கற்பனையும் உண்மை நிலையும்
கற்பனை: என் நண்பன்/தோழி என் மீது அக்கறையும் காதலும் கொண்டுள்ள காரணத்தால் எப்பொழுதும் பொறாமைப்படுகிறார்.
உண்மை நிலை: இலேசான பொறாமை உணர்வு எல்லா உறவுகளிலும் பொதுவானதுதான். ஆனால், பொறாமையின் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்துதலும் அடக்குமுறையும் நிகழும்பொழுது, அது நீங்கள் நச்சு உறவில் இருப்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், யாரோடு இருக்கிறீர்கள் என்று எல்லாவற்றையும் உங்களிடம் அறிவிக்க வேண்டும் என்று உங்கள் நண்பன்/தோழி கட்டாயப்படுத்தினால் அல்லது நீங்கள் வேறு நண்பர்களோடு நேரத்தைச் செலவிடும்பொழுது ஆத்திரமடைந்தால், அது அவரின் பாதுகாப்பின்மை உணர்வையும் உங்களை அடக்க வேண்டும் என்ற வேட்கையையும் காட்டுகிறது; அது அன்பின் அறிகுறியல்ல. நம்பிக்கையும் மரியாதையும் மட்டுமே அன்பின் அறிகுறிகள்; அளவுக்கு மீறிய பொறாமை அல்ல.
கற்பனை: என்னுடைய இணையை நான் நேசித்தால், அவரோடு நான் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
உண்மை நிலை: ஆரோக்கியமான உறவில், இருபாலரும் அவரவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவரவரின் வரையறைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்வர். பாலுறவைத் தவிர்த்து, உங்கள் காதலையும் பாசத்தையும் வெளிப்படுத்த வேறு வழிகள் நிறைய உண்டு. உங்கள் உறவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் பாலுறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் பாலுறவுக்கு இணங்காமல் இருந்து, உங்கள் இணை உங்களை மிரட்டிப் பணிய வைத்தால் அல்லது பாலுறவுக்குக் கட்டாயப்படுத்தினால் அது கற்பழிப்பு ஆகும்.
கற்பனை: என் நண்பன்/தோழி அவரைக் கட்டுப்படுத்த முடியாததால்தான் என்னோடு வலுக்கட்டாயமாகப் பாலுறவு கொள்கிறார்.
உண்மை நிலை: உங்கள் நண்பன்/தோழி தன் பாலியல் இச்சையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். கட்டுப்படுத்த முடியாததால்தான் பாலியல் உறவு கொள்கிறார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சாக்குப்போக்கு. நீங்கள் மறுப்பு தெரிவித்தும் உங்கள் நண்பன்/தோழி உங்களுடன் பாலுறவு கொள்ள உங்களைக் கட்டாயப்படுத்தினால், அது பாலியல் தாக்குதல் ஆகும். நீங்கள் உடனடியாக உதவியை நாட வேண்டும். காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வேண்டும்.
கற்பனை: முதன்முறையாக பாலியல் உறவு கொள்ளும்பொழுது நான் கருத்தரிக்க முடியாது.
உண்மை நிலை: பாதுகாக்கப்படாத பாலியல் உறவு அல்லது கருத்தடை முறிவு (ஆணுறையை சரியாகப் பயன்படுத்தாதது அல்லது ஆணுறைக் கசிவு) ஆகியவற்றின் காரணமாக, முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும்பொழுதும் நீங்கள் கருத்தரிக்கக்கூடும். யோனித் திறப்புக்கு அருகிலுள்ள வெளிப் பகுதியில் விந்து வெளியேறினாலும் கரு உருவாகலாம். இதற்கென அவசரக் கருத்தடை மாத்திரைகள் உண்டு. ஆனால், பாலுறவு நிகழ்ந்த 72 மணி நேரத்திற்குள் அவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும், இதனை நீண்ட காலத்திற்குக் கருத்தடை சாதனமாகப் பயன்படுத்திவிடக்கூடாது. அவசரக் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு உட்கொண்டு வந்தால் உடல் நலம் பாதிக்கப்படும்.
கற்பனை: நான் ஒருவருடன் நேச சந்திப்பில் உள்ளேன். என்னுடைய எல்லா நேரத்தையும் அவரோடுதான் நான் செலவழிக்க வேண்டும்.
உண்மை நிலை: ஆரோக்கியமான உறவில், உங்களுக்காகவும் உங்கள் வாழ்வில் உள்ள ஏனையோருக்காகவும் நேரம் செலவழிக்கும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நண்பன்/தோழி அமைவது முக்கியம். உங்களுக்கான எல்லை மீறப்படாதபொழுது நீங்கள் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் நண்பன்/தோழிக்கென தனியாக நேரம் ஒதுக்குவதும் நன்மை பயக்கும்.
கற்பனை: எங்களுக்குள் விவாதங்கள் ஏற்படுவது ஒரு கெட்ட அறிகுறி.
உண்மை நிலை: எல்லா உறவுகளிலும் விவாதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. உங்கள் நண்பன்/தோழியோடு விவாதங்கள் ஏற்படுவதால் அது ஆரோக்கியமற்ற அல்லது வன்முறை உறவு என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், விவாதங்கள் அடிக்கடி நிகழ்ந்து, பின் அது வன்முறைக்கு இட்டுச் செல்லுமானால், நீங்கள் ஆரோக்கியமற்ற ஓர் உறவில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக அது ஆகிவிடும். ஆகையால், உங்களுக்கு உதவக்கூடிய ஒருவரிடம் நீங்கள் இது குறித்து பேச வேண்டும்.
கற்பனை: பல தடவை உறவை முறித்துக்கொண்டு பின் மீண்டும் இணைந்துகொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.
உண்மை நிலை: பல முறை உறவை முறித்துக்கொண்டு பின் மீண்டும் இணைந்து கொள்வது என்பது ஆரோக்கியமற்ற உறவுக்கு ஓர் அறிகுறியாகும். உறவு முறிந்துபோன பிறகு, நீங்கள் மீண்டும் உங்கள் நண்பன்/தோழியோடு இணைந்துகொள்வதற்கு என்ன காரணம் என்று ஆராய வேண்டும். நீங்கள் ஆரோக்கியமற்ற அல்லது வன்முறை உறவில் இருப்பீர்களேயானால் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே உத்தமம்.
பதின்மர் &நேச சந்திப்பு வன்முறை தொடர்பான பயனான தகவல்களைக் காணவும்.
