மலேசியாவில் சட்டங்கள்

இணையவழி வன்முறை தொடர்பான சட்டங்கள்

இணைய பாதுகாப்புச் சட்டம் 2024

மலேசியாவில் இணையத்தை மேலும் பாதுகாப்பான தளமாக உருவாக்கும் நோக்கில் இணைய பாதுகாப்புச் சட்டம் 2024 கொண்டு வரப்பட்டுள்ளது. இது தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துவதோடு செயலி சேவை வழங்குநர்கள், உள்ளடக்க சேவை வழங்குநர்கள் மற்றும் தகவல் இணைப்பு சேவை வழங்குநர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுத்துள்ளது. இந்தச் சட்டம் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 2025-இல் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான மேலும் சில முக்கியமான விதிமுறைகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தச் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • இந்தச் சட்டம் பல வகையான தீங்கிழைக்கும் உள்ளடக்கப் பிரிவுகளை வரையறுக்கிறது. இதில் சிறார் பாலியல் வன்முறை தொடர்பான இணைய உள்ளடக்கம், நிதி மோசடி மற்றும் தொந்தரவு, மனவேதனை, பயம் அல்லது பீதி ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கம், வன்முறை அல்லது பயங்கரவாதத்தைத் தூண்டக்கூடிய உள்ளடக்கம் அல்லது சிறார் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளத் தூண்டும் உள்ளடக்கம் ஆகியவையும் அடங்கும். இவற்றில் சிறார் பாலியல் கொடுமை மற்றும் நிதி மோசடி தொடர்பான உள்ளடக்கம் ஆகியவை முக்கியமாகச் சேதத்தை உண்டாக்கும் உள்ளடக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளன.
  • இந்தச் சட்டம் செயலி சேவை வழங்குநர்கள் மற்றும் உள்ளடக்க செயலி சேவை வழங்குநர்களுக்கான பொறுப்புகளை வரையறைத்துள்ளது. இதில், தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களுக்குப் பயனர்கள் ஆளாகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களின் பாதிப்புகளைத் தணிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது, சிறார் பயனர்களின் இணைய பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்கள் எல்லா பயனர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை நிறுவுவது ஆகியவையும் அடங்கும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ், இணைய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு (MCMC) ஆலோசனை வழங்கவும் பரிந்துரைகள் அளிக்கவும் இணைய பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) எடுத்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும், இணைய பாதுகாப்பு மேன்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படுவதற்கும் இச்சட்டம் வாய்ப்பு அளிக்கிறது.

2024ஆம் ஆண்டு இச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைக் குறித்து தங்களது அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கில், சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்தன. இது தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ள, பொதுக்குற்றச் சட்டத் திருத்த மசோதா மற்றும்  இணைய பாதுகாப்பு மசோதாகுறித்த இணைய பாதுகாப்புச் செயற்பாட்டுக் குழுவின் கூட்டு ஒப்பந்த ஆவணம் பகுதி 1 மற்றும் 2ஐப் படிக்கவும் [இணைப்பு]

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (CMA)

