உதவி பெறுதல்

நீங்கள் வன்முறைக்கு ஆளாகியிருந்தால் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் துன்புறுத்தப்பட்டிருந்தால், நீங்கள் உடனடியாக உதவியை நாட வேண்டும்.

கொடுமைக்கு இலக்கானவருக்கு உதவி செய்வது எப்படி?

பாதிக்கப்பட்டவர் அனுபவிக்கும் கொடுமைகளை நிறுத்த அவருக்கு உதவ வேண்டியது அவசியமாகும். சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர் தன்னைக் கொடுமைப்படுத்தியவர் மீது புகார் அளிக்கத் தயாராக இருக்க மாட்டார். புகார் செய்வதற்கு முன்பதாக அவருக்கு ஆதரவும் ஆலோசனையும் தேவைப்படும். அவருக்கு ஆதரவளித்து நீங்கள் உங்கள் பங்கை ஆற்றலாம். அதோடு, பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) போன்ற அரசாங்க சார்பற்ற அமைப்புகள், நடவடிக்கை எடுப்பதற்கு முன்பதாக, குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடைய தேவையைப் புரிந்துகொள்ளலாம். குடும்ப வன்முறை சட்டம் 1994-ன் படி, குடும்ப வன்முறை என்பது ஒரு குற்றச் செயலாகும். ஆகையால் குடும்ப வன்முறைக்கு இலக்கானவர் நடவடிக்கை எடுக்க நினைத்தால் அதற்கு காவல்துறை, சமூகநல இலாகா மற்றும் மருத்துவமனைகள் போன்ற அரசாங்கத் தொண்டு நிறுவனங்கள் அவருக்கு உதவும்.

குடும்ப வன்முறைக்கு ஆளானவருக்கு ஆதரவு அளிப்பது எப்படி?
நீங்கள் என்ன செய்ய வேண்டும்
  • பாதிக்கப்பட்டவர் உங்களிடம் தனியாக அமர்ந்து பேசுவதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யுங்கள்.
    தான் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது என்ற அவமான உணர்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு இருக்கக்கூடும். ஆகையால், அவருடைய குமுறல்களைக் கேட்கும்பொழுது அது இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்று அவருக்கு உறுதியளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு அவருடைய வேதனைகளை யாராவது செவிமடுத்தால் போதுமானது அல்லது கொடுமைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கலாம். பாதிக்கப்பட்டவர் செய்ய விரும்பாதவற்றை செய்யுமாறு அவரை வற்புறுத்தலாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • பாதிக்கப்பட்டவரின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுங்கள். குடும்ப வன்முறை பாதிக்கப்பட்டவரின் தவறு கிடையாது என்பதை அவருக்கு வலியுறுத்துங்கள்.
    தன்னை யாரும் நம்பவில்லை என்று பாதிக்கப்பட்டவர் நினைக்கக்கூடுமானால், அவருக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளிச்சொல்லமாட்டார். இதனால் அவருக்கு உதவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். சில சமயங்களில் நிகழ்ந்த கொடுமைக்கு தன்னையே அவர் குற்றம் சொல்லிக்கொள்ளக்கூடும். யாரும் யாரையும் கொடுமைப்படுத்தக் கூடாது என்றும் குடும்ப வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றும் அவருக்கு நினைவூட்டுங்கள்.
  • பாதிக்கப்பட்டவருக்கு மதிப்பளித்து அவரின் குடும்ப வன்முறையை இரகசியமாக வைத்திருங்கள்.
    பாதிக்கப்பட்டவர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அவருடைய நிலைமையை இரகசியமாக வைத்திருங்கள். இது வன்முறையாளர் அவரைப் பழி வாங்குவதிலிருந்து பாதுகாக்கும். பொதுமக்கள் அவருடைய பிரச்சனையை ஆராய்வதும் தடுக்கப்படும்.
  • பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்கள் உதவியை நாடி வரும்பொழுது அவர் துன்புறுத்தப்பட்டிருந்ததாக நீங்கள் அறிந்தால், பாதுகாப்பு பொருட்டு அவரை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
  • பாதிக்கப்பட்டவரின் பின்புலன்களை அறிந்து வைத்திருங்கள்; உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவரின் இனம், மொழி, கலாச்சாரத் தடைகள் அல்லது குடிநுழைவுத் தகுதி.
    ஒருவரின் நாடு, இனம் மற்றும் குடிநுழைவுத் தகுதி ஆகியவை பாராது குடும்ப வன்முறை சட்டம் 1994 எல்லோருக்கும் பொதுவானது. நீங்கள் பேசும் மொழி பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது அல்லது சரளமாகப் பேச முடியாது என்றால் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியை நாடுங்கள். உரக்கப் பேசுவதால் ஒருவர் உங்கள் மொழியை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்.
  • தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவருடன் நீங்களும் காவல் நிலையத்திற்குச் சென்று வர உதவுவதாகக் கூறுங்கள்.
    குடும்ப வன்முறைக்கு உள்ளான ஒருவர் தனித்துக் காவல் நிலையத்திற்குச் செல்லப் பயப்படலாம். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியாதிருக்கலாம். அவருக்குச் சொந்தப் போக்குவரத்து இல்லாமல் இருக்கலாம். இது போன்ற நிலையில் அவருடன் காவல் நிலையத்திற்குச் செல்வது அவருக்குப் பேராதரவாக இருக்கும்.
  • பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால், அவரை நேரடியாக அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லுங்கள்.
    குடும்ப வன்முறைக்கு ஆளானவர் காயம் விளைவிக்கப்பட்டிருந்து அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான ஆதாரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இது காவல்துறை விசாரணைகளுக்கு உதவியாக இருக்கும்.
 

