கற்பழிப்பு என்றால் என்ன?

கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக மற்றும் அவரின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ளுதல் ஆகும். அது ஒரு குற்றம் மட்டுமல்லாது ஒரு பெண்ணின் உடலுக்கு எதிரான அத்துமீறலும் ஆகும். அது பாலியல் உறவு அல்ல, மாறாக ஒரு பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் வெளிப்படுத்தப்படும் வன்முறை, ஆத்திரம் மற்றும் அதிகாரம்.  கற்பழிக்கப்படும் பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிர்ச்சி மற்றும் வேதனைகளுக்கு உள்ளாகிறார்.  துரதிருஷ்டவசமாக, கற்பழிப்புக் குற்றத்தைத் தூண்டியதாகப் பெரும்பாலும் அந்தப் பெண் மீதே பழி சுமத்தப்படுகிறது.

இந்தச் சமுதாயம் பெண்கள் மீது கொண்டிருக்கும் மனப்பாங்கு மற்றும் புரிதல் காரணமாகவே கற்பழிப்பு நிகழ்கிறது.  பெண்கள் பாலியல் பொருளாக நடத்தப்படுகிறார்கள்.  ஆண்களோ தங்கள் விருப்பப்படி நடப்பதற்கு உரிமை உள்ளவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். யார் மீதும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறையை மேற்கொள்ளக்கூடாது.  ஒரு பெண் கற்பழிக்கப் பட்டிருந்தால் அதற்கு அவர் மீதே பழி சுமத்தக்கூடாது.

கற்பழிப்பின் வகைகள்

கற்பழிப்பு மற்றும் சட்டப்பூர்வமான கற்பழிப்பு (Statutory Rape)

கற்பழிப்பு என்பது தன் மனைவி அல்லாத ஒரு பெண்ணோடு, அவரின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ளுதல் ஆகும்.  சட்டப்பூர்வ கற்பழிப்பு என்பது 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பெண்ணோடு, அவரின் சம்மதத்தோடு அல்லது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வது. (தண்டனைச் சட்டம் பிரிவு 375 மற்றும் 376)

கூடாப் பாலுறவு (Incest)

அப்பா, தாத்தா, மாமா, சகோதரர் மற்றும் பிற உறவினர்கள்,  சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி  உறவு முறையில் உள்ளவர்களுக்கு இடையேயான பாலியல் உறவுகள், கூடாப் பாலுறவு என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் கூடாப் பாலுறவு அதிகம் நிகழ்வது சிறார் பாலியல் கொடுமைகள் மூலமாகத்தான்.  சிறார் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யும் வயது முதிர்ந்த ஒருவராலேயே இது நிகழ்கிறது.  வயதில் முதிர்ந்த ஒருவர் கூடாப் பாலுறவு கொள்ளும்பொழுது, அது சம்மதத்தோடு நடந்திருந்தாலும் கூட அவர் குற்றம் புரிந்தவராகக் கொள்ளப்படுவார்.  (தண்டனைச் சட்டம் பிரிவு 376A மற்றும் 376B)

திருமண உறவில் கற்பழிப்பு (Marital Rape)

ஒரு பெண்ணை அவரைத் திருமணம் புரிந்தவரே கற்பழிப்பது பற்றி மலேசிய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.  கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்றிருந்தால், அல்லது சட்ட ரீதியாகப் பிரிந்திருந்தால் அல்லது தன்னுடைய மனைவியோடு உடலுறவு கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் ஒழிய, மனைவியின் சம்மதம் இல்லாமலேயே கணவன் அவரோடு உடலுறவு கொள்வது மலேசியாவில் குற்றம் கிடையாது.  திருமண உறவில் நிகழும் கற்பழிப்பை மலேசிய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும் கூட, தண்டனைச் சட்டம் பிரிவு 375A-ன் படி மனைவியிடம் உடலுறவு கொள்வதற்காக அவரைக் காயப்படுத்தும், மிரட்டும் கணவன்மார்களுக்கு 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். (தண்டனைச் சட்டம் பிரிவு 375A)

துருதிருஷ்டவசமாக, திருமணத்திற்குச் சம்மதம் என்பது நிபந்தனையற்ற உடலுறவுக்கான சம்மதமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமண ஒப்பந்தத்தில் புகும் ஒரு கணவனுக்குத் தன்னுடைய மனைவியின் உடல் மீது தானாகவே உரிமை ஏற்பட்டுவிடுவதால், அவர் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்த முடியாது அல்லது கூடாது.  மனைவி சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் கூட கணவன் அவரை வற்புறுத்தி உடலுறவு கொள்ளலாம். ஓர் அந்நியரால் கற்பழிக்கப்படுவதை விட சொந்த கணவனால் கற்பழிக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கற்பழிப்பால் விளையும் பாதிப்புகள்

கற்பழிப்பில் அடங்கியுள்ள வன்முறைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவருக்குச் சொல்லொணா அதிர்ச்சிகளை விட்டுச் செல்லும்.  கற்பழிப்பு பற்றி உள்ள தப்பான அபிப்பிராயங்களால், கற்பழிக்கப்பட்டவரை நோக்கும் விதம், அவருடைய அதிர்ச்சியையும் வேதனையையும் இரட்டிப்பாக்கும். கற்பழிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்படும் அதிர்ச்சிகளை இரண்டு கட்டங்களாகப் புரிந்துகொள்ளலாம் – கற்பழிப்பு நடந்தவுடனேயே ஏற்படும் அதிர்ச்சி மற்றும் அதற்குப் பிறகு நீடித்திருக்கும் அதிர்ச்சி.  கற்பழிப்பு பாதிப்புகள் வருமாறு:-

உடல் ரீதியான பாதிப்புகள்
  • பெண்ணுறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் காயங்கள்
  • சிராய்ப்புகள்
  • சோர்வு மற்றும் தூக்கமின்மை
  • குமட்டல் மற்றும் பதற்றத்தால் வரும் தலைவலி
  • வயிற்று வலி
  • வேண்டாத கருத்தரிப்பு
  • பாலியல் தொற்றுகள் மற்றும் நோய்கள்
மன ரீதியான பாதிப்புகள்
  • உடல் காயங்கள் பற்றிய பயம்
  • ஆத்திரம், தன்னையே நொந்துகொள்ளுதல் மற்றும் கையறுநிலை
  • தலைக்குனிவு, அவமானங்கள் மற்றும் குற்றவுணர்ச்சி
  • மனநிலை மாறுதல் மற்றும் ஏற்ற இறக்கமான உணர்ச்சிகள்
உளவியல் சார்ந்த பாதிப்புகள்
  • நிகழ்ந்த பயங்கரங்கள் மனக்கண் முன் நிழலாடுதல்
  • மனச்சோர்வு மற்றும் மனக்கவலை
  • தற்கொலை எண்ணங்கள் அல்லது முயற்சி