 பிரிவு  குற்றம்  தண்டனை
211 அநாகரீகமான, அவமதிக்கும், போலியான, அச்சுறுத்தும் அல்லது மிகவும் அவமானகரமான உள்ளடக்கம் (உள்ளடக்க சேவை வழங்குநரால்) அதிக பட்சம் 10 வருட சிறைத்தண்டனை அல்லது மவெ. 1 மில்லியன் அபராதம் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம். தீர்ப்புக்குப் பிறகும் குற்றம் தொடருமானால் ஒவ்வொரு நாளுக்கும் அல்லது நாளில் ஒரு பகுதிக்கு மவெ. 100,000 அபராதம் விதிக்கப்படும்.
233 ஆபாசமான, அவமதிக்கும், போலியான, அச்சுறுத்தும் அல்லது எரிச்சலூட்டும் நோக்கில், துன்புறுத்தும், மிரட்டும், தொந்தரவு செய்யும் வன்மை நோக்கு கொண்ட வகையில் அல்லது மோசடி, நேர்மையின்மை தொடர்பான குற்றங்களை ஒருவர் மீது புரிவதற்கு இணைய வசதிகளைத் தகாத வகையில் பயன்படுத்துதல்.         அதிக பட்சம் 2 வருட சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் மவெ. 500,000 அபராதம் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம். தீர்ப்புக்குப் பிறகும் குற்றம் தொடருமானால் ஒவ்வொரு நாளுக்கும் மவெ. 5,000 அபராதம் விதிக்கப்படும். ஒரு குற்றம் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறார் மீது புரியப்படுமானால், குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் மவெ. 500,000 அபராதம் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம். தீர்ப்புக்குப் பிறகும் குற்றம் தொடருமானால் ஒவ்வொரு நாளுக்கும் அல்லது நாளில் ஒரு பகுதிக்கு மவெ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.  இணையத் தளம் மூலம் வர்த்தக நோக்கத்திற்காக ஆபாச தொடர்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் மவெ. 1 மில்லியன்அபராதம் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம். தீர்ப்புக்குப் பிறகும் குற்றம் தொடருமானால் ஒவ்வொரு நாளுக்கும் அல்லது நாளில் ஒரு பகுதிக்கு மவெ. 10,000 அபராதம் விதிக்கப்படும்.

தண்டனைச் சட்டம்

 பிரிவு

 குற்றம்

 தண்டனை

292

ஒரு நபர் எந்த வடிவத்திலான ஆபாசப் பொருள்களை (நன்னோக்கு சமய நோக்கங்களைத் தவிர்த்து) விற்றல், விநியோகித்தல், தயாரித்தல், சொந்தமாக வைத்திருத்தல் போன்றவை.

அதிக பட்சம் 3 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

293

ஒரு நபர், 20 வயதுக்கும் குறைவான ஒருவரிடம் எந்த வடிவத்திலான ஆபாச பொருள்களை விற்றல், விநியோகித்தல் மற்றும் சுற்றனுப்புதல்.

அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

294

ஒரு நபர், மற்றவர்களைத் தொந்தரவுள்ளாக்கும் வகையில், பொது இடத்தில் ஆபாச நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஆபாசப் பாடல்கள் பாடுதல் அல்லது ஆபாச வார்த்தைகளை ஒப்புவித்தல் அல்லது உச்சரித்தல்.

அதிக பட்சம் 3 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

377D

மானபங்கப்படுத்துதல்.

அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை.

503, 506 & 507

ஒரு நபர் இன்னொருவருக்கு அச்சத்தை உருவாக்கும் நோக்கில், (தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் செய்தாலும் கூட) உடல், மதிப்பு அல்லது சொத்து ரீதியாகக் காயப்படுத்தப் போவதாக மிரட்டுதல்.

அதிக பட்சம் 2 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும். தன் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்பு கொண்ட காரணத்திற்காக அதிக பட்சம் 2  வருட சிறைத்தண்டனை.

507A

தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்தல். இது ஒருவருடன் எந்தவொரு வகையிலும் அல்லது எந்தவொரு வழிமுறையிலும் தொடர்பு கொள்ளல் அல்லது தொடர்பு கொள்ள முயற்சித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.

அதிக பட்சம் 3 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

507B

தொந்தரவு, மனவேதனை, பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்துதல்.

அதிக பட்சம் 3 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

 

507C

ஒருவரைத் தொந்தரவு, மனவேதனை, பயம் அல்லது பதற்றம் உணரச் செய்யும் வகையில் அவ்வாறான உணர்வுகளை ஏற்படுத்துதல்.

அதிக பட்சம் 1 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

507D.(1)

ஒருவருக்குச் சேதம் விளைவிக்கப்படும் என அவரை நம்ப வைத்தல்.

அதிக பட்சம் 1 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

507D.(2)

ஒருவருக்குச் சேதம் ஏற்படும் என நம்ப வைத்து, அவ்வாறான தூண்டுதலால் தற்கொலை முயற்சிக்கோ அல்லது தற்கொலை செய்து கொண்டதற்கோ காரணமாக இருத்தல்.