எதைச் செய்யக்கூடாது

  • பாதிக்கப்பட்டவர் மீது பழி போடாதீர் அல்லது வன்முறைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டவர் என்ன செய்தார் என்று கேட்கக்கூடாது.
    இது போன்ற கேள்விகள் (எ.கா: அந்த அளவுக்கு நீ என்ன செய்தாய்?) பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடுவதாக அமையும். குடும்ப வன்முறை என்பது ஓர் உறவு முறையில் நிகழும் அதிகாரத் துஷ்பிரயோகமாகும். கொடுமையை இழைத்தவரே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடுவது (எ.கா: நீ ஏன் அப்படிக் கூறினாய்? அதனால்தான் அவருக்கு ஆத்திரம் வந்திருக்கிறது!”) அவரை நொந்து போகச் செய்யும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் உங்களுடைய வாய்ப்பும் பறிபோகும்.
  • வன்முறையை அற்பமாகக் கருதிவிடாதீர். கொடுமைப்படுத்தியவரை மன்னிக்குமாறு பாதிக்கப்பட்டவருக்குப் பரிந்துரைக்காதீர். அல்லது பொறுமையாக இருந்து மறுபடியும் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்ளாதீர்.
    குடும்ப வன்முறை ஒரு தீவிர பிரச்சனை ஆகும். அது உடல் மற்றும் மன ரீதியான சேதங்களை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், மிகவும் மோசமான சூழலில் மரணமும் சம்பவிக்கும். ஒரு தடவை குடும்ப வன்முறை தொடங்கிவிட்டால், அதற்கான நடவடிக்கையில் இறங்காத வரை அதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டேதான் போகும். ஆகையால் குடும்ப வன்முறையின் ஆரம்ப அறிகுறிகளை இனங்கண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவருக்காக நீங்கள் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அல்லது பாதிக்கப்பட்டவர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
    அவர் சார்பாக நீங்கள் முடிவு எடுப்பது அல்லது அவரை முடிவெடுக்கக் கட்டாயப்படுத்துவது போன்றவற்றைச் செய்துவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். முடிவெடுப்பதில் அவருக்கான தேர்வுகளை அளித்து அந்தத் தேர்வில் இருக்கும் பின்விளைவுகளை நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். வன்முறை சுழற்சியை உடைப்பது என்பது பாதிக்கப்பட்டவர் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவாகும். அவர் முடிவெடுப்பதற்கான நேரத்தையும் அவகாசத்தையும் கொடுங்கள்.
  • பாதிக்கப்பட்டவருக்கு அவரைக் கொடுமை செய்தவரோடு சேர்ந்து சந்திப்பு நடத்த பரிந்துரைக்காதீர்.
    குடும்ப வன்முறை என்பது ஓர் உறவு முறையில் இருக்கும் அதிகாரத் துஷ்பிரயோகமாகும். இதில் ஒருவர் இன்னொருவரை அடக்க நினைப்பர். ஆதலால் கொடுமைப்படுத்தியவரும், அந்தக் கொடுமைக்கு இலக்கானவரும் ஒன்றாகக் சந்திப்பது, பாதிக்கப்பட்டவரை இன்னும் அச்சுறுத்தக்கூடும். வீட்டிற்குச் சென்றவுடன் பழி வாங்கப்படுவோம் என்ற பயத்தில் அவர் மனந்திறந்து எதையும் சொல்லமாட்டார். அப்படி கொடுமைக்கு இலக்கானவரே, அவரைக் கொடுமை செய்தவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அவர்களைத் தகுதி பெற்ற ஆலோசகரிடம் அனுப்பி வையுங்கள்.
  • அப்படிப் பாதிக்கப்பட்டவர் வீட்டை விட்டு வெளியேறியிருந்தால், அவரின் புதிய இருப்பிடத்தை அவர் அனுமதி இல்லாமல் எவரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
    தன்னுடைய சொந்த பாதுகாப்புக்குப் பயந்தே கொடுமைக்கு இலக்கானவர் வீட்டை விட்டு வெளியேறுவார். ஆகையால், கொடுமை செய்தவர், கொடுமை செய்தவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தொந்தரவிலிருந்து பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்க அவருடைய புதிய இருப்பிடத்தை இரகசியமாக வைத்திருங்கள். மிகவும் மோசமான குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் மரணமடைந்திருக்கிறார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

கீழ்கண்ட அரசாங்கத் தொண்டு நிறுவனங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யும்.

 

