உதவி பெறுதல்

 

நீங்கள் கற்பழிக்கப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

உடல் பாகங்களைக் கழுவுவது அல்லது நீங்கள் அணிந்திருந்த ஆடைகளை மாற்றுவது கூடாது. அவ்வாறு செய்ய வேண்டும் என்ன எண்ணம் எழுந்தால் கூட செய்யக்கூடாது. நீங்கள் அவ்வாறு செய்தால் கற்பழிக்கப்பட்டதற்கான முக்கியத் தடயங்களான விந்து, இரத்தம், உமிழ்நீர், முடி மற்றும் இழைகள் அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் நம்பும் ஒருவரிடம் சொல்லுங்கள். நீங்கள் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் கூட,  உங்களின் நம்பிக்கைக்குரியவரோடு கலந்து பேசுவது மற்றும் கற்பழிப்பு சம்பவம் குறித்து அவர்களிடம் சொல்வது முக்கியமாகும். ஆலோசனைகளுக்கு, பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) போன்ற பெண்கள் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம்.  பயம், பதட்டம், அவலநிலைக்கு ஆளான உணர்வுகள் பாலியல் தாக்குதல்களுக்குள்ளானவர்களுக்கு ஏற்படுவதால் இன்னொருவருடன் பேசுவது நன்மை பயக்கும்.

உங்களுக்கு உதவ ஒரு நண்பரைப் பெறுங்கள். கற்பழிக்கு ஆளானவருக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை வைத்துப் பார்க்கும்பொழுது, சுயமாகச் சென்று புகார் கொடுப்பது என்பது அவருக்கு எளிதான காரியமல்ல. மருத்துவமனை அல்லது காவல் நிலையத்திற்குச் செல்லவோ அல்லது ஆலோசனை பெறும் பொருட்டு பெண்கள் அமைப்பின் உதவியை நாடவோ, நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களை உங்களுக்குத் துணையாக வரச்சொல்லுங்கள்.

 

அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவ உதவி பெறுதல்

  1. எந்த அரசாங்க மருத்துவமனைகளிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் பதிவு முகப்புக்கு உடனடியாகச் செல்லவும்.
  2. One Stop Crisis Centre (OSCC) என்ற தனியறையில் மருத்துவர்கள் உங்களைப் பரிசோதிப்பர்.
  3. உங்கள் உடலைச் சோதிப்பதற்கான அனுமதியைப் பெறும் பொருட்டு முதலில் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு உங்களிடம் கொடுப்பர்.  உங்கள் அனுமதி கிடைத்த பிறகு உங்கள் உடலைப் பரிசோதித்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிராய்ப்பு மற்றும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.
  4. நீங்கள் மருத்துவமனையில் உள்ள காவல்துறை முகப்பிலும் புகார் அளிக்கலாம்.
  5. காவல்துறையில் புகார் அளித்தவுடனேயே, கற்பழிப்பு நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்குத் துல்லியமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  மருத்துவர்கள் உங்கள் பிறப்புறுப்பையும் உங்கள் ஆடைகளையும் சோதனை செய்வர்.  ஒரு காவல்துறை அதிகாரியின் முன்னிலையில் உங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  உங்களுக்கு இது அசௌகரியமாக இருந்தாலும், உடனடி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு இது முக்கியமாகும்.
  6. திரட்டப்பட்ட ஆதாரங்கள், விசாரணைக்காகக் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
  7. தேவைப்பட்டால், உங்கள் சம்மதத்தோடு, ஒரு தொழில்முறை நிபுணர் அல்லது அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் ஆலோசனையை நீங்கள் பெற ஏற்பாடு செய்வர்.
  8. காவல்துறையில் புகார் கொடுக்க உங்களுக்கு விருப்பமில்லை  என்றால், மருத்துவர்கள் உங்கள் உடலைப் பரிசோதித்து உங்கள் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பர். தொற்றுநோய்க்கிருமிகளின் பாதிப்புகள் உள்ளனவா என்பதனை அறிய உங்கள் இரத்தத்தை எடுத்துப் பரிசோதிப்பர்.  உங்கள் சம்மதம் கிடைத்த பிறகே, ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வர்.
 