அதிக பட்சம் 10 வருட சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

507E

தொந்தரவு, மனவேதனை, பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் எந்தவொரு நபரின் தனி அடையாளத் தகவல்களை வெளியிடுதல், பரப்புதல் அல்லது கிடைக்கச் செய்தல்.

அதிக பட்சம் 3 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

507F

ஒருவருக்குச் சேதம் விளைவிக்கப்படும் என நம்ப வைத்து, அல்லது அந்த நபருக்கும் அவருடன் தொடர்புடைய நபருக்கும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையை உருவாக்கும் வகையில், அவரின் அடையாளத் தகவல்களை வெளியிடுதல், பரப்புதல் அல்லது கிடைக்கச் செய்தல்.

அதிக பட்சம் 1 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

507G

507D, 507E மற்றும் 507F பிரிவுகளுடன் தொடர்புடைய “சேதம்”, “அடையாளத் தகவல்” மற்றும் “தொடர்புடைய நபர்” என்ற சொல்லின் பொருள்

சேதம் என்பது ஒரு நபரின் உடல், மனம், நற்பெயர் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதத்தை குறிக்கும். இதில் உளவியல் பாதிப்புகளும் அடங்கும்.

அடையாளத் தகவல் என்பது ஒரு நபரை அடையாளம் காணவோ அல்லது அடையாளம் காணும் நோக்கத்திலோ

பயன்படுத்தப்படும் எந்தவொரு தகவலையும் குறிக்கும்.

தொடர்புடைய நபர் என்பது, குறிப்பிட்ட நபருடன் தொடர்புடைய, ஒருவருக்கு முன் குறிப்பிட்ட நபரின் பாதுகாப்பு அல்லது நலன் குறித்து அச்சம் அல்லது கவலை ஏற்படுவதைக் குறிக்கிறது.

பிரிவுகள் 507D, 507E, 507Fஐப் பார்க்கவும்.

509

ஒருவரை மானபங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் மற்றும் உடல்மொழியைப் பயன்படுத்துதல்.

அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 மற்றும் குற்றவியல் சட்டத்தில் 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் தொடர்பில் சமூகநல அமைப்புகள் ஒன்றிணைந்து தங்கள் கருத்தினைப் பதிவிட்டன. இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள, குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா மற்றும் இணையப் பாதுகாப்பு மசோதா குறித்த இணைய பாதுகாப்பு மேம்பாட்டுக் குழுவின் கூட்டு மகஜரின் பகுதி 1 மற்றும் 2-ஐ படிக்கவும். மேலும் SOAC மற்றும் ECWA மேம்பாட்டுக் குழுவினரின் 4 டிசம்பர் 2024 தேதியிட்ட, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இல் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களைப் பற்றிய செய்திக் குறிப்பை பார்க்கவும்.

சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (SOAC)

பிரிவு

குற்றம்

தண்டனை

5

சிறார் பாலியல் வன்முறைப் படங்களை உருவாக்குதல், தயாரித்தல், இயக்குதல்.

அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 6 கசையடிகள்.

6

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை உருவாக்கும், தயாரிக்கும் அல்லது இயக்கும் ஆயத்த வேலைகளில் ஈடுபடுதல்.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி கொடுக்கப்படலாம்.

7

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை உருவாக்கும், தயாரிக்கும், இயக்கும் ஆயத்த வேலைகளில் சிறாரைப் பயன்படுத்துதல்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 5 கசையடிகள்.

8

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை பரிமாறிக்கொள்ளுதல், பிரசுரித்தல்.

அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 3 கசையடிகள்.

9

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை சிறாருக்கு விற்றல்.

அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 5 கசையடிகள்.

10

சிறார் பாலியல் வன்முறைப் படத்தைக் காணுதல்.

 

அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சம் RM10,000 அபராதம் அல்லது இவ்விரண்டும்.

11

சிறாருடன் பாலியல் ரீதியாகத் தொடர்புகொள்ளுதல் (கல்வி, அறிவியல்/மருத்துவ காரணங்களைத் தவிர).

அதிகம் பட்சம் 3 வருட சிறைத்தண்டனை.