காவல்துறையின் உதவி

காவல் நிலையத்தில் புகார் செய்வது
  1. பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்க எந்தக் காவல் நிலையத்திற்கும் செல்லலாம்.
  2. காவல்துறை அறிக்கையில், தான் எப்படிக் கொடுமைப்படுத்தப்பட்டோம் என்பதனைப் பாதிக்கப்பட்டவர் விரிவாகவும் தெளிவாகவும் எழுத வேண்டும்.
    • எப்பொழுது: எப்பொழுது அது நடந்தது? – வன்முறை நடந்த தேதிகள் மற்றும் நேரங்கள் ஆகியவை குறிக்கவும்.
    • எங்கு: எங்கு அது நடந்தது – இடம்?
    • என்ன: என்ன சம்பவம் நிகழ்ந்தது?
    • யார்: இதில் ஈடுபட்டவர் யார் மற்றும் யார் கொடுமைப்படுத்தியது?
    • எப்படி: எப்படி அது நடந்தது?
    • பாதிப்பு: சம்பவத்திற்குப் பிறகு கொடுமைப்படுத்தப்பட்டவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? சிராய்ப்புகள், காயங்கள் போன்றவை.
    • ஏன்: ஏன் புகார் செய்யப்படுகிறது? பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் பல.
  3. நேரத்தைச் சேமிக்கும் பொருட்டு, காவல் நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பதாகவே நீங்கள் விரிவான அறிக்கை ஒன்றை எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ கொண்டு செல்லலாம். காவல்துறை புகாருக்கு மலாய் அல்லது ஆங்கில மொழி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். உங்களுக்கு இவ்விரு மொழியில் பேச அல்லது எழுத முடியாது என்றால், மொழி பெயர்ப்புக்கு உதவ ஒருவரை உடன் அழைத்துச் செல்லவும்.
  4. புகார் செய்த பிறகு, முன்னிருக்கை காவல்துறை அதிகாரி புகாரின் ஒரு பிரதியை உங்களுக்குக் கொடுப்பார்.
  5. முன்னிருக்கை காவல்துறை அதிகாரி, நீங்கள் புகார் பதிவு செய்த மாவட்ட காவல் நிலையத்தின் பாலியல், பெண்கள் மற்றும் சிறார் விசாரணைப் பிரிவு (D11) அதிகாரியின் பார்வைக்கு உங்களைக் கொண்டு செல்வார்.
  6. விசாரணை அதிகாரி (IO – Investigating Officer) சம்பவங்களைத் துல்லியமாக அறிய உங்களைப் பேட்டி காணுவார்.
  7. விசாரணை அதிகாரி குடும்ப வன்முறையாளரை (சந்தேகத்திற்குரிய நபர்) விசாரணைக்கு அழைத்து அவருடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்வார்.
  8. விசாரணை அதிகாரி தன்னுடைய விசாரணை அறிக்கைகளை அரசு வழக்கு விசாரணை அலுவலகத்தில் (State Prosecution Office) சமர்ப்பிப்பார். பிறகு இங்கு சந்தேகத்திற்குரியவர் இழைத்த குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டப்படுமா என்பது முடிவு செய்யப்படும்.
  9. நீங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்ய விரும்பவில்லை என்றால் அதற்குப் பதிலாக காப்பு அறிக்கை (cover report) செய்யலாம். காப்பு அறிக்கையை காவல்துறை புகார் போன்றே செய்ய வேண்டும். ஆனால் புகாரின் இறுதியில், சம்பவத்தைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காகவே அறிக்கை செய்யப்படுகிறது என்றும் கொடுமை செய்தவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீங்கள் குறிப்பிட வேண்டும். காப்பு அறிக்கையில் குடும்ப வன்முறை சம்பவம் பதிவு செய்யப்படும். ஆனால் இது விசாரணைக்குக் கொண்டு செல்லப்படாது.
இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு (IPO) விண்ணப்பித்தல்

இடைக்கால பாதுகாப்பு ஆணை (IPO – Interim Protection Order), குடும்ப வன்முறையின் ஒரு முக்கியமான சட்டப்பிரிவு ஆகும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர், அவர் குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு தற்காலிக சட்டப் பாதுகாப்பினை இந்த இடைக்கால பாதுகாப்பு ஆணை கொடுக்கிறது. துன்புறுத்தும் கணவன், பெற்றோர் மற்றும் உறவினர், பாதிக்கப்பட்டவரை மென்மேலும் கொடுமைப்படுத்தாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்படும் நீதிமன்ற உத்தரவே இந்த இடைக்கால பாதுகாப்பு ஆணை. காவல் துறை விசாரணைகளை மேற்கொள்ளும் வரை இந்த இடைக்கால பாதுகாப்பு ஆணை செல்லுபடியாகும். இடைக்கால பாதுகாப்பு ஆணை மென்மேலும் கொடுமைகள் நிகழ்வதைத் தடுக்கிறது.

  1. உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தைகளுடைய பாதுகாப்பு பற்றி நீங்கள் பயந்தால், அல்லது வன்முறையாளர் மென்மேலும் உங்களைத் துன்புறுத்தினால், இடைக்கால பாதுகாப்பு ஆணை பெற விரும்புவதை விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இடைக்கால பாதுகாப்பு ஆணையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் உங்களுடைய குழந்தைகள் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்குமாறும் நீங்கள் விசாரணை அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளலாம்.
  2. நீங்கள் இடைக்கால பாதுகாப்பு ஆணை பெற்றாக வேண்டும் என்று விசாரணை அதிகாரி முடிவு செய்தால், வழக்கை காவல்துறை விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பரிந்துரைக் கடிதம் ஒன்றை உங்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் பிறகு இந்தக் கடிதத்தை உங்கள் அடையாள அட்டை, குழந்தைகளின் பிறப்புப் பத்திரம்/ அடையாள அட்டை, அரசாங்க மருத்துவ அறிக்கை (அப்படி இருந்தால்) ஆகியவற்றோடு சேர்த்து சமூக நல இலாகாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இடைக்கால பாதுகாப்பு ஆணை பெறுவதற்குச் சமூக நல இலாகா உங்களுக்கு உதவும். இடைக்கால பாதுகாப்பு ஆணையின் ஒரு பிரதி உங்களுக்கு அளிக்கப்படும்.
  3. உங்களுடைய உடைமைகளை எடுப்பதற்காக வீட்டிற்குச் செல்வதற்கு அதிகம் பயந்தால், உங்கள் வீட்டிற்கு, ஒரு காவல் அதிகாரி துணையாக வர வேண்டும் என்று விசாரணை அதிகாரியிடம் வேண்டுகோள் விடுக்கலாம்.
  4. இடைக்கால பாதுகாப்பு ஆணை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் காவல்துறை வன்முறையாளரிடம் இந்த இடைக்கால பாதுகாப்பு ஆணையைச் சேர்ப்பிக்கும்.
 
