மலேசியாவில் சட்டங்கள்
கற்பழிப்பு தொடர்பான சட்டங்கள்
தண்டனைச் சட்டம் (Penal Code)
தண்டனைச் சட்டம் பிரிவு 375 மற்றும் 376-ன் கீழ், கற்பழித்ததாகக் கூறப்படும் ஒரு ஆண், கீழ்குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்தால் அவருக்கு 20 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். கசையடியும் கொடுக்கப்படலாம்.
அ) பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக;
ஆ) பெண்ணின் சம்மதம் இல்லாமல்;
இ) பெண்ணின் சம்மத்தோடு, ஆனால், அந்தப் பெண் அல்லது வேறு யாருக்காவது மரணம் அல்லது காயம் விளைவிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தை உருவாக்கி அந்த சம்மதத்தைப் பெறுவது. அல்லது பெண்ணிடம் தவறான கருத்துகளை முன் வைத்து பெறப்பட்ட சம்மதம். அளிக்கப்பட்ட தவறான கருத்துகளால்தான் பெண் சம்மதம் தெரிவித்திருக்கிறாள் என்று சம்பந்தப்பட்ட ஆணுக்கு தெரியும் அல்லது அவ்வாறு நம்புவதற்கான காரணங்கள் உள்ளன;
ஈ) தான் அந்தப் பெண்ணின் கணவன் இல்லை என்று ஆணுக்குத் தெரிந்த பின்பும் பெண்ணின் சம்மதத்தோடு அந்த ஆண் உடலுறவு கொள்ளுதல் மற்றும் தன்னோடு இருப்பவர் வேறு ஒரு ஆண் என்று அந்தப் பெண் நம்பி சம்மதம் தெரிவித்தல், அல்லது தான் சம்மதம் தெரிவித்தவர் தன்னை சட்டப்பட்டி திருமணம் செய்தவர் என்று பெண் நம்புதல்;
உ) பெண்ணின் சம்மதத்தோடு, ஆனால் சம்மதம் அளித்த நேரத்தில், அவருடைய சம்மதத்தின் தன்மை மற்றும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று பெண் அறியாதிருத்தல்;
ஊ) பெண்ணோடு தனக்குள்ள தொழில்முறை உறவுகள், அல்லது வேறு நம்பிக்கைக்குரிய உறவு முறைகளைப் பயன்படுத்தி தன்னுடைய அதிகாரத்தை பெண்ணின் மீது செலுத்துவதன் மூலமாக அவரின் சம்மதத்தைப் பெறுதல்;
எ) பெண் 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவராக இருக்கும்பொழுது, அவருடைய சம்மதத்தோடு அல்லது சம்மதமில்லாமல்.
விளக்கம்: கற்பழிப்பு குற்றத்தில், பெண்ணின் பிறப்புறுப்பில் ஆண்குறி செலுத்தப்படுவதே உடலுறவு நிகழ்ந்தததற்கான போதுமான ஆதாரமாகும்.
விதிவிலக்குகள்: ஒரு ஆண் தான் சட்டப்பூர்வமாகத் திருமண செய்துகொண்ட சொந்த மனைவியோடு கொள்ளும் உடலுறவு கற்பழிப்பாகக் கருதப்படமாட்டாது.
தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் படி சில சூழ்நிலைகளில் நிகழும் கற்பழிப்புகளுக்கு 10 வருடங்களுக்கும் குறையாத மற்றும் 30 வருடங்களுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். கீழ்க்கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டிருந்தால் கற்பழித்தவனுக்குக் கசையடியும் கொடுக்கப்படும்.
