பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான இணையவழி வன்முறை என்றால் என்ன?

இணையவழி வன்முறை என்பது இணையத்தின் மூலமாகவோ அல்லது தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலமாகவோ நிகழும் எவ்வகையான கொடுமையும் அல்லது அத்துமீறலும் ஆகும். புலனம், முகநூல், படவரி, அளாவி, கீச்சகம் போன்ற எந்த இணையத் தளங்களின் மூலமாகவும் (சமூக ஊடகத் தளங்கள்) இது நிகழலாம். இணையவெளி மூலம் தொந்தரவு கொடுத்தல், இணையவெளி பின்தொடர்தல், இணையவழி பாலியல் வசீகரிப்பு, பாலியல் அரட்டை, விரும்பத்தகாத பாலியல் கருத்து அல்லது படங்களின் இடுகை போன்ற இன்னும் பல, இணையவழி வன்முறைகளில் அடங்கும்.  இணையவழி வன்முறை யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்.  ஆனால், பெரும்பாலான சமயங்களில் பாதிப்புக்கு உள்ளாவது பெண்களும் சிறார்களுமே.

இணையவழி வன்முறையே பிறகு நேரடியான பாலியல் தாக்குதல்களுக்கு வித்திடுகின்றன என்பதை நினைவில் கொள்வது முக்கியம். நேரடியான வன்முறை போன்று, இணையவழி வன்முறையும் ஒருவரைப் பாழ்படுத்தும் அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இணையவழி வன்முறை மூலம் உருவாகும் கூடுதல் இடர் அல்லது ஆபத்துகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

  • குற்றம் இழைப்பவர் உண்மையில் யார் என்றே பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் போகலாம்;
  • வன்முறையை நிகழ்த்துபவர் அவர் குறி வைப்பவருக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை;
  • சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் வன்முறையில் சம்பந்தப்பட்டிருக்கலாம்;
  • வன்முறை மற்றும் பாலியல் பற்றிய தெளிவான படங்கள், தகவல்கள் விரைவாகப் பகிரப்பட்டு, இணையத்தில் அதிக நாள்களுக்கு உலா வரலாம்;
  • வன்முறைக் குற்றங்கள் இழைப்பதற்கான கருவிகள் எளிதில் கிடைக்கும்; அவை மலிவானவையும் கூட.

இணையவழி வன்முறைக்கு ஆளானவரிடையே தென்படும் சில அறிகுறிகள் வருமாறு:-

  • வழக்கத்திற்கு மாறாக, இணையத்தில் அளவுக்கு அதிகமான அல்லது அளவுக்குக் குறைவான நேரத்தைச் செலவிடுதல்;
  • இணையத்தைப் பயன்படுத்திய பிறகு பயம், கோபம், வேதனை, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகுதல்;
  • இணையத்தில் யாருடன் உரையாடுகின்றனர், என்ன செய்கின்றனர் என்பது பற்றி இரகசியம் காத்தல்;
  • அடிக்கடி கைப்பேசி எண்ணை மாற்றுதல்.
 

பெண்கள் & குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இணையவழி வன்முறைகள்

இணையவெளி தொந்தரவு

முகநூல்  போன்ற சமூக ஊடகங்கள் அல்லது கைப்பேசி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி  தேவையற்ற மற்றும் அவமதிக்கும் கருத்துகள், ஆபாசப் படங்கள் அல்லது காணொளி மூலம், குறிவைக்கும் நபரை அடிக்கடி மற்றும் தொடர்ச்சியாக அலைக் கழித்தல் மற்றும் மிரட்டுதல் போன்ற செயல்கள் இணையவெளி தொந்தரவு எனப்படும்.  ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த தகவல்கள் அல்லது கருத்துகளுக்கு எதிராக நயமற்ற மற்றும் இழிவான கருத்துகளை வெளிப்படுத்துதல் அல்லது ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் அவதூறு மற்றும் பொய்களையும் இவர்கள் பரப்பக்கூடும்.

