சிறார் பாலியல் கொடுமை என்றால் என்ன?
சிறார் பாலியல் கொடுமை என்பது வயது கூடுதலான அல்லது வயதில் முதிர்ந்த ஒருவர் சிறாரைத் தன்னுடைய பாலியல் இச்சைக்காகத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகும். அப்பா, தாத்தா, மாமா, சகோதரர் மற்றும் பிற உறவினர்கள், சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி உறவு முறையில் உள்ளவர்களுக்கு இடையேயான பாலியல் உறவுகள், கூடாப் பாலுறவு (incest) என்று அழைக்கப்படுகிறது.
வயதில் முதிர்ந்த ஒருவருக்கும் சிறாருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பினால் உருவாகும் நெருக்கத்தையும், அன்பை விளையாட்டுத்தனமாக வெளிப்படுத்தும் செயல்களையும் சிறார் பாலியல் கொடுமை என்றெண்ணிக் குழப்பிக்கொள்ளக்கூடாது. வயதில் முதிர்ந்த பொறுப்பான ஒருவர், சிறாரோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கலாம் என்ற வரையறையைத் தெரிந்து வைத்திருப்பார். அவர் சிறாருக்கு மதிப்பு கொடுத்து ஒரு இதமான, ஆரோக்கியமான பாசப்பிணைப்பை தக்க வைத்திருப்பார்.
நாடாளுமன்ற புள்ளிவிபரங்களின்படி, 2017-ல் பதிவு செய்யப்பட்ட 1,535 கற்பழிப்புச் சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் சிறார்களாகும், அதாவது 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாகும். பெரும்பாலான குற்றவாளிகள் அல்லது பாலியல் கொடுமைகளை நிகழ்த்தியவர்கள், அப்பா, மாற்றாந்தந்தை, தாத்தா, இதர உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் அண்டை வீட்டார் போன்ற சிறார்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே.
பாலினம் பாராது, பாலியல் கொடுமைகள் எந்த சிறாருக்கும் நிகழலாம். பாலியல் கொடுமைக்கு ஆளான சிறார், தங்கள் வாழ்க்கை மற்ற சிறாரிடமிருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை உணர்கின்றனர். அவர்கள் கீழ்கண்ட உணர்வுப் பாதிப்புக்கு ஆளாகலாம்:
- கொடுமை செய்தவரின் மீது பயம்.
- சிக்கல்களை உருவாக்கிவிடுவோம் என்ற பயம்.
- தங்களுக்கு முக்கியமான வயதில் முதிர்ந்தவர்களை இழந்துவிடுவோம் என்ற பயம்.
- வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டு விடுவோம் என்ற பயம்.
- “வித்தியாசமாக இருக்கிறோம்” என்ற பயம்.
- கொடுமை செய்தவர் மீது கோபம்.
- தனக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று தன்னைச் சுற்றியுள்ள மற்ற வயதில் முதிர்ந்தவர் மீது கோபம்.
- தன் மீதே கோபம் (பிரச்சனைகள் உருவாகத் தானே காரணம் என்ற எண்ணம்)
- ஏனெனில் அவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறது.
- ஏனெனில் இந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் தனிமையை உணர்கின்றனர்.
- ஏனெனில் பாலியல் கொடுமை பற்றி பேசுவதால் அவர்கள் தொந்தரவுக்குள்ளாகிறார்கள்.
- அவர்களிமிருந்து ஏதோ அபகரிக்கப்பட்டுவிட்டதாக எழும் வருத்தம்.
- அவர்களின் ஒரு பகுதியை இழந்தது போன்ற ஒரு வருத்தம்.
- வெகு விரைவில் தான் வளர்ந்துவிட்டதாக வரும் வருத்தம்.
- தான் நம்பியவர் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக எழும் வருத்தம்.
- கொடுமையை தான் நிறுத்த இயலாததால் எழும் குற்ற உணர்வு.
- கொடுமைக்குத் தான் “இணங்கியதாக” நம்புவதால் எழும் குற்ற உணர்வு.
- அதனை இரகசியமாக வைத்திருப்பதால் எழும் குற்ற உணர்வு.
- இது போன்ற ஓர் அனுபவம் தனக்கு நேர்ந்ததால் வரும் அவமானம்.
- கொடுமைக்குத் தன்னுடைய உடம்பு இணங்கியதால் எழும் அவமானம்.
- தன்னைக் கொடுமைப்படுத்தியவரை, சிறார் இன்னும் நேசித்துக்கொண்டிருக்கலாம்.
- ஏனெனில் சிறாரின் உணர்வுகள் சதா மாறிக்கொண்டே இருக்கின்றன.
சிறார் பாலியல் கொடுமைகளை இனங்காணுதல் – அறிகுறிகள்
பாலியல் கொடுமைக்கு உள்ளான சிறார் அதனை நேரடியாக உங்களிடம் சொல்லாத பட்சத்தில், அதனை இனங்காணுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்நோக்கலாம். சிறார், பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என்று நீங்கள் சந்தேகித்தால் அவரின் நடத்தையை உற்று நோக்கவும்.