காவல்துறையின் உதவி பெறுதல்

  1. உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கவும். நீங்கள் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.  நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால் காவல்துறை புகார் கட்டாயமில்லை. என்றாலும், கற்பழிப்பைப் புகார் செய்வதன் மூலம், அந்த நபர் இன்னொரு பெண்ணைக் கற்பழிப்பதை நீங்கள் தடுக்க முடியும்.
  2. காவல்துறை புகாருக்குக்  கீழ்குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படுகின்றன:
    • எப்பொழுது: எப்பொழுது நடந்தது? – சம்பவம்/சம்பவங்கள் நடந்த தேதி மற்றும் நேரம்.
    • எங்கு: எங்கு நடந்தது? – சம்பவம்/சம்பவங்கள் நடந்த இடம்.
    • என்ன மற்றும் எப்படி: என்ன சம்பவம் நடந்தது, எப்படி நடந்தது மற்றும் எத்தனை முறை நடந்தது? – சம்பவம்/சம்பவங்களின் விபரங்கள்.
    • யார்: யார் இதில் சம்பந்தப்பட்டது மற்றும் கற்பழிப்பு குற்றஞ்சாட்டப்பட்டவர் யார்?
    • பாதிப்பு: சம்பவத்திற்குப் பிறகு உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? காயம், சிராய்ப்பு, இன்னும் பல.
    • ஏன்: ஏன் புகார் செய்யப்படுகிறது? காவல்துறை நடவடிக்கை எடுக்க, இன்னும் பல.
  3. கற்பழிப்பு நடந்த 72 மணி நேரத்திற்குப் பிறகு புகார் செய்யப்பட்டிருந்தால், அந்தக் கற்பழிப்பு ‘தீர்க்கப்படாத வழக்கு’ (cold case) என்றறியப்படும்.  ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் மறைந்துபோயிருக்கலாம்.
  4. மேல் விசாரணை செய்யும் பொருட்டு, மாவட்ட காவல் நிலையத்தின் பாலியல், பெண்கள் மற்றும் சிறார் விசாரணைப் (D11) பிரிவின் விசாரணை அதிகாரி (Investigating Officer) ஒருவர் நியமிக்கப்படுவார்.  மருத்துவ உதவி, வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், கூடுதல் ஆதாரங்களைத் திரட்டும் பொருட்டு கற்பழிப்பு நடந்த இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் இன்னும் பலவற்றுக்காக அவர் உங்களை அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்.
  5. விசாரணை நடக்கும்பொழுது சந்தேகத்திற்குரிய நபர் தடுத்து வைக்கப்படலாம்.
  6. விசாரணையின் முடிவுகளை, விசாரணை அதிகாரி அரசு வழக்கு விசாரணை அலுவலகத்தில் சமர்ப்பிப்பார். சந்தேகத்திற்குரிய நபர் இழைத்த கொடுமைக்கு அவர் குற்றஞ்சாட்டப்படுவாரா என்பதனை விசாரணை அலுவலகம் முடிவு செய்யும்.  போதுமான ஆதாரங்கள் இருக்குமானால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.  இல்லாவிடில் அவர் விடுவிக்கப்படுவார்.

நான் கற்பழிக்கப்பட்டவருக்கு ஆதரவளிப்பது எப்படி?

உங்கள் தோழி கற்பழிக்கப்பட்டிருந்தால், அவர் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் நிலைகுலைந்து போயிருப்பார்.   அவர் மௌனம் காத்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடும், அல்லது வெறிபிடித்தது போல் நடந்துகொள்ளலாம். சிரிப்பது, ஆத்திரப்படுவது, எதிலும் ஈடுபாடில்லாமல் இருப்பது அல்லது அதிர்ச்சி போன்ற உணர்வு அலைக்கழிப்புகளுக்கு ஆளாகலாம்.  கற்பழிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக தனக்கு நிகழ்ந்த கொடூரத்தைக் கையாளுகின்றனர்.  தன்னை யாரும் நம்பமாட்டார்கள் என்ற பயம் கற்பழிக்கப்பட்ட பெண்களைத் தொற்றிக்கொள்கிறது.