பாதுகாப்பு ஆணைக்கு (PO) விண்ணப்பித்தல்

காவல்துறை விசாரணை முடிவடைந்த பிறகு, இடைக்கால பாதுகாப்பு ஆணை செல்லுபடியாகாது. வன்முறையாளர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால், நீதிமன்றம் உங்களின் பாதுகாப்பு பொருட்டு, பாதுகாப்பு ஆணையைப் (PO – Protection Order) பிறப்பிக்கலாம்.

  1. நீங்கள் பாதுகாப்பு ஆணையைப் பெறும் பொருட்டு விசாரணை அதிகாரியிடம் மற்றும் துணை அரசு வழக்கறிஞரிடம் (DPP – Deputy Public Prosecutor) புதிய கோரிக்கையை வைக்க வேண்டும்.
  2. பாதுகாப்பு ஆணையில் கூடுதல் நிபந்தனைகள் அல்லது விதிகளை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, துன்புறுத்தியவரை உங்கள் வீடு அல்லது பணியிடத்திற்கு வரவிடாமல் தடுத்தல், அல்லது உங்களிடமிருந்து துன்புறுத்தியவரைக் குறைந்தது 50 மீட்டருக்குத் தள்ளி வைத்தல். இந்தப் பாதுகாப்பு ஆணை, ஒரு வருடம் வரைக்கும் பாதுகாப்பு கொடுக்கும்.
  3. பாதுகாப்பு ஆணை மீறப்பட்டால், நீங்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

சமூக நல இலாகாவின் உதவியைப் பெறுதல்

குடும்ப வன்முறை பாதிப்புக்கு உள்ளான உங்களுக்கு சமூக நல இலாகா (Jabatan Kebajikan Masyarakat) பல வழிகளில் உதவி செய்யும். நீங்கள் சமூக நல இலாகாவில் புகார் செய்யும் பட்சத்தில், அவர்கள்:

  • உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவர்,
  • காவல் துறையில் புகார் அளிக்க ஊக்குவிப்பர்,
  • தேவைப்பட்டால் அரசு மருத்துவமனைகளில் உள்ள One Stop Crisis Centre (OSCC) மருத்துவ சிகிச்சை பெற உங்களை ஊக்குவிப்பர்,
  • இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு (IPO) விண்ணப்பிக்க உங்களுக்கு உதவி செய்வர்,
  • துன்புறுத்தியவர் குற்றச்சாட்டப்பட்டிருந்தால், நீங்கள் பாதுகாப்பு ஆணை (PO) பெறுவதற்காக விண்ணப்பிக்க உதவி செய்வர்,
  • அவசரகால பாதுகாப்பு ஆணையைப் (EPO) பிறப்பிப்பர்,
  • தேவைப்பட்டால் தற்காலிக இருப்பிடத்தை அளிப்பர்,
  • தேவைப்பட்டால் பண உதவி செய்வர், மற்றும்/அல்லது
  • குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்களை இது தொடர்பான தொண்டு நிறுவனங்களின் பார்வைக்குக் கொண்டு செல்வர்.

இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு (IPO) விண்ணப்பிக்க உதவுதல்
  1. சமூகநல இலாகா அதிகாரி, காவல் துறையினரிடமிருந்து இடைக்கால பாதுகாப்பு ஆணை (IPO – Interim Protection Order) பெறுவதற்கான பரிந்துரை கடிதத்தைப் பெற்ற பிறகு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு விண்ணபிக்க உங்களுக்கு உதவுவார்.
  2. இடைக்கால பாதுகாப்பு ஆணையை விண்ணப்பிக்கும் பொருட்டு நீங்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்லும் நாளை சமூக நல இலாகா அதிகாரி நிர்ணயம் செய்வார்.
  3. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிபதி உங்களை விசாரிப்பார்.
  4. அப்படி உங்களுக்கு இடைக்கால பாதுகாப்பு ஆணை தேவை என்பதில் நீதிபதி திருப்தி அடைந்தால், அவர் உங்களுக்கு இடைக்கால பாதுகாப்பு ஆணையை வழங்குவார். இதில் சம்பந்தப்படும் ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் (எ.கா: சமூக நல இலாகா மற்றும் காவல்துறை) இடைக்கால பாதுகாப்பு ஆணையின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்வர். துன்புறுத்தியவருக்கான பிரதியைக் காவல்துறை அனுப்பி வைக்கும்.
  5. அப்படித் துன்புறுத்தியவர் உங்களுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால், விசாரணை அதிகாரி நடவடிக்கை எடுப்பதற்காக, நீங்கள் காவல்துறைக்கு இன்னொரு புகாரை அளிக்கலாம். இடைக்கால பாதுகாப்பு ஆணை இன்னும் செல்லுபடியாகும் என்றால், இடைக்கால பாதுகாப்பு ஆணையையும் நீதிமன்ற உத்தரவையும் மீறியதற்காக துன்புறுத்தியவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். உங்களுடைய இடைக்கால பாதுகாப்பு ஆணையோடு, கைது செய்வதற்கான அதிகாரமும் இணைக்கப்பட்டிருந்தால், விசாரணை அதிகாரி உங்களை துன்புறுத்தியவர் உடனடியாகக் கைது செய்யலாம். ஆகையால், இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பிக்கும்பொழுது, அதில் கைது செய்யும் அதிகாரத்தையும் இணைத்துத் தருமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.
 
