கற்பனையும் உண்மை நிலையும்
கற்பழிப்பு தொடர்பான கற்பனைகள் பிரச்சனையின் தீவிரத்தை அதிகரித்து, கற்பழிக்கப்பட்டவரையே சமுதாயம் குற்றம் சொல்லும் ஒரு நிலையை உருவாக்குகிறது. அதை விட மோசமானது கற்பழித்தவனை சமுதாயம் கண்டுகொள்ளாமல் இருப்பதேயாகும்.
கற்பனை: அழகான இளம் பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்படுகின்றனர்.
உண்மை நிலை: குழந்தைகளிலிருந்து முதியவர் வரை எல்லா வயதினரும் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் ஒருவரின் தோற்றம் முக்கிய விஷயமே இல்லை. பலவீனமான சூழலில் உள்ள ஒருவரையே காமுகர்கள் பாலியல் தாக்குதல்களுக்குக் குறி வைக்கின்றனர். வாய்ப்பு உருவாகும் பட்சத்தில் காமுகன் கற்பழிக்கத் துணிகிறான். இதற்கும், கற்பழிக்கப்படுவோரின் தோற்றத்திற்கும், வயதிற்கும் சம்பந்தமில்லை.
கற்பனை: ஆபாச உடையணியும் பெண்கள் மற்றும் ஆண்களோடு சுற்றித்திரியும் பெண்களே ஆண்களைக் கற்பழிக்கத் தூண்டுகின்றனர்.
உண்மை நிலை: பலவீனமான சூழல் மற்றும் இருக்கும் இடத்தைப் பொருத்தே ஒரு காமுகன் கற்பழிக்கிறான். இங்கு அவன் அவர்களுடைய தோற்றம் மற்றும் நடத்தையைக் கருத்தில் கொள்வதே இல்லை. கற்பழிப்புக் குற்றம் சுமத்தப்பட வேண்டியவர் கற்பழித்தவர் மட்டுமே. சிறார், வயதில் முதிர்ந்த, அடக்கமான உடையணிந்த, முக்காடு போட்ட பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் எப்படி உடையணிகிறார் அல்லது எப்படி நடந்துகொள்கிறார் என்பதற்கும் கற்பழிப்புக்கும் சம்பந்தமில்லை. இவை யாவும் பெண் மீது பழி போடுவதற்காக கற்பழித்தவன் சொல்லும் சாக்குப்போக்குகள்.
கற்பனை: கற்பழிப்பு என்பது கட்டுக்கடங்காத காம இச்சையாகும். பெரும்பாலான கற்பழிப்புகள், காமுகன் தன்னுடைய வேட்கையைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் விளையும் தன்னிச்சையான செயலே.
உண்மை நிலை: பெரும்பான்மையான கற்பழிப்பு சம்பவங்கள் திட்டமிடப்பட்டவை. கற்பழிப்பு என்பது காம இச்சை சம்பந்தப்பட்டது அல்ல. அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்செயலேயன்றி ஆசை உணர்ச்சியால் வரும் எதிர்பாராத செயல் அல்ல. அதிகாரம், ஆத்திரம், ஆக்கிரமிப்பு போன்றவற்றினால் தூண்டப்பட்டே ஒருவன் கற்பழிக்கிறான் ஒழிய காம இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காக அல்ல.
கற்பனை: பெண்கள் பெரும்பாலும் கற்பழிக்கப்பட்டதாகப் பொய் சொல்வர்.
உண்மை நிலை: கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பெண்கள் பொய் சொல்வது கிடையாது. வெறும் 2%-3% பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டதாகத் பொய்த் தகவல்கள் கொடுப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இது மற்ற குற்றங்களிலிருந்து பெரிதாக வேறுபடுவதாகத் தெரியவில்லை. உண்மையில், 10 கற்பழிப்பு சம்பவங்களில் வெறும் 1 மட்டுமே புகார் செய்யப்படுவதாகவும் அந்த எண்ணிக்கையில் 10-ல் ஒரு புகார் மட்டுமே நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன.