கற்பழிக்கப்பட்டவர் அதனைத் தாமதமாகப் புகார் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆகையால், முதலில் நீங்கள் கற்பழிக்கப்பட்டவரை நம்புவது முக்கியம்.  கற்பழிக்கப் பட்டவர் சக்தியிழந்து விட்டோம் என்ற உணர்வால் உந்தப்பட்டு, தாழ்வு மனப்பான்மையால் துவண்டுபோயிருக்கலாம். அவரை நம்பும்பொழுது நீங்கள் அவருக்கு ஊக்கமளிக்கிறீர்கள். அவர் சொல்வதைச் செவிமடுத்துப் புரிந்துகொண்டு உதவி செய்ய முடியும்.

சூழ்நிலையை முடிந்தவரையில் சரியாகத்தான் கையாண்டு உள்ளார் என்று கற்பழிக்கப்பட்டவருக்கு நம்பிக்கையூட்டுங்கள்.  நிலைகுலைவிலிருந்து அவர் வெளியாகக் காவல்துறை புகார், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை சேவைகள் பற்றிய தகவல்களை அளியுங்கள்.  நீங்கள் சொல்வதையெல்லாம் அவர் நினைவில் நிறுத்த முடியாத நிலையில் இருக்கலாம்.  இது இயல்புதான்.  இதே தகவல்களை நீங்கள் அவருக்குத் திரும்பக் கூறலாம்.  விரைவில் முடிவெடுக்குமாறு கற்பழிக்கப்பட்டவருக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்கக்கூடாது.

நீங்கள் செய்ய வேண்டியவை வருமாறு:

  • அவர் சொல்வதைக் காது கொடுத்து கேளுங்கள்.
  • அவரை நம்புங்கள்.  கற்பழிக்கப்பட்டவருக்குத் தான் சொல்வதை மற்றவர் நம்புகிறார் என்று தெரிந்துகொள்வது முக்கியமானதாகும்.  ஏனெனில் கற்பழிக்கப்பட்டதாகப் பொய் சொல்பவர் மிகக் குறைவு.
  • அவருக்கு நடந்த கற்பழிப்பை உங்களுக்கு அறிவித்ததற்கு நன்றி தெரிவியுங்கள். நடந்தனவற்றைப் பகிர்ந்துகொள்வது எவ்வளவு சிரமமானது என்று உங்களுக்குப் புரிகிறது என்று அவருக்கு அறிவியுங்கள்.
  • கற்பழிப்பு அவர் குற்றமல்ல என்று ஆதரவாகப் பேசுங்கள்.  கற்பழிப்பைத் தூண்டுவதற்கு அவர் எதையும் செய்யவில்லை. எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படக்கூடாது. கற்பழித்தவர் மட்டுமே இதில் முழுக்கக் குற்றம் புரிந்தவர்.
  • அவருடைய சுயமதிப்பு முக்கியமானது என்று வலியுறுத்தி, கற்பழிப்பை எதிர்கொண்டிருக்கும் அவருடைய மனோவலிமைக்கு உங்கள் மரியாதையை வெளிப்படுத்துங்கள்.
  • அவருடைய முடிவுக்கு மதிப்பளித்து அவர் சொந்த தேர்வுகளைச் செய்ய அனுமதியுங்கள்.
  • காவல்துறையில் புகார் கொடுக்க ஊக்கமளியுங்கள். அல்லது பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) போன்ற பெண்கள் அமைப்புகளின் ஆலோசகரோடு தொடர்புகொண்டு பேச ஏற்பாடு செய்யுங்கள்.  பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஒவ்வொரு பெண்ணும் அதற்கு வெவ்வேறு விதமாக எதிர்வினை ஆற்றுவர். அவமானம், தன்னையே நொந்துகொள்ளுதல், பயம், காயம் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள் தீவிரமாக வெளிப்படுவதால், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பதாக அதன் முழுத்தாக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.  இதற்கு அனுபவமிக்க ஆலோசகரின் உதவியை நாடவேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கற்பழிப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
கற்பழிப்பு என்பது உடலுறவு அல்ல. அது ஒரு வன்முறைசெயல் மற்றும் கடுமையான குற்றமாகும்.  மாறாக உடலுறவு என்பது துணைகள் இருவரின் பரஸ்பர சம்மதத்தோடு நடைபெறுகிறது.

