குடும்ப வன்முறை என்றால் என்ன?
குடும்ப வன்முறை என்பது, ஒருவருக்கு எதிராக அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவர் மேற்கொள்ளும் வன்முறையாகும். வன்முறையைக் கையாளுபவர், துன்புறுத்துபவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்வார்.
குடும்ப வன்முறை சட்டம் 1994 (Domestic Violence Act 1994) அமலுக்கு வந்த பிறகு, குடும்ப வன்முறை ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. அது ஒரு சமுதாயப் பிரச்சனை ஆகும். தண்டனைச் சட்டத்தின்படி அது ஒரு குற்றமாகும். குடும்ப வன்முறை சட்டம் 1994 கொண்டு வரப்படுவதற்கென மலேசியாவில் உள்ள பெண் அமைப்புக்கள் ஒரு தசாப்தமாக அது தொடர்பான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தன.
இப்பொழுது, குடும்ப வன்முறைக்கு ஆளானவர்கள் காவல்துறை, சமூகநல இலாகா, மருத்துவமனை மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மூலமாக உதவிகளைப் பெற முடிவதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடிகிறது. குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தாலும், ஆண்கள், முதுமை நிலையில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சிறார்களும் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
குடும்ப வன்முறை வகைகள் என்ன?
குடும்ப வன்முறை நிறைய வழிகளில் நிகழ்கிறது. அவை வருமாறு:
- உடல் ரீதியான வன்முறை எ.கா: ஒருவரை அடித்தல், தள்ளுதல், குத்துதல், அறைதல், உதைத்தல், பொருட்களை வீசுதல் அல்லது கழுத்தை நெரித்தல்.
- மன ரீதியான வன்முறை எ.கா: நேரடியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கில் அல்லது மதிப்பற்றவர் என்று ஒருவரை உணர்த்தும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்.
- பாலியல் துன்புறுத்தல் எ.கா: ஒருவரை அடக்க அல்லது அவமானப்படுத்த பாலியலைப் பயன்படுத்துதல். பாதுகாப்பற்ற பாலியல் நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர் பங்கேற்க விரும்பாத பாலியல் நடைமுறைகளை மேற்கொள்வதாக மிரட்டுதல்.
- தனிமைப்படுத்துதல் எ.கா: ஒருவரின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது அவர் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைப் பார்ப்பது அல்லது பேசுவதைத் தடுத்தல்.
- அச்சுறுத்தல்கள் எ.கா. ஒரு நபர் அல்லது குழந்தைகள் அல்லது குடும்பத்தின் செல்லப்பிராணியை காயப்படுத்துதல், கடத்துதல் அல்லது தீங்கு விளைவிப்பதாக மிரட்டுதல். அல்லது தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்துதல்.
- பொருளாதார வன்முறை எ.கா: ஒருவரின் பண சுதந்திரம் அல்லது பாதுகாப்பைக் கட்டுப்படுத்துதல். ஒருவரின் வீட்டுத் தேவைகளுக்கான பணத்தைக் கொடுக்க மறுத்தல் அல்லது தடுத்து வைத்தல் அல்லது அவரின் வருமானத்தை அபகரித்துக்கொள்ளுதல்.
- பின்தொடர்வது எ.கா: தொடர்ச்சியாகத் துன்புறுத்துவது அல்லது அச்சுறுத்துவது. பாதிக்கப்பட்டவரின் வீடு அல்லது பணியிடத்தைப் பின்தொடர்தல் அல்லது காட்டிக்கொடுத்தல், தொலைபேசி அழைப்புகள் மூலம் தொந்தரவு கொடுத்தல், குரல் மடல் (voicemail), புலனம் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்களின் மூலமாக மிரட்டுதல்.
குடும்ப வன்முறை எப்படி நிகழ்கிறது?
வன்முறை சுழற்சி
வன்முறை சுழற்சி என்பது, ஓர் உறவு முறையில் எப்படி அன்பும் வன்முறையும் ஒரே காலகட்டத்தில் இருக்கிறது மற்றும் அதன் உட்சிக்கல்கள் ஆகியவற்றை விளக்குவதற்காக உருவாக்கப்பட் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். வன்முறை மிகுந்த ஓர் உறவிலிருந்து விடுபட்டு வெளியேறுவதை விட வன்முறை சுழற்சியை உடைத்தெறிவது இன்னும் சிக்கலானது. குடும்ப வன்முறையைத் தன் வாழ்வில் எதிர்கொண்டிராத ஒருவர் இதனைப் புரிந்துகொள்ள இந்த ‘வன்முறை சுழற்சி’ உதவுகிறது.
