சிலர் மற்றவர்களுக்குப் பாலியல் தொந்தரவுகளைக் கொடுக்கின்றனர்?
பெரும்பாலோர் உணர்ந்தோ உணராமலோ, தன்னுடைய அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் வெளிக்காட்டுவதற்காக, மற்றவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். இன்னும் சிலர் தன்னையொத்தவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தன் சகாக்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர்.
நாம் பாலியல் தொந்தரவை நிறுத்துவது எப்படி?
நீங்கள் பாலியல் தொந்தரவை கீழ்கண்ட வழிகளில் நிறுத்த முடியும்:-
இந்தத் தகவலை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
- இது போன்ற பிரச்சனையை எதிர்நோக்குவோருக்கு ஆதரவு தாருங்கள். எதிர்ப்புக் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.
- ஒருவர் பாலியல் தொந்தரவு செய்யப்படுவதை நீங்கள் காண நேரிட்டால், தைரியமாக அவர்களுக்குச் சாட்சி சொல்லுங்கள்.
- “இது சகஜம் அல்லது “நகைச்சுவை சமாச்சாரம்” என்றெண்ணி பாலியல் தொந்தரவைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர். எதிர்ப்புக் குரல் கொடுத்து பாலியல் தொந்தரவை நிறுத்த உதவுங்கள்.
- பாலியல் தொந்தரவை நிறுத்துவதற்கான உங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
- பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் 2022 தொடர்பான எந்தவொரு பிரச்சாரத்தையும் ஆதரிக்கவும்.
பாலியல் தொந்தரவு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