சட்டப்பூர்வமான கற்பழிப்பு என்றால் என்ன?
16 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பெண்ணோடு, அவரின் சம்மதத்தோடு அல்லது சம்மதம் இல்லாது உடலுறவு கொள்வது சட்டப்பூர்வமான கற்பழிப்பு என்று கருதப்படும்.

ஏன் ஆண்கள் கற்பழிக்கிறார்கள்?
ஆண்கள் தங்களுடைய காமத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. ஆனால், உண்மையில் கற்பழிப்பு என்பது பாலியல் ஈர்ப்பு மற்றும் இச்சை சம்பந்தப்பட்டது அல்ல – அது ஒரு பெண்ணின் மீது செலுத்தப்படும் அதிகாரம் மற்றும் அடக்குமுறை ஆகும்.  அந்த அதிகாரம் மற்றும் அடக்குமுறையை வெளிப்படுத்துவதற்கு ஒரு பெண்ணின் உடல் பாலுறவு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

இதர பாலியல் குற்றங்களிலிருந்து கற்பழிப்பு எப்படி வேறுபடுகிறது?
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவள் பிறப்புறுப்பில் ஆண்குறி செலுத்தப்படுவதைச் சட்டம் கற்பழிப்பு என்கிறது. பெண்களும் ஆண்களும் வேறு வழிகளிலும் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகலாம்.  உதாரணத்திற்கு, வாய், ஆசனவாய் வழி உறவுக்குக் கட்டாயப்படுத்துதல் மற்றும் இதர விருப்பமில்லாத பாலியல் தொடுதல்கள்.  பாலியல் தாக்குதல், முறையிலா புணர்ச்சி, மானபங்கப்படுத்துதல் போன்றவற்றின் கீழ் உள்ள தண்டனைச் சட்டத்தின் வாயிலாக, குற்றமிழைத்தவர் குற்றஞ்சாட்டப்படுவார்.

கற்பழிப்பினால் நீங்கள் கருத் தரிக்கவோ அல்லது உங்களுக்குப் பாலியல் நோய் பாதிப்போ ஏற்படுமா?
ஆம், கற்பழிக்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு கருத்தரித்தல் மற்றும் பாலியல் நோய் பாதிப்புகள் உருவாகலாம். குறிப்பாகக் கற்பழிக்கும்பொழுது ஆணுறை பயன்படுத்தப்படாமல் இருந்திருந்தால் பாதிப்புகள் அதிகம். அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் உங்களைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான பொலிஸ் அறிக்கையையும் செய்யுங்கள்.

தன்னைக் கற்பழித்தவனைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா?
சில சமயங்களில் கற்பழித்தவனையே திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். அதுவும் பெண் கர்ப்பம் தரித்திருந்தால் இவ்வாறு செய்யலாம்.  கற்பழித்தவனைத் திருமணம் செய்துகொள்ளுமாறு யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.  கற்பழித்தவனைத் திருமணம் செய்துகொள்ளும் பெண், திருமணத்திற்குப் பிறகு தொடர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகக்கூடும்.

கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அதற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளலாமா?
ஆம். கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் எந்தத் தவற்றையும் செய்யவில்லை.  மொத்த தவறும் கற்பழித்தவனுடையதுதான் என்பதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.  ஆனால் சில சமயங்களில் கற்பழித்தவன் மீது பழி சுமத்துவதற்குப் பதிலாக, பழி கற்பழிக்கப்பட்ட பெண்கள் மீது சுமத்தப்படுகிறது.  ஆகையால், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் தன்னுடைய அதிர்ச்சியிலிருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆலோசனைகளை நாடுவது அவசியம்.  தான் நேசிக்கும் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

கற்பழிப்பு தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.

கற்பழிப்பு முகப்புப்பக்கத்திற்குத் திரும்பு