வன்முறை சுழற்சி 3 கட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது: (1) மன அழுத்தம் உருவாகும் கட்டம், (2) வெடித்தல்/மிகவும் மோசமாகத் துன்புறுத்தும் கட்டம், மற்றும் (3) மனம் வருந்துதல்/தேனிலவுக் கட்டம். யாரும் குறுக்கிடாவிடில் வன்முறை தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழ ஆரம்பித்துவிடும்.
கட்டம் 1: மன அழுத்தம் உருவாகுதல்
இந்தக் கட்டத்தில் சீற்றம் குறைவான வன்முறையே வெளித்தெரியும். வன்முறைக்கு இலக்கானவர் மன அழுத்தத்திற்கு உள்ளாவார். வன்முறையைத் தடுக்கும் பொருட்டு தன் துணைவரோடு ‘நயமாக’ நடந்துகொள்வார். சிறு சிறு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் இவர் வன்முறையாளரின் நடவடிக்கைகளுக்குத் தன்னையே குற்றம் சாட்டிக்கொள்ளவும் கூடும். அளவுக்கு அதிகமான மன அழுத்தம், கடந்த காலங்களில் வன்முறைக்கு இட்டுச் சென்றிருந்தாலும் கூட, பாதிக்கப்பட்டவர் அதை மறுக்கும் மனநிலையிலேயே இருப்பார்.
கட்டம் 2: வெடித்தல்/மிக மோசமாகத் துன்புறுத்துதல்
துன்புறுத்துபவரின் கோபம் திடீரென்று அதிகரிக்கும். வன்முறை காரணமாக மோசமான காயங்கள் ஏற்படலாம். இப்படி ஒரு அசம்பாவிதம் தனக்கு நிகழ்ந்துவிட்டது என்று பாதிக்கப்பட்டவர் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோகலாம். பெரும்பாலும் வன்முறைக்கு இலக்கானவர் மற்றும் வன்முறையாளர் இருவருமே, வன்முறையாளர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்ற ஒரு எண்ணத்தில் இருப்பர்.
பெரும்பாலும் இந்தக் கட்டத்தில், வன்முறை சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் காவல்துறை அல்லது சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யக்கூடும்.
கட்டம் 3: மனம் வருந்துதல்/தேனிலவு
வன்முறைக்கு மனம் வருந்தும் வன்முறையாளர் தன்னைத் திருத்திக்கொள்வதாக வாக்கு கொடுப்பார். பாதிக்கப்பட்டவரிடம் அன்பாக நடந்து கொண்டு, மன்னிப்பு கூறும் விதமாக அவருக்குப் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பார். தன்னுடைய வன்முறைக்குப் பாதிக்கப்பட்டவரே காரணம் என்று குற்றஞ்சாட்டி தன்னுடைய செய்கையை நியாயப்படுத்துவார். பாதிக்கப்பட்டவருக்குத் தன் மீது குற்ற உணர்வையும் அனுதாபத்தையும் வரவழைப்பார். பாதிக்கப்பட்டவருக்கு வன்முறையாளரின் மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கும். வன்முறையாளரின் தற்காலிக நடத்தை மாற்றம், அந்த உறவில் நிலைத்திருக்கலாம் என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்டவரிடையே வலுப்படுத்தும்.
பெரும்பாலும் இந்தக் கட்டத்தில், பாதிக்கப்பட்டவர் தான் ஏற்கெனவே அளித்த புகாரை மீட்டுக்கொள்ளக்கூடும்.
வன்முறை அடங்கிய எல்லா உறவுகளிலும் இந்த வன்முறை சுழற்சி ஏற்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம். இந்த மூன்று கட்டங்களும், அதன் ஒவ்வொரு கட்டத்திற்குமான தீவிரத்திலும், கால அளவிலும் வேறுபடும்.
வன்முறை சுழற்சியை உடைத்தல்
வன்முறை சுழற்சியை உடைப்பது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் கடினமான படியாகும்.