அ) கற்பழிக்கும்போது அல்லது, கற்பழிப்பதற்கு முன்பு அல்லது கற்பழித்தவுடனேயே, பெண்ணுக்கு அல்லது வேறு யாருக்காவது காயத்தை ஏற்படுத்துதல்;
ஆ) கற்பழிக்கும்போது அல்லது, கற்பழிப்பதற்கு முன்பு அல்லது கற்பழித்தவுடனேயே, பெண்ணுக்கு அல்லது வேறு யாருக்காவது காயத்தை அல்லது மரண பயத்தை ஏற்படுத்துதல்;
இ) இன்னொருவரோடு அல்லது இன்னொருவர் முன்னிலையில் கற்பழித்தல்;
ஈ) 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணை அவர் சம்மதம் இல்லாது;
உ) 12 வயதுக்குத் கீழ்ப்பட்ட பெண்ணை அவர் சம்மதத்தோடு அல்லது சம்மதம் இல்லாமல்;
ஊ) பெண்ணோடு தனக்குள்ள தொழில்முறை உறவுகளை, அல்லது வேறு நம்பிக்கைக்குரிய உறவு முறைகளைப் பயன்படுத்தி தன்னுடைய அதிகாரத்தை அவர் மீது செலுத்துவதன் மூலமாக பெண்ணின் சம்மதத்தைப் பெறுதல்;
எ) கற்பழிக்கும்பொழுது பெண் கர்ப்பமாக இருத்தல்;
ஏ) கற்பழித்த காரணத்தால் அல்லது கற்பழிக்கும்பொழுது பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்தல்;
ஐ) கற்பழித்தவனுக்கு எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோய், அல்லது வேறு பால்வினை நோய்கள் இருந்து, அது தான் கற்பழிக்கும் பெண்ணுக்குத் தொற்றும் என்று தெரிந்தும் கற்பழித்தல்;
ஒ) கற்பழித்த காரணத்தால் அல்லது கற்பழிக்கும்பொழுது, பெண் தற்கொலை செய்துகொள்ளுதல்; அல்லது
ஓ) கற்பழிப்புக் குற்றத்தைச் செய்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மன வளர்ச்சிக் குறைபாடு, மனக்குழப்பம், உடல் ஊனம் ஆகியவை இருப்பது கற்பழித்தவனுக்குத் தெரியும்.
அதே சட்டத்தில், கற்பழிக்கும்பொழுது அல்லது கற்பழிக்க முயற்சி செய்யும்பொழுது மரணம் விளைவித்தால், அவருக்கு மரணதண்டனை அல்லது 15 வருடங்களுக்குக் குறையாத மற்றும் 30 வருடங்களுக்கு மேற்போகாத சிறைத்தண்டனையும், 10-க்கும் குறையாத கசையடியும் கொடுக்கப்படும்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375A-ன்படி, சட்டப்படி செல்லுபடியாகும் திருமண வாழ்க்கையின் பொழுது, ஒரு கணவன் தன் மனைவியோடு உடலுறவு கொள்வதற்காக, தன் மனைவியையோ அல்லது வேறு எவரையோ காயப்படுத்தினால் அல்லது மரண பயத்தை உருவாக்கினால் 5 வருடங்கள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376A மற்றும் 376B-ன் படி கூடாப் பாலுறவு வழி நிகழும் கற்பழிப்புக்கு 10 வருடங்களுக்குக் குறையாத மற்றும் 30 வருடங்களுக்கு மேற்போகாத சிறைத்தண்டனையும், கசையடியும் கொடுக்கப்படும். சட்டம், மதம், சம்பிரதாயம் மற்றும் வழக்காறு முறையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத ஓர் உறவு முறையில் உள்ளவரோடு உடலுறவு கொண்டவருக்கு இந்தத் தண்டனைகள் வழங்கப்படும்.
