உதவி பெறுதல்
நீங்கள் இணையவழி வன்முறைக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்?
உங்களைக் குறி வைப்பவரின் எல்லா தொடர்புகளையும் தடுத்தல் மற்றும் துண்டித்தல்
- உங்களைக் குறி வைப்பவரின் எல்லா தொடர்புகளையும் நிறுத்துங்கள். அவரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காதீர்கள். அவரின் கைப்பேசி எண் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்யுங்கள்.
- தேவைப்பட்டால் உங்கள் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மாற்றுங்கள்.
- சமூக ஊடகக் கணக்குகளின் கடவுச்சொல்களை உடனடியாக மாற்றுங்கள். எளிதில் ஊடுருவ முடியாத கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். வெவ்வேறு கணக்குகளுக்கென்று வெவ்வேறு கடவுச் சொல்லை வைத்திருங்கள்.
- தீம்பொருள்களுக்கு எதிரான மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வது நல்லது. கைப்பேசியையும் கணினியையும் தொடர்ந்து ஊடுருவுங்கள் (scan).
உங்கள் சமூக ஊடகக் கணக்குகளை தற்காலிகமாக விடுபதிகை (log out) அல்லது செயல்நீக்கம் செய்யுங்கள்.
உங்களுக்கு நிகழும் சம்பவங்கள் மற்றும் ஆதாரங்களைப் பதிவு செய்யவும்
சம்பவம் எப்பொழுது, எங்கு மற்றும் எப்படி நிகழ்ந்தது போன்ற விபரங்களைப் பதிவு செய்யவும். உங்களுக்குக் கொடுமை இழைத்தவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க நினைத்தால் இணையவழி வன்முறைக்கான ஆதாரமாகத் திரைநிலைப்படம், படங்கள் மற்றும் உரைச் செய்திகளைக் காட்ட வேண்டியது அவசியமாகும். எல்லாத் தொடர்பாடல்களையும் பதிவு செய்து அவற்றை கணினி, கைப்பேசி தொழில்நுட்பங்களில் சேமிப்பதோடு மட்டுமல்லாமல் அதன் பிரதிகளையும் உங்களோடு வைத்துக்கொள்ளவும். இணையவழி ஆதாரங்களை அழித்துவிட வேண்டாம்.
சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர்களிடம் புகார் பதிவு செய்யவும்
எல்லா ஆதாரங்களையும் நீங்கள் பதிவு செய்தபிறகு சம்பந்தப்பட்ட சேவை வழங்நர்களைத் தொடர்புகொண்டு உங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்வது அவசியம். முகநூல், கீச்சகம், படவரி போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கென்று சொந்தப் புகார் பதிவு வழிமுறைகள் உண்டு. எப்படிப் புகார் பதிவு செய்வது என்பதைக் கண்டறிந்து குறிப்பிட்ட சமூக ஊடகத் தளத்தில் புகார் பதிவு செய்யவும். அப்படிச் செய்வதன் மூலம் இணையத்தளத்தில் உள்ள உங்களைப் பற்றிய தகாத செய்திகள் அல்லது கருத்துகள் நீக்கப்படலாம்.
நம்பிக்கைக்குரியவரிடம் கூறவும்
நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் இந்த சம்பவம் பற்றி நீங்கள் சொல்வது முக்கியமாகும். பாதிப்புக்கு உள்ளான ஒருவர் அனுபவிக்கும் பயம், பதற்றம் மற்றும் ஆதரவற்ற மனநிலையிலிருந்து தற்காத்துக்கொள்ள இது உதவும். நீங்கள் சிறாராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் போன்று நீங்கள் நம்பும் ஒருவரிடம் இதைப்பற்றி பேசுவது நல்லது.
பெண்கள் அமைப்பிடமிருந்து உதவி பெறுங்கள்
பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் போன்ற பெண்கள் அமைப்புக்குத் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரடியாகச் சென்றோ பேசவும். பெண்கள் மறுமலர்ச்சி நிலையம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆலோசனை சேவைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குகிறது.
