கற்பனையும் உண்மை நிலையும்

கற்பனை: அன்பை அடிப்படையாகக் கொண்டிராத திருமணங்களில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு மனைவிமார்கள் துன்புறுத்தப்படுவர்.
உண்மை நிலை: காதல் திருமணத்தில் கொடுமைகள் நிகழாது என்று கூறிவிட முடியாது. காதல் திருமணங்கள், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள், இரண்டிலுமே மனைவிமார்கள் கொடுமை செய்யப்படுகிறார்கள்.

கற்பனை: மது மற்றும் போதைப்பொருள் வன்முறையைத் தூண்டும்.
உண்மை நிலை: போதையில் இருந்ததை வன்முறை நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காகச் சொல்லிக்கொள்ளலாம். அது அடிப்படைக் காரணமல்ல. பெரும்பாலான வன்முறை அடங்கிய உறவுகளில் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பது ஒரு காரணமாக வைக்கப்படுகிறது. ஆனாலும், கொடுமைப்படுத்துவதும் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதும் இரு வெவ்வேறு விஷயங்களாகும். ஒருவர் மது அருந்துவது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும் கூட, கொடுமைப்படுத்துவதைத் தொடரக்கூடும். தன்னுடைய இந்த வன்முறை செயலுக்கு வேறு ஏதாவது அல்லது யாராவது காரணம் என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பார்.

கற்பனை: ஏழ்மை நிலையில் உள்ள, கல்வி அறிவு அற்ற ஆண்களே தங்கள் மனைவிமார்களைத் துன்புறுத்துகிறார்கள்.
உண்மை நிலை: சமூகத்தின் எல்லா நிலையில் உள்ள ஆண்களும் தங்கள் மனைவிகளைக் கொடுமைப்படுத்துகின்றனர். பரவலாகப் பார்ப்பதற்கு, குடும்ப வன்முறை ஏழைகளின் பிரச்சனை போன்று தோன்றலாம். ஏனெனில் நடுத்தர மற்றும் மேல் வர்க்கப் பெண்களுக்கு, தங்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. குறைவான வாய்ப்பு வளங்களைக் கொண்ட கொடுமைப்படுத்தப்பட்ட பெண்கள், காவல்துறை மற்றும் மருத்துவமனைகளின் உதவியை நாடுவதால் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகமாக வெளித்தெரிகிறது.

கற்பனை: தங்கள் சொந்த வாழ்வின் இதர துறைகளில் தோல்வியைத் தழுவும் ஆண்களே மனைவிகளைத் துன்புறுத்துகிறார்கள்.
உண்மை நிலை: தங்கள் தொழிலில் வெற்றிகரமாக இருக்கும் ஆண்களும் கூட மனைவிகளை அடிக்கிறார்கள். சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் ஆண்களினால் துன்புறுத்தப்படும் மனைவிமார்கள் அதனை வெளிச்சொல்லத் தயங்குகிறார்கள். அப்படி வெளிச்சொன்னால் கணவன்மார்களின் சமுதாய அந்தஸ்து, வியாபாரம், தொழில் ஆகியவை பாதிக்கப்படும். பொருளாதார ரீதியாகக் கணவனையே இவர்கள் நம்பியிருப்பதால் இவர்களுக்கு இது பாதகமாய் அமைந்துவிடும்.

கற்பனை: பெண்கள் வன்முறையைத் தூண்டும் அளவுக்கு ஏதாவது செய்திருப்பர்.
உண்மை நிலை: வன்முறையைப் பிரயோகிக்கும் வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகளுக்கு பெண்களையும் சேர்த்து, வேறும் யாரும் காரணமல்ல. துன்புறுத்துபவர் இதனை ஏற்க மறுத்தாலும், அவர் செய்யும் கொடுமைகளுக்கு அவர் மட்டுமே காரணம். “அவளுடைய தவறு” என்ற வாசகத்தை வன்முறையைக் கையாளும் பெரும்பாலான கணவன்மார்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான சம்பவங்களில் பெண்கள் துன்புறுத்தும் கணவன்மார்களிடம் நயந்து போகவே முயற்சிக்கின்றனர். பெண்களின் நடத்தை எப்படிப்பட்டதாக இருந்தாலும், துன்புறுத்துபவர் தொடர்ந்து வன்முறையையே கையாளுகிறார்.

கற்பனை: பெண்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வன்முறை நிறைந்த உறவிலிருந்து விலகிச் செல்லலாம்.
உண்மை நிலை: விலகிச் செல்ல பயப்படுவதும், குற்ற உணர்வுமே பெண்கள் வன்முறை நிறைந்த உறவுகளில் பெரும்பாலும் நிலைத்திருப்பதற்குக் காரணமாகும். சில நேரங்களில், குழந்தைகள் பொருட்டோ அல்லது பொருளாதார ரீதியாக கணவனை நம்பியிருப்பதாலோ அவர்கள் வன்முறை உறவில் நிலைத்திருக்கிறார்கள்.

கற்பனை: வன்முறை உறவுகளைச் சீர்படுத்தவே முடியாது.
உண்மை நிலை: வன்முறையான உறவில் மாற்றங்களைக் கொண்டு வருவது வன்முறையாளரின் கையில்தான் உள்ளது. அவருடைய வன்முறை நடவடிக்கைகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். துன்புறுத்துபவர் தன்னுடைய நடவடிக்கைகளில் உள்ள கோளாறுகளை ஏற்றுக்கொண்டு, மாற எண்ணங்கொண்டு, ஆலோசனையை நாடிச் செல்வாரானால், அவர் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வன்முறையாளர் தன்னுடைய செய்கைக்குப் பொறுப்பேற்காமல், மாறுவதற்கு மறுத்தால், பாதிக்கப்பட்டவர் வன்முறை இல்லாத ஒரு வாழ்க்கையைத் தேர்வு செய்ய அவரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். தன் வாழ்க்கைக்கான ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொண்டு, அவருக்கான நன்மதிப்புகளில் நம்பிக்கை வைத்து, கிடைக்கும் வளங்களையும் ஆதரவுகளையும் விரிவாக்கி செயல்படுவாரானால், தன் வாழ்க்கையில் மனநிறைவை ஒரு பெண் அடைய முடியும்.

குடும்ப வன்முறை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.

குடும்ப வன்முறை முகப்புப்பக்கத்திற்குத் திரும்பு