12

சிறாரை வசப்படுத்துதல்.

அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்  கசையடி.

13

சிறாரை வசப்படுத்திய பிறகு சந்தித்தல்.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்  கசையடி.

14

சிறார் மீது உடல் ரீதியான பாலியல் தாக்குதல்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.

15

 

 

சிறார் மீது உடல் ரீதியாக அல்லாத பாலியல் தாக்குதல். எ.கா: பாலியல் நோக்கத்திற்காகச் சிறார் தன் உடலை அடுத்தவருக்குக் காண்பிக்கச் செய்தல்.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் RM20,000 அபராதம் அல்லது இவை இரண்டும்.

15A

 

சிறாரின் பாலியல் காட்சிகள்

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிக பட்சம் மவெ.50,000 அபாதம்

15B

பாலியல் பலாத்காரத்தின் வழி சிறாரிடமிருந்து பணம் பறித்தல்

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

16

நம்பிக்கைக்குரிய ஓர் உறவு முறையில் உள்ள ஒருவர் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்திருந்தால், அதற்கான தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். நம்பிக்கைக்குரிய உறவுகளின் கீழ் வருபவர்கள் வருமாறு:-

அ) பெற்றோர்/காப்பாளர்/உறவினர்

ஆ) குழந்தை பராமரிப்பாளர்

இ) ஆசிரியர்/ விரிவுரையாளர்/விடுதிக் காப்பாளர்

ஈ) சுகாதாரப் பராமரிப்பாளர்கள்

உ) பயிற்றுநர்

ஊ) அரசுப் பணியாளர்

இவர்களின் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கப்படும் அதே வேளையில், கூடுதலாக, அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 2 கசையடிகளும் கொடுக்கப்படும்.

 

19

தகவல் கொடுக்கத் தவறுதல் – சிறார் பாலியல் கொடுமை பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுக்கத் தவறிய எவரும் குற்றம் புரிந்தவர் ஆவார்.

அதிக பட்சம் மவெ. 5,000 அபராதம் விதிக்கப்படுவர்.

25

கசையடி தொடர்பான சட்டங்கள்:  இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் 50 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்தால்.

இவருக்கும் கசையடி கொடுக்கப்படலாம்.

 

26

புனர்வாழ்வு ஆலோசனை.

கொடுக்கப்பட்ட தண்டனையையும் சேர்த்து, ஒருவர் தடுத்து வைக்கப்படும் காலக்கட்டம் வரைக்கும், நீதிமன்றம் அவரின் புனர்வாழ்வுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆணையையும் பிறப்பிக்கலாம்.

27

காவல்துறை கண்காணிப்பில் இருத்தல்.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில், அவருடைய தண்டனை முடிவடைந்த பிறகு, ஒரு வருடத்திற்குக் குறையாமலும் மூன்று வருடத்திற்கு மேற்போகாமலும் காவல்துறை கண்காணிப்பின் கீழ் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடலாம்.

சிறார் சட்டம் 2001 மற்றும் சிறார் (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2016

பிரிவுகுற்றம்தண்டனை
15ஊடகச் செய்தியறிக்கை மற்றும் பிரசுரிப்புக் கட்டுப்பாடுகள்- குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கையில் உள்ள சிறாரின் பெயர், முகவரி, கல்விக் கழகம், படம் அல்லது அந்தச் சிறாரின் அடையாளத்தைக்  காட்டிக்கொடுக்கும் வகையில் எந்த விபரங்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது.அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் மவெ.10,000 அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.
17(2c)

பாலியல் தன்மை கொண்ட கீழ்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் சிறார் பங்கு கொண்டிருந்தாலோ அல்லது பார்வையாளராக இருந்திருந்தாலோ அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் பட்டிருக்கிறார் என்று பொருள்படும்.