சில சமயங்களில், வன்முறையாளர், அவர் குறி வைக்கும் நபர் சமூக ஊடகங்களிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களையும் தூண்டிவிட்டு ஊக்கப்படுத்தி இணையத் தளங்களில் வசைகளை அள்ளி வீசக்கூடும்.  வலைப்பதிவு அல்லது சமூக ஊடகப் பக்கங்களை உருவாக்கி ஒருவரைப் பற்றி பழித்துரைத்தல் மற்றும் தீங்கிழைக்கும் கருத்துகளைப் பரப்புதலும் இதில் அடங்கும்.

ஒருவரின் உடன்பாடு இல்லாமல் பாலியல் ரீதியான பொருள்களை எடுத்தல்/விநியோகித்தல்

குற்றமிழைத்தவர், பாலியல் காணொளிகள் அல்லது படங்களைப் பாதிக்கப்பட்டவரின் அனுமதி இல்லாமல் எடுத்தல்/சமூக ஊடகத் தளங்களில் பகிர்தல்.  தான் குறி வைப்பவரை, பாலியல் ரீதியாக இணங்க வைக்க அல்லது பணம் கறக்க இந்தப் படங்கள் அல்லது பொருள்களை அவர்கள் பயன்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு, குற்றமிழைத்தவர் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர் குறி வைக்கும் நபரை இணையப் படக்கருவி முன்னால் நிர்வாணக் கோலத்தில் நிற்குமாறு அல்லது சொந்த உடலை ஆபாசமாகத் தொடுமாறு கட்டாயப்படுத்துதல்.

சில நேரங்களில் பாலியல் காணொளிகள் அல்லது படங்கள் வயதில் முதிர்ந்த இருவரின் இணக்கத்தோடு, அது இரகசியாக வைத்துக் கொள்ளப்படும் என்ற ஒரு நம்பிக்கையில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இருவருக்கும் இடையேயான உறவு முடிவுக்கு வரும்பொழுது அல்லது பிரச்சனைகள் ஏற்படும்பொழுது, குற்றமிழைப்பவர் தான் குறி வைத்தவரை அடக்க, புண்படுத்த அல்லது அவமானப்படுத்துவதற்காக, இவற்றை ஆபாசப்பட அகப்பக்கங்களில் பதிவேற்றி, பிறகு அதனை அனைவருக்கும் பகிரக்கூடும்.

பாலியல் வார்த்தைகள், படங்கள், காணொளிகள் போன்றவற்றைத் தொழில்நுட்ப வழியாக, பெரும்பாலும் கைப்பேசி வழியாக அனுப்புவது மற்றும் பெறுவது பாலியல் அரட்டை எனப்படும்.  ஒருவர் இதனை தன்னுடைய நெருக்கத்தை, காதலை  வெளிப்படுத்துவதற்காக  விருப்பப்பட்டு செய்யலாம் அல்லது தன்னுடைய துணை அல்லது சகா அவரைக் கட்டாயப்படுத்தி இவ்வாறு செய்ய வைத்திருக்கலாம்.  மலேசியாவில், உங்களுடைய சொந்த நிர்வாணப் படங்களை வைத்திருப்பதும், அவற்றை அனுப்புவதும், பெறுவதும் குற்றமாகும். பாதிக்கப்பட்டவர் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவராக இருந்தால் அது சிறார் ஆபாசப்  படமாகக் கருதப்படும்.

இணையவழி வசப்படுத்துதல்

இணையவழி வசப்படுத்துதல் என்பது குற்றமிழைப்பவர் தான் குறி வைக்கும் நபரோடு நண்பராகி, சமூக ஊடகத் தளத்தில் அவரோடு நம்பிக்கைக்குரிய உறவை வளர்த்துக்கொண்டு, பிறகு அவரைப் பாலியல் அல்லது பொருளாதார ரீதியாக பயன்படுத்திக்கொள்ளல் ஆகும். இந்தக் குற்றத்தைப் புரிபவர் தன்னைப் பதின்ம வயதினராக, இள வயதினராக அல்லது எதிர்பாலினமாகக் காட்டிக் கொண்டு உறவை வளர்த்துக் கொள்வார்.