அவசரகால பாதுகாப்பு ஆணை (EPO) வழங்குதல்
  1. உங்களுக்கு உடனடி பாதுகாப்பு தேவைப்படும் அதே நேரத்தில் காவல்துறையில் புகார் அளிக்க நீங்கள் தயார் நிலையில் இல்லை என்றால், உங்களுக்கு அருகில் உள்ள சமூக நல இலாகாவில் இதனைத் தெரிவிக்க வேண்டும்.
  2. அதிகாரம் பெற்ற சமூக நல அதிகாரி உங்களைச் சந்தித்துப் பேசி, அது தொடர்பான பாரங்களைப் பூர்த்தி செய்து, உங்களுக்கு அவசர கால பாதுகாப்பு ஆணையை (EPO – Emergency Protection Order) வழங்குவார். அவசரகால பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பம் செய்ய காவல்துறை புகார் தேவையில்லை.
  3. அவசரகால பாதுகாப்பு ஆணை 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதனைப் புதுப்பிக்க முடியாது. ஏழு நாட்களுக்குள் உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இடைக்கால பாதுகாப்பு ஆணை மற்றும் பாதுகாப்பு ஆணை போன்றே, அவசரகால பாதுகாப்பு ஆணையும் செயல்படுகிறது. துன்புறுத்தியவர் அதனை மீறினால் அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.

அரசாங்க மருத்துவமனையின் உதவி பெறுதல்

  1. நீங்கள் காயத்திற்கு உள்ளாகியிருந்தால் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும். உங்களுக்கு One Stop Crisis Centre (OSCC)* என்றழைக்கப்படும் தனி அறையில் சிகிச்சை வழங்கப்படும்.
  2. மருத்துவமனையில் காவல் துறை முகப்பு இருக்குமானால், நீங்கள் குடும்ப வன்கொடுமைக்கு ஆளானவர் என்றும் அதற்காக சிகிச்சை பெற வந்திருப்பதையும் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். காவல்துறை உங்களுக்குப் பாரம் 59-ஐ அளிக்கும். மருத்துவர் உங்களின் காயங்களை அந்தப் பாரத்தில் பதிவு செய்வார்.
  3. மருத்துவமனை, மருத்துவ அறிக்கையைத் தயார் செய்யும். அது காயம் ஏற்பட்டுள்ளதற்கான அதிகாரப்பூர்வ பத்திரமாகும். அப்படி வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்லும் பட்சத்தில் இந்த மருத்துவ அறிக்கை பயன்படுத்தப்படும்.
*நாட்டில் உள்ள எல்லா அரசாங்க மருத்துவமனைகளிலும் One Stop Crisis Centre (OSCC) அமைக்கப்பட்டுள்ளன. பினாங்கில் மட்டும் மொத்தம் ஆறு OSCC, பெரிய மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில், உள்ளன. OSCC செல்வதன் மூலம், பினாங்கு மருத்துவமனைகளோடு இணக்கமாகப் பணி புரியும் காவல்துறை, சமூக நல இலாகா மற்றும் பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) ஆகியவற்றின் உதவி உங்களுக்குக் கிடைக்கும்.

இஸ்லாமிய மத இலாகாவின் உதவியைப் பெறுதல்

குடும்ப வன்முறை சட்டம் 1994, முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என இருவருக்குமே பொருந்தும்.

  1. நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து, குடும்ப வன்முறைக்கு ஆளாகி, உங்களுடைய சொந்த பாதுகாப்பு பொருட்டு வீட்டை விட்டு வெளியேறும்பொழுது, உங்கள் கணவரோடு வசித்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அப்படிச் செய்ததற்கான காரணத்தையும் இஸ்லாமிய மத இலாகாவிடம் அறிவிக்க வேண்டும்.
  2. வன்முறைக்கு ஆளான உங்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. காவல் துறையில் புகார் செய்த பிறகு அல்லது மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீங்கள் இஸ்லாமிய மத இலாகாவில் புகார் செய்யலாம். இஸ்லாமிய மத இலாகா உங்களுடைய புகாரைப் பதிவு செய்த பிறகு, துன்புறுத்தியவரைத் தொடர்பு கொண்டு, முடிந்தால் இருவரையும் சமரசம் செய்து வைக்கும் நோக்கில் ஆலோசனைகளை வழங்கும்.

அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் உதவியைப் பெறுதல்

பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) போன்ற எந்த ஒரு பெண்களின் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் உதவியை நீங்கள் நாடலாம். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாங்கள் உடனடி ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவோம்.

  1. எங்கள் சமூகப் பணியாளர்கள் காவல்நிலையம், மருத்துவமனை, சமூக நல இலாகா போன்ற இடங்களுக்கு, தேவைப்பட்டால் உங்களுடன் துணை வருவர். வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்லும் பட்சத்தில், நீதிமன்ற ஆதரவையும் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.
  2. பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் தற்காலிக தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும்.