வன்முறைக்கு இலக்கான ஒருவர் அதன் சுழற்சியை உடைக்க நினைப்பதற்கு முன்பதாக, தான் வன்முறையான ஓர் உறவில் நிலைத்திருக்கும் வரை அந்த வன்முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றும், அது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் சேதத்தை உருவாக்கும் என்றும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வன்முறையிலிருந்து விடுபட்ட ஒரு வாழ்க்கை, ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் அதுவே தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மேலானது என்பதை அவர் உணர வேண்டும். இதில் அவருக்கு மன மற்றும் பொருளாதார ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது.
அப்படித் துன்புறுத்துபவர் இந்த வன்முறை சுழற்சியை உடைக்க நினைத்தால், தன்னுடைய நடத்தையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக தனக்கு உள்ள மனப்போக்கை மாற்றிக்கொள்ளுதல், தன்னுடைய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்துதல், தொடர்புத் திறனை மேம்படுத்துதல் (எ.கா: செவிமடுத்தல் மற்றும் பேசுதல்) மற்றும் உறவு முறையில் கட்டாயப்படுத்துதலையும் வன்முறையையும் பயன்படுத்தாதிருத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
ஒருவர் ஏன் வன்முறையைக் கையாளுகிறார்?
ஆதிக்கம் செலுத்துதல் & கட்டுப்படுத்துதல்
வன்முறையாளர் சுயநலம் கொண்டவராக இருக்கலாம். அவர் சதா தன்னைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். மற்றவருடைய உணர்வுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. வன்முறையைப் பிரயோகிப்பதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை அடக்குவார். எல்லா முடிவுகளையும் அவரே எடுப்பார். தன்னுடைய துணையை மிக மோசமாக நடத்துவார்.
குடும்பக் காரணங்கள்
வன்முறையைக் கையாளும் ஒருவர், வன்முறை நிறைந்த ஒரு குடும்ப சூழலிலேயே வளர்ந்திருக்கக்கூடும். தன்னுடைய சிறார் பருவத்தில் அவர் வன்முறையை அனுபவிக்க நேர்ந்திருக்கலாம். தன் குடும்பத்தினர் மூலமாக வன்முறையை அவர் கற்றுக் கொண்டிருக்கக் கூடும்.
சமூகக் காரணங்கள்
துன்புறுத்துபவர், ஆண் பெண் தொடர்பான தன்னுடைய சொந்த கருத்துருவங்களைக் கொண்டிருக்கலாம். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று அவர் நம்பக்கூடும். வேலைக்குப் போவது போன்ற விஷயங்களுக்கு பெண்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பர்.
மன ரீதியான காரணங்கள்
துன்புறுத்துபவர்கள் மன ரீதியான பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கலாம். கடுமையான மனநிலை மாற்றங்கள், பொய் பேசுதல், பாலியல் பிரச்சனைகள், போதைப்பொருள் உபயோகித்தல், தற்கொலை எண்ணம் போன்ற ஆளுமைச் சிதைவுக்கு உள்ளாகியிருக்கலாம்.
குடும்ப வன்முறையால் யார், எப்படி பாதிப்புக்குள்ளாகிறார்கள்?
- சுயமதிப்பு குறைதல் மற்றும் தன்னம்பிக்கையின்மை
- மனம் முறிந்துபோதல்
- அவமானம், குற்ற உணர்வு மற்றும் பயம்
- தனிமைப்படுத்திக்கொள்ளுதல்
- மனச்சோர்வு அல்லது தற்கொலை எண்ணங்கள்
- பயம், பாதுகாப்பின்மை மற்றும் சார்ந்திருத்தல்
- விரக்தி மற்றும் பதட்டம்
- பள்ளியில் பிரச்சனை (பள்ளிக்கு மட்டம் போடுதல், பாடத்தில் குறைந்த புள்ளிகள் எடுத்தல் போன்றவை)
- ஆழ்ந்த கோபம் (அது வன்முறைக்கு இட்டுச் செல்லும்)
- குடும்ப முறிவு
- சட்டத்தால் தண்டிக்கப்படுதல்
- பிரிந்து போதல்/விவாகரத்து
குடும்ப வன்முறை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