- பிறப்புறுப்பு அல்லது ஆசனவாய் சிவந்துபோதல் அல்லது அரித்தல்
- பிறப்புறுப்பு அல்லது ஆசனவாயில் வலி அல்லது காயம்
- சிறுநீர் கழிக்கும்பொழுது வலித்தல்
- பெண்ணுறுப்பு அல்லது ஆண்குறியில் திரவ வெளியேற்றம்
- வயிற்று வலி
- பால்வினை நோய்கள்
- கருத்தரித்தல்
- ஒருவரைப் பற்றிக்கொள்ளல்/விரல் சூப்புதல்
- பின்வாங்குதல்
- வயதுக்கு ஏற்றவாறு இல்லாமல் படுக்கையில் சிறுநீர் கழித்தல்
- பள்ளிக்கு மட்டம் போடுதல்/பள்ளிப் பாடத்திறன்களில் வீழ்ச்சி
- மது மற்றும் போதைப் பொருள் உபயோகம்
- அளவுக்கு மீறிய சுய இன்பம்
- வசீகரிக்கும் நடவடிக்கை/வயதுக்கு மீறிய பாலியல் அறிவு மற்றும் நடவடிக்கை
- தற்கொலை முயற்சிகள்
- தலைவலி/வயிற்று வலி
- நெஞ்சு வலி/உடல் அயர்ச்சி
- தூக்கமின்மை
- அழுகை/காரணமில்லாமல் பயங்கள்/மன இசிவு (Hysteria)
- பசியின்மை
- கவனிப்பாற்றல் குறைவு
- சுய மதிப்பு குறைதல்
சிறார் பாலியல் கொடுமைகளின் வகைகள்
சிறார் பாலியல் கொடுமை எந்த வடிவிலும் நிகழலாம்.- சிறாரை காமத்தீண்டல் செய்தல் (எ.கா: சிறாரின் மார்பகம், பிறப்புறுப்பு, ஆனசவாய் ஆகியவற்றைத் தொடுதல், காம இன்பத்திற்காக சிறாரை அவர்களின் சொந்த உடலையோ அல்லது துன்புறுத்துபவரின் உடலையோ தொடச் செய்தல்)
- பிறப்புறுப்பு அல்லது ஆசனவாய் மூலம் உறவு கொள்ளுதல் அல்லது உறவு கொள்ள முயற்சித்தல்
- வாய் வழி உறவுகொள்ளுதல் அல்லது வாய்வழி உறவு கொள்ள முயற்சித்தல்
- விபச்சாரம் மற்றும்/அல்லது ஆபாசப் படங்கள் வாயிலாக சிறாரைப் பயன்படுத்துதல்
- சிறாரிடம் ஆபாசப் படங்களைக் காண்பித்தல்
- சிறாரிடம் அவர்களின் உடலை வெளிக்காட்டுதல்
- சிறாரிடம் ஆபாச பாலியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி உரையாடுதல் அல்லது அவ்வாறு உரையாடுவதற்கு ஊக்குவித்தல் (நேரடியாக அல்லது இணையம் மூலம்)
- பாலியல் நடவடிக்கையை மேற்கொள்வதற்குச் சிறாரை ஊக்குவித்தல்
- சிறாரின் முன்னிலையில் பாலியல் உறவு கொள்ளுதல்
- பாலியல் உறவு கொள்ளும் நிலையில் சிறாரைப் படம் பிடித்தல்
சிறாரை வசப்படுத்துதல்
சிறாரை வசப்படுத்துதல் என்பது, அவர்களைப் பாலியல் கொடுமைக்குத் தயார் செய்யும் நோக்கில் நண்பர்களாக்கிக் கொண்டு, உணர்வு ரீதியான பிணைப்புகளை உருவாக்கிக் கொள்ளுதலாகும். இது, பாலியல் நோக்கத்தோடு சிறாரிடம் நெருக்கம் கொள்வதற்காகச் சிறார் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்கும் செயல் ஆகும்.
வசப்படுத்துதல் என்பது நடைமுறையாகவோ அல்லது இணையம் மூலமாகவோ நடைபெறலாம். நடைமுறையில், ஒருவர் சிறார் அல்லது சிறாரின் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறுவார். இப்படிச் செய்வதன் மூலம் பாலியல் கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு, அவர் அந்தக் குடும்பத்திற்குப் பண உதவி செய்வார், சிறாரைப் பார்த்துக்கொள்ள முன்வருவார், பாலியல் தொடர்புக்கு ஈடாக சிறாருக்குப் பரிசு அல்லது பணம் கொடுப்பார் மற்றும் சிறாருக்கு ஆபாசப் படங்களைக் காட்டத் தொடங்குவார்.
ஒரு பாலியல் வன்முறையாளர் இணையத்தின் வழியாகவும் சிறாரிடம் சிநேகம் கொண்டு, அல்லது சிநேகம் கொள்வது போல் நடித்து நம்பிக்கையான ஓர் உறவினை வளர்த்துக்கொள்வார். ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கித் தன்னை ஒரு வித்தியாசமான நபராக சிறாரிடம் காட்டிக்கொண்டு, சிறாரிடம் உரையாடுவது, நேரடியாகச் சந்தித்தும் பேசுவது போன்ற தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வார்.
2017-ல் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (Sexual Offences Against Children Act 2017) நிறைவேற்றப்பட்ட பிறகு, சிறாரை வசப்படுத்துதல் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். (மலேசியப் பிரிவின் சட்டங்களைப் பார்க்கவும்)
சிறார் பாலியல் கொடுமை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