துன்புறுத்தும் துணையை விட்டு வெளியேறுதல்

உங்கள் மற்றும் உங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பே அதிமுக்கியம். நீங்கள் வன்முறையான ஓர் உறவில் இருந்தால் கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்:
  1. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அவசியமான, காவல்துறை, உறவினர், நண்பர்கள் மற்றும் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பெண்கள் அமைப்பின் தொடர்பு எண்களை வைத்திருக்க வேண்டும்.
  2. உங்களுக்கு நிகழும் வன்முறையை நீங்கள் பகிர்ந்துகொள்ள முடிந்த நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார். ஆவேசம் மற்றும் வன்முறைக் கூச்சல்களை கேட்கும் பட்சத்தில் காவல் துறையை அழைக்குமாறு அவர்களிடத்தில் முன்கூட்டியே சொல்லி வையுங்கள்.
  3. உங்கள் வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
  4. ஆபத்தான பொருள் அல்லது ஆயுதங்களை உங்கள் வீட்டிலிருந்து எப்படி வெளியேற்றுவது என்று சிந்தியுங்கள்.
  5. நீங்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிடாவிட்டாலும் கூட, எங்கு செல்வது என்பதை யோசித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்படி வெளியேறுவது என்றும் சிந்தியுங்கள். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை ஒரு பையில் போட்டு வையுங்கள். (இதற்கு விபரப் பட்டியலைப் பார்க்கவும்). நீங்கள் எளிதில் எடுக்கும் வகையில் ஓரிடத்தில் ஒளித்து வையுங்கள்.
  6. உங்கள் பாதுகாப்புத் திட்டத்தை அவ்வப்பொழுது மனத்தில் ஓட்டி நினைவில் நிறுத்துங்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
உங்களைக் கொடுமைப்படுத்துபவரிடமிருந்து வெளியேற நினைத்தால், கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ளுங்கள்:
  1. வீட்டை விட்டு வெளியேறும்பொழுது நீங்கள் செல்ல முடிந்த இரு இடங்கள்.
  2. உங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக இட்டுச் செல்வது. உங்கள் குழந்தைகளை உங்களோடு இட்டுச் செல்லும் சில தருணங்களில் அது உங்கள் எல்லோரையுமே ஆபத்தில் சிக்க வைக்கலாம். உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கு முதலில் நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
  3. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை ஒரு பையில் போட்டு தயார் நிலையில் வையுங்கள். அதை எளிதில் எடுக்கும் வகையில் ஒளித்து வையுங்கள்.
  4. நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் யார் உங்களுக்கு உதவுவார்கள். உங்களுடைய பைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்போரை நினைத்துப் பாருங்கள். யார் உங்களுக்கு பண உதவி செய்வார்கள் என்று யோசித்து வையுங்கள்.
  5. உங்கள் பெயரில் வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு உருவாக்குதல்.
நீங்களும் உங்கள் குழந்தைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், இந்த குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்: உங்களின் முக்கியமான உடைமைகளை உள்ளடக்கிய பையை வன்முறையாளர் கண்டுபிடிக்க முடியாத ஒரு மறைவான, பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்:
  • அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், வாகன உரிமம், திருமணச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள்;
  • பணம், நகை, வங்கிப் புத்தகம், ஏடிஎம் அட்டை, கிரெடிட் கார்டு, கடவுச்சீட்டு, காப்புறுதிச் சான்றிதழ்;
  • ஆடைகள் மற்றும் காலணிகள்;
  • கைப்பேசி மற்றும் முகவரிப் புத்தகம்/தொடர்பு விபரங்கள்;
  • சாவிகள் – வீடு, கார், அலுவலகம், பாதுகாப்பு வைப்புப் பெட்டி. வீட்டை விட்டு வெளியேறுவதற்குப் பாதுகாப்பான பாதை எதுவென முன்கூட்டியே திட்டமிடுங்கள். நீங்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்பொழுது இது உபயோகமாக இருக்கும். உங்கள் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தால், அதற்கான சாவி உங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முக்கியமான தொடர்பு எண்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருங்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், காவல்துறை மற்றும் மருத்துவமனை எண்களும் இதில் அடங்கும். வீட்டை விட்டு வெளியேறுவதற்குச் சிறந்த நேரம் எதுவென யோசித்து வையுங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டால், உங்களுக்குச் சிறு குழந்தைகள் இருக்குமானால் அவர்களையும் உடன் கூட்டிச் செல்லுங்கள். அவர்களை விட்டுச் சென்றுவிட்டால் பிறகு அவர்களை மறுபடியும் பார்ப்பதற்கு நீங்கள் சிரமத்தை எதிர்நோக்கலாம். சில சமயங்களில் உங்கள் துணை குழந்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி உங்களை வீட்டுக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தலாம்.
உங்களைக் கொடுமை செய்தவரிடமிருந்து நீங்கள் விலகிப்போயிருந்தால், கீழ்கண்டவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்:
  • சமூக நல இலாகாவிடமிருந்து அவசரகால பாதுகாப்பு ஆணையைப் (EPO) பெற்றிருக்க வேண்டும். வன்முறைக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும்.
  • நீதிமன்றத்திலிருந்து இடைக்கால பாதுகாப்பு ஆணையைப் (IPO) பெற்றிருக்க வேண்டும். அதன் ஒரு பிரதியை எல்லா நேரங்களிலும் உங்களோடு வைத்திருங்கள்.
  • உங்கள் வீட்டு பூட்டுகளை மாற்ற வேண்டும்.
  • உங்களைக் கொடுமைப்படுத்தியவர் இப்பொழுது உங்களோடு இல்லை என்பதை உங்களின் சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு தெரிவியுங்கள்.
  • உங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்களிடம், குழந்தைகளை யார் வந்து அழைத்துச் செல்ல அனுமதி உண்டு என்பதனை அறிவியுங்கள். உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான இடைக்கால பாதுகாப்பு ஆணையைப் (IPO) பெற்றிருந்தால், அதன் ஒரு பிரதியை குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் கொடுங்கள்.
  • உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை உங்கள் பணியிடத்தில் உள்ள ஒருவருக்கு அறிவியுங்கள். உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை விசாரித்த பிறகே உங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளவும்.
  • உங்கள் பணியிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை யோசித்து நடைமுறைப்படுத்துங்கள். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல முடிந்தால் வெவ்வேறு பாதைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்களைக் கொடுமைப்படுத்தியவரோடு நீங்கள் இருந்தபொழுது சென்று வந்த அதே கடைகளுக்குச் செல்லாதீர்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் காவல் நிலையத்தில் புகார் செய்தால் என் வாழ்க்கைத் துணை சிறைக்குச் செல்ல நேரிடுமா?
குடும்ப வன்முறை சட்டம் 1994-ன் கீழ், இப்பொழுது குடும்ப வன்முறை ஒரு குற்றமாகும். நீங்கள் காவல்துறைக்குப் புகார் செய்வதன் நோக்கம் ஒரு அதிகாரப்பூர்வ புகாரைப் பதிவு செய்வதேயன்றி உங்கள் வாழ்க்கைத் துணையைச் சிறையில் தள்ளுவதற்காக அல்ல. நீங்கள் காவல்நிலையத்தில் புகார் செய்யும் பொழுது விசாரணை அதிகாரி உங்களைச் சந்தித்து, காவல்துறை அறிக்கையின்படி உங்களுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வார். விசாரணை அதிகாரி உங்கள் வாழ்க்கைத் துணையை விசாரணைக்கு அழைத்துச் சம்பவம் தொடர்பாக அவருடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்வார். விசாரணை முடிவடைந்த பிறகு, சேகரிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கைத் துணையின் மீது குற்றஞ்சாட்டப்படுமா என்று துணை அரசு வழக்கறிஞர் (DPP – Deputy Public Prosecutor) முடிவு செய்வார். உங்கள் வாழ்க்கைத் துணை குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்தால் மட்டுமே அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