மிகவும் ‘நல்லவராக’ எ.கா: காது கொடுத்துக் கேட்பவராக, அவர் குறி வைக்கும் நபரின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்பவராக, அடுத்தவர் மீது அக்கறையும் மதிப்பும் வைத்திருப்பவராகத் தன்னைக் காட்டிக்கொள்வார்.  அதிமுக்கியமாக, குறி வைப்பவர் மீது மிகுந்த கவனிப்பு செலுத்துபவராக இருப்பார்.  ஓர் உன்னத உறவு அவர்களிடையே உருவாகும் வரை, தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தொடர்பில் இருப்பார். இதற்குப் பிறகு, குற்றமிழைப்பவர், தான் குறி வைத்தவரை ஆட்கொள்ள நினைப்பார்.  இதற்குக் காதல் மோசடி என்று பெயர்.

குற்றமிழைப்பவரின் நோக்கம் பாலியல் அல்லது பணத் தேவையாக இருக்கலாம். பாலியல் நோக்கமாக இருப்பின், அவர் பாலியல் தொடர்பான பொருள்களைக் குறி வைக்கும் நபருக்கு மெதுமெதுவாக அறிமுகப்படுத்தி அவரைத் தன் வலைக்குள் விழச் செய்வார். வசப்படுத்திய பிறகு, பாலியல் படங்களை அவரிடமிருந்து கேட்டுப் பெறுவார்.  இப்படி, ஒருவரைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்த பிறகு, அவரை மிரட்டிப் பணிய வைப்பது, கொடுமைப்படுத்துவது போன்ற அடக்கு முறைகளைப் பிரயோகிப்பார். அவரை அடக்குவதற்காக மனரீதியாகவும் மிரட்டுவார்.

நோக்கம் பணம் பறிப்பதாக இருப்பின், தங்களுடைய வாழ்க்கைத் துயரங்களைச் சொல்லி, தங்கள் மீது இரக்கம் கொள்ள வைப்பர். எ.கா: திடீரென ஏற்படும் மருத்துவமனைச் செலவுகள்.  ஆரம்பத்தில் அவர் கேட்கும் தொகை குறைவாக இருக்கும்.  பிறகு இந்தத் தொகை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போகும்.

இணையவழி ஆள்மாறாட்டம்

குற்றமிழைப்பவர், தொழில்நுட்பம் அல்லது சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி தன்னைப் பற்றிய போலி அடையாளத்தை உருவாக்கிக்கொள்வார். அல்லது தான் யாரைக் குறி வைக்கிறோமோ அவரைப் போல் தன்னைக் அடையாளம் காட்டிக்கொண்டு அவரின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரித்து அவரை அவமானப்படுத்துவார் அல்லது பெயரைக் கெடுப்பார். இதுபோன்று, குறி வைக்கப்படும் நபரின் அடையாளத்தைப் பயன்படுத்தி இன்னொருவரை ஆட்கொள்ளவும் செய்யலாம். குறி வைக்கப்படும் நபரின் கடவுச் சொல்லைத் திருடுதல், அவரின் இணையவழி நண்பர்களோடு ஆள்மாறாட்டம் செய்து உரையாடுதல், ஆபாச அல்லது தகாத கருத்துகளை அனுப்புதல் அல்லது ஒருவரின் மதிப்பைக் குறைத்து நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தலும் இதில் அடங்கும்.

இது போன்றவர்கள் தங்களை வேறு ஒரு நபர் போல் காட்டிக்கொண்டு, குறி வைக்கும் நபரைப் போலியான உறவுக்குக் கவர்ந்திழுக்கலாம். இந்த வலையில் குறி வைக்கப்பட்டவர்  மாட்டிக்கொள்ளும்பொழுது, அவரைச் சூழ்ச்சிகளுக்கு அல்லது பாலியல் மோசடிக்கு ஆளாக்கலாம்.