  1. ஆபாசப் படங்கள், இழிந்த அல்லது அருவருப்பான பொருள்கள், படங்கள்,  பட ஒளிநாடாக்கள், காணொளிகள் அல்லது செயல் காட்சிகள்; அல்லது
  2. ஒருவரின் அல்லது இன்னொருவரின் பாலியல் திருப்திக்காக பாலியல் ரீதியாகப் பயன்படுத்துதல்
 
27,28,29

தகவல் அளிப்பதற்கான கடமை –

குறிப்பிட்ட சிறார் மோசமாக நடத்தப்பட்டதால், புறக்கணிக்கப்பட்டதால், கைவிடப்பட்டதால் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டதன் காரணமாக அவர் உடல் அல்லது மன ரீதியாகக் காயப்பட்டிருந்தால், மருத்துவ அதிகாரி அல்லது மருத்துவர், அல்லது குடும்ப உறுப்பினர், அல்லது சிறார் பாதுகாப்பாளர் இதனை சமூகநல இலாகா அதிகாரியிடம் தெரியப்படுத்த வேண்டும்.

தகவல் அளிக்கத் தவறினால், அதிக பட்சம் 2 வருட சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் மவெ. 5,000 அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.
29A

தகவல் அளிப்பதற்கான கடமை –

பிரிவு 27, 28, 29-இல் குறிப்பிட்டுள்ளதைத் தவிர்த்து, மோசமாக நடத்தப்பட்டதால், புறக்கணிக்கப்பட்டதால், கைவிடப்பட்டதால் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டதன் காரணமாக சிறார் உடல் அல்லது மன ரீதியாக காயப்பட்டிருப்பதாக நம்பும் வேறு எவரும் இதனை சமூக நல அதிகாரியிடம் அறிவிக்கலாம்.

தண்டனை இல்லை.
31(1)

சிறார் மற்றும் பதின்மர்கள் மோசமாக நடத்தப்படுதல் –

சிறாரைப் பராமரிக்கும் எவரும்:

அ) சிறாருக்கு உடல் மற்றும் மன ரீதியாகக் காயப்படுத்தும் வகையில் துன்புறுத்துதல், புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் விடுதல்; அல்லது

ஆ) சிறாரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், அல்லது இலக்காக்குதல் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க அனுமதித்தல்.

அதிக பட்சம் மவெ. 50,000 அபராதம் அல்லது அதிக பட்சம் 20 வருட சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டும். கூடுதலாக, நன்னடத்தை மற்றும் சமூக சேவை செய்வதற்காக ஒப்பந்த ஆணை பிறப்பிக்கலாம்.
32

சிறார் மற்றும் பதின்மரை பிச்சை எடுக்க அல்லது வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடாது –

இது போன்ற நடவடிக்கைகளில் சிறார் ஈடுபடுவதற்குக் காரணமாக இருக்கும் எவரும் தண்டிக்கப்படுவர்.

அதிக பட்சம் மவெ.20,000 அபராதம் அல்லது அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு வழங்கப்படலாம்.  கூடுதலாக, நன்னடத்தை மற்றும் சமூக சேவை செய்வதற்காக ஒப்பந்த ஆணை பிறப்பிக்கலாம்.
33நியாயமான கண்காணிப்பு இல்லாமல் சிறார் மற்றும் பதின்மர்களை விட்டுச் செல்லும் எவரும் தண்டிக்கப்படுவர்.அதிக பட்சம் மவெ.20,000 அபராதம் அல்லது அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு வழங்கப்படலாம்.  கூடுதலாக, சமூக சேவை செய்ய ஆணையிடப்படலாம்..
116சிறாருக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது எனத் தகவல் கொடுக்கும் எவரும் சட்டக் கடப்பாடுகளுக்கோ அல்லது அவதூறுகளுக்கோ உள்ளாக்கப் படமாட்டார், அல்லது தொழில் நெறிகளை அல்லது கோட்பாடுகளை மீறியதாக அல்லது இது போன்ற தகவல்களைக் கொடுப்பதன் மூலம் நடைமுறை தொழில்சார் கோட்பாடுகளிலிருந்து வழுவியதாக கருதப்படமாட்டார்.தண்டனை இல்லை.

இணையவழி தொடர்பான பயனான தகவல்களைப்  பாருங்கள்.

இணையவழி வன்முறை பக்கத்திற்குத் திரும்பவும்.