காவல்துறை என்னுடைய புகாரை ஏற்க மறுத்தால் என்ன செய்வது?
எந்த காவல்நிலையத்திலும் எவரும் புகார் அளிப்பதை எந்த காவல்துறை அதிகாரியாலும் தடுக்க முடியாது. உங்களுக்கு இப்படி நேருமானால், நீங்கள் தலைமை காவல் நிலையத்தில் (Ketua Balai Polis) இதனைப் புகார் செய்ய வேண்டும்.

என் வாழ்க்கைத் துணை என்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்தால் நான் காவல்துறைக்கு அழைக்க முடியுமா?
ஆம், நீங்கள் 999-க்கு அழைக்கலாம். அவர்கள் உங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தோடு இணைப்பார்கள். காவல்துறை அதிகாரியிடம் உங்கள் வீட்டு முகவரியை அறிவிக்கவும். அவர்கள் காவல்துறையின் ரோந்து காரை உங்கள் வீட்டுக்கு உடனடியாக அனுப்பி வைப்பார்கள். காவல்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வரும்பொழுது அங்கு உங்கள் வாழ்க்கைத் துணை இருப்பாரானால், உங்களுக்குத் உதவி தேவைப்படுகிறது என்று காவல்துறை அதிகாரிகளிடம் தைரியமாகச் சொல்லுங்கள். பிறகு, அந்த காவல்துறை அதிகாரியோடு காவல் நிலையத்திற்குச் செல்லுங்கள். உங்களை வீட்டில் அடைத்து வைத்ததற்காக உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எதிராக அதிகாரப்பூர்வ புகாரை அங்கு நீங்கள் கொடுக்கலாம்.

என்னுடைய வாழ்க்கைத் துணைக்கு எதிராக நான் காவல்துறையில் புகார் செய்யும் அதே நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறையைக் கேட்டுக்கொள்ள முடியுமா?
ஆம், நீங்கள் அவ்வாறு செய்யலாம். பாதுகாப்பு மற்றும் உங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்கென மட்டும் நீங்கள் புகார் அளிக்கலாம்.

நான் காவல்நிலையத்தில் புகார் அளிக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு மலாய் மற்றும் ஆங்கிலம் சரளமாக வராது. நான் என்ன செய்வது?
காவல்நிலையத்தின் முன்னிருக்கை காவல்துறை அதிகாரியிடம் இது தொடர்பாக நீங்கள் அறிவிக்க வேண்டும். அவர் உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்வார் அல்லது உங்களுடன் வந்திருப்பவருக்கு மலாய் அல்லது ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தால் அவரையே மொழிப்பெயர்ப்பாளராக பயன்படுத்திக்கொள்வார். மலாய் அல்லது ஆங்கிலம் தெரிந்த உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களைக் காவல்நிலையத்தில் உங்களுக்கு மொழிபெயர்த்து உதவுமாறும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

நான் மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மட்டுமே துன்புறுத்தப்படுகிறேன்; உடல் ரீதியாக அல்ல. இதற்கு நான் காவல்துறையில் புகார் அளிக்க முடியுமா?
குடும்ப வன்முறை சட்டம் 1994-ன் கீழ், மன மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தல்களும் ஒரு வகை குடும்ப வன்முறையே. ஆகையால், காவல்துறையில் புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உண்டு. மன ரீதியான துன்புறுத்தல்கள் உங்களை மனதளவில் பாதித்துள்ளது என்பதனை காவல்துறை புகாருக்கு ஆதாரமாகக் காட்ட மனநல ஆலோசகரின் மதிப்பீட்டுச் சான்றுகளையும் இணைக்கலாம்.

என் காதலன் என்னை அடித்தால், நான் காவல்துறையில் புகார் அளிக்க முடியுமா?
ஆம், நீங்கள் தாக்கப்பட்டதாகக் காவல்துறையில் புகார் அளிக்கலாம். ஆனாலும் குடும்ப வன்முறை சட்டம் 1994-ன் கீழ் இந்த உறவுமுறைக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை. ஆனால் தண்டனை சட்டத்தின் (Penal Code) கீழ் அவர் மேல் குற்றஞ்சாட்டப்படலாம்.