இணையவெளி பின்தொடர்தல்

இணையவெளி பின்தொடர்தல் என்பது குற்றமிழைப்பவர் தொழில்நுட்பம் அல்லது கணினி மென்பொருள்களைப் பயன்படுத்தி, குறி வைக்கப்படும் நபர் அறியாத வகையில் அவரின் தடமறிதல் அல்லது பின்தொடர்தல் ஆகும்.  ஒருவர் தான் பின்தொடர நினைப்பவரின் கைப்பேசியில் சில பயன்பாட்டு மென்பொருள்களை அல்லது தடமறியும் கருவிகளை அவருக்குத் தெரியாமல்  பதிவிறக்கம்  செய்திருப்பார். உதாரணத்திற்கு, ஒருவரின் இருப்பிட விபரங்கள் மற்றும் சமூக ஊடக விபரங்கள். பாதிக்கப்பட்டவர் இதனை அறியாமல் இருக்கலாம்.

சிலர், தான் குறிவைப்பவரை மிகவும் தந்திரமாகத் தீம்பொருள்களை (malware) பதிவிறக்கம் செய்யவைத்து அவரின் இணையப்படக் கருவி எப்பொழுதும் தன் பார்வைக்குள் இருக்குமாறு வைத்துக்கொள்வார்.  இதன் மூலம் தான் குறி வைப்பவரின் எல்லா தனிப்பட்ட விபரங்களையும் அவரின் சமூக ஊடக நடவடிக்கைகளைக் கண்காணித்துப் பெற்றுக் கொள்வார்.

இணையவழி வன்முறையால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி வன்முறையும், நேரடி வன்முறை போன்றே சேதத்தை விளைவிப்பதாகும். இணையவழி வன்முறையின் பாதிப்புகளைப் பெரும்பாலோர் குறைத்துக் கணித்து விடுகின்றனர். நேரடித் தொடர்பு இல்லாத காரணத்தால் அதன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் நினைக்கின்றனர்.

பெரும்பாலான தருணங்களில், பாதிக்கப்பட்டவர் தனித்து விடப்படுகிறார். அவமானம், தனிமை மற்றும் சுயவதை போன்றவற்றிற்கு அவர் தள்ளப்படுகிறார். உண்மையில், இணையவழி வன்முறை பாதிக்கப்பட்டவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கிறது.  இந்தப் பாதிப்புகளில் சில கீழ்வருமாறு:-

உடல் பாதிப்புகள்
  • தலைவலி மற்றும் சோர்வு
  • தூக்கம் மற்றும் உணவு உட்கொள்ளுதலில் பிரச்சனைகள்
  • சுய வதை
  • தற்கொலை

மனரீதியான பாதிப்புகள்
  • மனக்கலக்கம்/உளைச்சல் அதிகரித்தல்
  • பயம்
  • மன அழுத்தம்
  • தாழ்வு மனப்பான்மை
  • தற்கொலை எண்ணம் மற்றும் முயற்சி

சமூக பாதிப்புகள்

  • மற்றவர்களோடு நம்பிக்கைக்குரிய உறவுகளை உருவாக்கிக்கொள்ள முடியாமை;
  • குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகிக்கொள்ளல்;
  • நிஜ உலகில் சுதந்திரமாக உலா வரவும் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறனையும் இழத்தல்;
  • இணையத்தளத்தில் தன்னைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான மற்றும் நிறுவிக்கொள்வதற்கான திறனை இழத்தல்;
  • பணம்/உடைமை/சொத்து இழப்பு;
இணையவழி தொடர்பான பயனான தகவல்களைப்  பாருங்கள்.
 
இணையவழி வன்முறை பக்கத்திற்குத் திரும்பவும்.