கற்பனை: பெரும்பாலான பெண்கள் அந்நியர்களாலேயே கற்பழிக்கப்படுகின்றனர்.
உண்மை நிலை: சிறு விழுக்காடு கற்பழிப்பு மட்டுமே அந்நியர்களால் நிகழ்த்தப்படுவதாகக் காவல்துறை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 90% சம்பவங்களில் கற்பழித்தவன் பெண்ணுக்கு அறிமுகமானவனே. பெரும்பாலான கற்பழிப்பு சம்பவங்களில் கற்பழித்தவன் பெண்ணுக்குப் பழக்கமானவன், நண்பன் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவன்.
கற்பனை: பெரும்பாலான கற்பழிப்பு சம்பவங்கள் இருண்ட சந்துகள், வெறிச்சோடிய பகுதிகள் மற்றும் ஆபத்தான இடங்களில் நிகழ்கின்றன.
உண்மை நிலை: 70% கற்பழிப்புகள் வீடுகளிலும் இதர கட்டிடங்களிலும் நிகழ்வதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இரவு நேரங்களில், அமைதியான தெருக்களில், அல்லது விளக்கொளி குறைவான இடங்களில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றாலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட இடங்களிலேயே பெண்கள் பெரும்பாலும் கற்பழிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.
கற்பனை: கணவன் தன் மனைவி மீது பாலியல் வன்முறையை மேற்கொள்வது நடக்காத ஒன்று.
உண்மை நிலை: ஆணும் பெண்ணும் திருமண மற்றும் சமூக உறவு மூலமாக இணைந்திருந்தாலும் கூட, ஒரு பெண் பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்காத சூழலில் அது பாலியல் வன்முறையே. திருமண பந்தத்தில் நிகழும் கற்பழிப்புக்கு எதிராக சில நாடுகளில் சட்டங்கள் உள்ளன. குடும்ப வன்முறைக்கு ஆளாகும் நிறைய பெண்கள், தங்கள் திருமண உறவுகளில் பாலியல் வன்முறைக்கும் ஆளாகியுள்ளனர். மலேசியாவில் ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகக் காயப்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது.
கற்பனை: ஒரு பெண் உண்மையிலேயே விரும்பினால் கற்பழிப்பைத் தடுக்க முடியும்.
உண்மை நிலை: ஒரு பெண் கற்பழிக்கப்படும்பொழுது உருவாகும் பயம், அதிர்ச்சி மற்றும் கற்பழிப்பவன் அச்சுறுத்தி, பலவந்தப்படுத்தும் பொழுது எதிர்த்தால் அவன் தனக்கு அதிக காயங்களை விளைவிக்கக்கூடும் என்ற அச்சத்தில் எதிர்த்துப் போராடுவதில்லை. கற்பழிப்பு உயிருக்கு ஆபத்தான ஒரு குற்றம். ஆகையால் தான் கற்பழிக்கப்படும்பொழுது தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு பெண் என்ன செய்தாலும் அது சரியான நடவடிக்கையே.
கற்பனை: கற்பழிக்கப்பட்ட ஒருவர் வெறித்தனமாக நடந்துகொள்வார்.
உண்மை நிலை: கற்பழிக்கப்பட்ட பெண், தான் எதிர்கொண்ட தாக்குதல்களின் விளைவாக கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துவார். அவர் மௌனம் காத்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடும், அல்லது வெறிபிடித்தது போல் செயல்படலாம். அல்லது இயல்புநிலையிலேயே இருக்கலாம். சிரிப்பது, ஆத்திரப்படுவது, எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது, அல்லது அதிர்ச்சி போன்ற உணர்வு அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகலாம். கற்பழிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றனர். கற்பழிக்கப்பட்டவர், மன மற்றும் உளவியல் ரீதியாக அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதால் அவர் குறிப்பிட்ட உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் கற்பழிப்பு நடந்த சில காலங்களுக்குப் பிறகே, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் கற்பழிக்கப்பட்டதை உங்களிடம் கூறுவார். அவர் சொல்வதைச் செவிமடுத்து அவருக்கு ஆதரவளிக்கவும்.
கற்பழிப்பு தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