காவல்துறை என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கின்ற காரணத்தால், நான் காவல்துறையில் புகார் செய்யாமல் பாதுகாப்பு ஆணையைப் பெற முடியுமா?
நீங்கள் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் ஆபத்துகள் இருக்குமானால் அல்லது உடல் ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தால், காவல்துறையில் புகார் செய்யாமலேயே உங்கள் வட்டாரத்தில் உள்ள சமூகநல இலாகாவிடமிருந்து (Jabatan Kebajikan Masyarakat) அவசரகால பாதுகாப்பு ஆணைக்கு (EPO) விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட சமூகநல இலாகா அதிகாரி உங்களுக்கு அவசரகால பாதுகாப்பு ஆணையை எல்லா நேரங்களிலும் (24 மணி நேரம்) அளிப்பார். அவசரகால பாதுகாப்பு ஆணை 7 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அதனைப் புதுப்பிக்க முடியாது.

நான் என்னுடைய திருமணத்தைப் பதிவு செய்திருக்கவில்லை என்றால் இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு (IPO) விண்ணப்பிக்க முடியுமா?
ஆம், நீங்கள் இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு விண்ணபிக்கலாம். இதற்கு, உங்களைத் துன்புறுத்தியவரோடு உங்களுக்குச் சம்பிரதாய திருமணம் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது வேறு ஆதாரங்கள் காட்ட வேண்டும்.

இடைக்கால பாதுகாப்பு ஆணையை (IPO) நான் பெற்ற பிறகும் என் வாழ்க்கைத்துணை என்னைக் காயப்படுத்தினால் அல்லது மிரட்டினால் நான் என்ன செய்வது?
நீங்கள் உடனடியாகக் காவல்துறைக்குப் புகார் செய்து, உங்கள் விசாரணை அதிகாரியைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடைய இடைக்கால பாதுகாப்பு ஆணையோடு (IPO), கைது செய்வதற்கான அதிகாரமும் இணைக்கப்பட்டிருந்தால், விசாரணை அதிகாரி உங்கள் வாழ்க்கைத் துணையை உடனடியாகக் கைது செய்யலாம். ஆகையால், இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பிக்கும்பொழுது, அதில் கைது செய்யும் அதிகாரத்தையும் இணைத்துத் தருமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

கொடுமைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு என்னுடைய உடைமைகளை எப்படி எடுப்பது?
காவல்நிலையில் புகார் செய்த பிறகு, வீட்டிலிருக்கும் உங்களுடைய உடைமைகளை எடுக்க வேண்டி உள்ளது என்பதை விசாரணை அதிகாரியிடம் தெரிவியுங்கள். அவர்கள் உங்களுடன் வீட்டிற்குச் செல்ல ஒரு காவல்துறை அதிகாரியை நியமிப்பர். இந்த நோக்கத்திற்காக சமூகநல அதிகாரியையும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

நான் இரவு நேரங்களில் கொடுமைப்படுத்தப்பட்டால், உதவ யாரும் இல்லாத பட்சத்தில் நான் எங்கு செல்வது?
உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நீங்கள் செல்ல வேண்டும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துச் சூழலை எடுத்து விளக்கி, இரவு தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவை என்று கூறுங்கள். அங்குள்ள தாதியர் உங்களுக்கு அறை ஏற்பாடு செய்து கொடுப்பர். அதற்கடுத்த நாள், பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் (WCC) அல்லது வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியை நீங்கள் நாடலாம்.

நான் வீட்டை விட்டு வெளியேறினால், என்னுடைய குழந்தைகளை கூட்டிச் செல்ல உரிமை உண்டா?
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் காவலில் பெற்றோர் இருவருக்குமே சரிசமமான உரிமை உண்டு. நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்பொழுது குழந்தைகளை உடன் கூட்டிச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு. குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத் துணை குழந்தைகளைத் துன்புறுத்துவார் அல்லது சிறுகுழந்தைகளை சரியாகப் பார்த்துக்கொள்ள மாட்டார் என்று நீங்கள் பயந்தால் குழந்தைகளை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

நான் ஒரு முஸ்லிம் மனைவி. என் கணவர் என்னை அடிக்கும் பட்சத்தில், நான் ‘கீழ்ப்படியவில்லை’ (nusyuz) என்று பழி சுமத்தப்படாமல் வீட்டை விட்டு வெளியேறுவது எப்படி?
நீங்கள் துன்புறுத்தப்பட்டால் அதனை இஸ்லாமிய மத அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும். பாதுகாப்பான இடத்தை நாடி, வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நீங்கள் உஸ்தாஸ்க்கு அறிவிக்க வேண்டும். உங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் தொடர்பான காவல்துறை புகார் அறிக்கை இருப்பது நல்லது.

பாதிக்கப்பட்டவர் துன்புறுத்தியவரை விட்டு விலகிச் செல்வதை எது தடுக்கிறது?
கொடுமைகளுக்கு இலக்காகும் ஒரு உறவிலிருந்து பாதிக்கப்பட்டவர் விலகிச் செல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. உதாரணத்திற்கு, பொருளாதார ரீதியாக துன்புறுத்தியவரைச் சார்ந்திருத்தல், குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் ஆதரவு இல்லாமை போன்றவை. சில சமயங்களில், துன்புறுத்தும் வாழ்க்கைத் துணை மாறிவிடுவார் என்று பாதிக்கப்பட்டவர் எதிர்பார்த்துக் காத்திருப்பார். இது போன்ற சூழலில், வன்முறையான உறவிலிருந்து பாதிக்கப்பட்டவர் விலகிச் செல்வது எளிதான காரியமல்ல.

குடும்ப வன்முறை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.

குடும்ப வன்முறை முகப்புப்பக்கத்திற்குத் திரும்பு