தண்டனைச் சட்டம் 377CA-ன்படி ஒருவர் இன்னொருவரின் சம்மதம் இல்லாமல் அவருடைய பிறப்புறுப்பில் அல்லது ஆசனவாயில் ஏதாவது பொருளைச் செலுத்துவதன் மூலம் உடலுறவு கொள்வாரானால், அவருக்கு 5 வருடங்களுக்குக் குறையாத மற்றும் 30 வருடங்களுக்கு மேற்போகாத சிறைத்தண்டனையும், கசையடியும் கொடுக்கப்படும். விதிவிலக்கு: மருத்துவ மற்றும் சட்ட அமலாக்க நோக்கத்திற்காக, ஒருவருடைய பிறப்புறுப்பில் அல்லது ஆசனவாயில் ஏதாவது பொருளைச் செலுத்துவதை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
பாலியல் வன்முறை தொடர்பாக மலேசியாவில் உள்ள சட்டங்கள்:
| பிரிவு | குற்றம் | தண்டனை |
| 354 | பாலியல் தாக்குதல் (ஒருவரை மானப்பங்கப்படுத்தும் நோக்கில் அவரைத் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல்). | அதிக பட்சம் 10 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது இந்தத் தண்டனைகளில் ஏதாவது இரண்டு. |
| 355 | ஒருவரை அவமதிக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல், அல்லது கோபத்தைத் தூண்டிவிடல். | அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும். |
| 372 | விபச்சார நோக்கங்களுக்காக எந்தவொரு நபரையும் பயன்படுத்துதல். | கசையடியோடு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். |
| 375 (a, g) & 376 | கற்பழிப்பு என்பது தன் மனைவி அல்லாத ஒரு பெண்ணோடு, அவரின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ளுதல் ஆகும். சட்டப்பூர்வ கற்பழிப்பு என்பது 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பெண்ணோடு, அவரின் சம்மதத்தோடு அல்லது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வது. | அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 375A | உடலுறவு கொள்வதற்காக ஒரு கணவன் தன்னுடைய மனைவியைக் காயப்படுத்துதல். | அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை. |
| 375B | கூட்டாகக் கற்பழித்தல். | குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிக பட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை. |
| 376 (2)(d, e) | சட்டப்பூர்வ கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணின் (16 வயதுக்குக் கீழ்ப்பட்ட) சம்மதம் இல்லாமல் மற்றும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணின் சம்மதத்தோடு அல்லது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வது. | குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிக பட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 376 (4) | கற்பழிக்கும்பொழுது அல்லது கற்பழிக்க முயற்சி செய்யும்பொழுது ஒரு பெண்ணுக்கு மரணத்தை விளைவித்தல். | மரணதண்டனை அல்லது குறைந்தபட்சம் 15 ஆண்டுகள், அதிக பட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 10 கசையடிகள். |
| 376A & 376B | கூடாப் பாலுறவு (சட்டம், மதம், சம்பிரதாயம் மற்றும் வழக்காறு முறையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத ஓர் உறவு முறையில் உள்ளவரோடு உடலுறவு கொள்ளுதல்) | குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிக பட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 377A & 377B | முறையிலா புணர்ச்சி (sodomy) (இயற்கைக்குப் புறம்பான பாலுறவு. ஆண்குறியை இன்னொருவரின் ஆசனவாய்க்குள் அல்லது வாய்க்குள் செலுத்துவதன் மூலம் பாலுறவு கொள்ளுதல்). | அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 377C | ஒருவரின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒருவர் இன்னொருவருக்கு மரணம் அல்லது காய பயத்தை உருவாக்குதல். | குறைந்தபட்சம் 5 ஆண்டுகள், அதிக பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 377CA | ஒருவரின் பெண்ணுறுப்பு அல்லது ஆசனவாயில் அவருடைய சம்மதம் இல்லாமல் பொருட்களை உட்செலுத்துவதன் மூலம் பாலியல் தொடர்புகொள்ளுதல். | குறைந்தபட்சம் 5 ஆண்டுகள், அதிக பட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 377D | ஒருவரை மானபங்கப்படுத்துதல். | அதிக பட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை. |
| 377E | 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறாரை மிக இழிந்த பாலுறவுச் செயலைப் புரியத் தூண்டுதல். | குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், அதிக பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி. |
| 509 | ஒருவரின் தன்மானத்தைக் குலைக்கும் நோக்கில் வார்த்தைகள் மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்துதல். | அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும். |
சிறாருக்கு எதிரான பாலியல் வன்முறை சட்டம் 2017
Sexual Offences Against Children Act 2017 (SOAC)
சிறார் பாலியல் கொடுமை தொடர்பான சட்டங்களுக்கு, மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
கற்பழிப்பு தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