மருத்துவ மற்றும் துறைசார் சேவைகளைப் பெறுங்கள்
இணையவழி வன்முறைகளால் ஒருவருக்கு குறுகிய அல்லது நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் மனநலத்தை மேம்படுத்தும் பொருட்டு மனநல மருத்துவரிடமிருந்து அதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும். இணையவழி வன்முறையால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, இந்த மனநல மதிப்பீட்டு அறிக்கைகளை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
காவல்துறையில் புகார் அளிக்கவும்
வன்முறையாளருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கவும். நீங்கள் சேகரித்த ஆதாரத்திற்கான எல்லா பொருள்களையும் உடன் கொண்டு செல்லுங்கள். காவல்துறை புகாருக்கு தேவைப்படும் தகவல்கள் வருமாறு:-
- எப்பொழுது அது நடந்தது – சம்பவம் நிகழ்ந்த தேதி மற்றும் நேரம்.
- எந்த இணையத்தளத்தில் அது நிகழ்ந்தது?
- யார் அதில் சம்பந்தப்பட்டுள்ளார்? – சந்தேக நபரின் அடையாளம் மற்றும் அவரை விவரித்தல்.
- என்ன சம்பவம் நிகழ்ந்தது? – சம்பவம் குறித்த துல்லிய விபரங்கள்.
- எப்படி மற்றும் அத்தனை முறை அது நிகழ்ந்தது?
- சம்பவம் உங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? சேதங்கள், இழப்புகள், காயங்கள், மனம், மன அழுத்தம், இன்னும் பல.
ஏன் புகார் செய்யப்படுகிறது? நடவடிக்கை எடுக்க, பாதுகாப்பு நோக்கத்திற்காக, இன்னும் பல.
காவல்துறை விசாரணை செய்து அதன் முடிவுகளை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கும். சந்தேகத்திற்குரிய நபர் மீது குற்றம் சாட்டப்படுமா என்பதனை அரசாங்க வழக்கறிஞர் முடிவு செய்வார். போதுமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார். இல்லாவிடில், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது.

நீங்கள் குடும்ப வன்முறை மற்றும் சிறார் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால், கூடுதல் விபரங்களுக்காகப் பெண்கள் மறுமலர்ச்சி மைய அகப்பக்கத்தின் குடும்ப வன்முறை, கற்பழிப்பு மற்றும் சிறார் பாலியல் துன்புறுத்தல் பகுதியைப் பார்க்கவும்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) மற்றும் சைபர்999 CYBER999 (MyCert) ஆகியோரிடம் புகார் பதிவு செய்யலாம்.
நீங்கள் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமும் (MCMC) புகார் பதிவு செய்யலாம். புகாரை இணையவழி மூலமாக அல்லது குறிப்பிட்ட ஆணையத்தில் எந்த அலுவலகத்திலும் நேரடியாகப் பதிவு செய்யலாம். உங்கள் புகார் பதிவுக்குக் குறியீட்டு எண் வழங்கப்படும். முதலில் நீங்கள் காவல்நிலையத்தில் புகார் செய்துவிட்டு அந்தப் புகாரை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் புகாரோடு இணைத்து அளிக்கலாம். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சைபர்999-ஐயும் தொடர்புகொள்ளலாம்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் சைபர்999 விபரங்கள் வருமாறு:
- அவசர எண்: 1800-188-030
- புலனம்: 016-220 6262
- இணையதளப் புகார்: https://aduan.skmm.gov.my/
- சம்பந்தப்பட்ட செயலியைக் கூகள் பிளேஸ்டோர் அல்லது ஐஓஎஸ் செயலி ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யுங்கள்.
- இணையதளத்தின் மூலம் புகார் அளித்தல்: https://www.mycert.org.my/
- சைபர்999 அவசர எண் (அலுவலக நேரம் மட்டும்): 1-300-88-2999
- சைபர்999 ஆபத்துகாலம் (24 மணி நேரம்): 019-266 5850
- சைபர்999 எஸ்.எம்.எஸ் அறிக்கை: 15888
- கீச்சகம்: @mycert
மின் அஞ்சல்: cyber999@cybersecurity.my
இணையவழி தொடர்பான பயனான தகவல்களைப் பாருங்கள்.
இணையவழி வன்முறை பக்கத்திற்குத் திரும்பவும்.
