உதவி பெறுதல்
பாலியல் கொடுமைக்கு ஆளான சிறாருக்கு நீங்கள் உதவி செய்வது எப்படி?
- நிதானமாகவும் நம்பிக்கையோடும் இருங்கள்.

- அந்த சிறார் சொல்வதை நம்புங்கள். அதனை அவர்களுக்கு அறிவியுங்கள். பாலியல் கொடுமைகளைப் பற்றி சிறார்கள் பொய் சொல்வது அரிது.
- சிறார் சொல்வதை செவிமடுங்கள் ஆனால் வற்புறுத்தித் தகவல் அறியாதீர்.
- பொறுமை காத்து, சிறாருக்குப் புரியும் மொழியைப் பயன்படுத்துங்கள்.
- சிறார் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள்.
- சம்பந்தப்பட்ட சிறாரை சாந்தப்படுத்தி அது அவரது குற்றமல்ல என்பதனைத் தெளிவுபடுத்துங்கள்.
- வன்முறையாளரை நீங்களாகவே எதிர்கொள்ளத் துணியாதீர்.
- சிறார் மென்மேலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதிலிருந்து பாதுகாப்பு கொடுங்கள்.
- சிறாருக்கு உடனடியாக அரசாங்க மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடுங்கள்.
- சமூக நல இலாகா அல்லது உங்கள் வட்டாரத்தில் உள்ள காவல்துறையில் புகார் அளியுங்கள்.
- சிறார் தன்னுடைய அன்றாட வேலைகளை வழக்கம்போல் செய்ய ஊக்குவிக்கவும்.
- தொடர்ந்து ஆதரவளித்து நம்பிக்கை ஊட்டுங்கள்.
சிறார் பாலியல் கொடுமையைப் புகார் செய்தல்
காவல்துறையின் உதவியைப் பெறுதல்
சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (Sexual Offences Against Children Act 2017) நிறைவேற்றப்பட்ட பிறகு, எந்தவொரு சிறார் பாலியல் கொடுமை சம்பவத்தையும் புகார் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் ஒருவர் தண்டனைக்கு உள்ளாகலாம்.
சந்தேகத்திற்குரிய நபர் மீது சட்ட நவடிக்கை எடுக்கும் பொருட்டு, கொடுக்கப்பட்ட புகாரை விசாரணை செய்து அதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது காவல்துறையின் பணியாகும்.
- பாலியல் கொடுமைக்கு உள்ளான அல்லது பாலியல் கொடுமைக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் சிறாரை, புகார் அளிப்பதற்காக வயதில் முதிர்ந்தவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். பாலியல் கொடுமை எங்கு நிகழ்ந்திருந்தாலும், எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். சிறாருடன் துணை வரும் அளிப்பதற்காக வயதில் முதிர்ந்தவர், சிறாரின் அம்மா/அப்பா/பாதுகாவலர் அல்லது எந்த ஒரு நம்பிக்கைக்குரியவராக (உறவினர், ஆசிரியர்) அல்லது சமூகநல அதிகாரியாக இருக்கலாம்.
- காவல்துறை புகாருக்கு, கீழ்குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படுகின்றன:
- எப்பொழுது: எப்பொழுது நடந்தது? – சம்பவம்/சம்பவங்கள் நடந்த தேதி மற்றும் நேரம்
- எங்கு: எங்கு நடந்தது? – சம்பவம்/சம்பவங்கள் நடந்த இடம்
- என்ன மற்றும் எப்படி: என்ன சம்பவம் நடந்தது, எப்படி நடந்தது மற்றும் எத்தனை முறை நடந்தது? – சம்பவம்/சம்பவங்களின் விபரங்கள்
- யார்: யார் இதில் சம்பந்தப்பட்டது மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட பாலியல் வன்முறையாளர் யார்?
- பாதிப்பு: சம்பவத்திற்குப் பிறகு சிறாருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? காயம், சிராய்ப்பு, இன்னும் பல.
- ஏன்: ஏன் புகார் செய்யப்படுகிறது? பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் பல.
- கூடுதல் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட காவல் நிலையத்தின் பாலியல், பெண்கள் மற்றும் சிறார் விசாரணைப் (D11) பிரிவிலிருந்து விசாரணை அதிகாரி (IO – Investigating Officer) ஒருவர் நியமிக்கப்படுவார். இவர் புகாரைப் பதிவு செய்த பிறகு பாதிக்கப்பட்ட சிறாரை அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்வார்.
- அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், One Stop Crisis Centre (OSCC) என்ற தனி அறையில் சம்பந்தப்பட்ட சிறாருக்கு விசாரணை அதிகாரியின் முன்னிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். காவல்துறையின் புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை அதிகாரி கூடுதல் விசாரணைகளை மேற்கொள்வார் (எ.கா: சந்தேகத்திற்குரியவரையும் சேர்த்து இதில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் வாக்குமூலத்தைப் பதிவு செய்தல், கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லுதல், இன்னும் பல)
- விசாரணை நடக்கும்பொழுது சந்தேகத்திற்குரிய நபர் தடுத்து வைக்கப்படலாம்.
- விசாரணையின் முடிவுகளை, விசாரணை அதிகாரி அரசு வழக்கு விசாரணை அலுவலகத்தில் சமர்ப்பிப்பார். சந்தேகத்திற்குரிய நபர் இழைத்த கொடுமைக்கு அவர் குற்றஞ்சாட்டப்படுவாரா என்பதனை விசாரணை அலுவலகம் முடிவு செய்யும். போதுமான ஆதாரங்கள் இருக்குமானால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார். இல்லாவிடில் அவர் விடுவிக்கப்படுவார்.
- பாலியல் கொடுமை விளக்கமளிக்க முடியாத குழந்தைகளுக்காக, குழந்தை பேச்சு மையம் (Child Interview Centre, CIC) ஏற்பாடு செய்யப்படும். இது, குழந்தைகள் தங்கள் கதையை பாதுகாப்பாக மற்றும் சௌகரியமாக பகிர்ந்து கொள்ள இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவமனையின் உதவியைப் பெறுதல்
- காவல் நிலையத்திற்குச் செல்லாமல், நீங்கள் சம்பந்தப்பட்ட சிறாரை நேரடியாகவே எந்தவொரு அரசாங்க மருத்துவமனையிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் பதிவு முகப்புக்கு கொண்டு செல்லலாம்.
- சம்பந்தப்பட்ட சிறாருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு முன்பதாக மருத்துவமனையில் உள்ள காவல்துறை முகப்பில் நீங்கள் புகார் செய்ய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட சிறார், மருத்துவக் கவனிப்பு மற்றும் பரிசோதனைக்காக உள்ள One Stop Crisis Centre (OSCC) என்ற பிரத்தியேக அறைக்குக் கொண்டு செல்லப்படுவார். அங்கு அவருக்கு சிராய்ப்பு அல்லது காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.
- மருத்துவமனையில் உள்ள, ‘சந்தேகத்திற்குரிய சிறார் கொடுமை மற்றும் புறக்கணிப்புக் குழு’ (SCAN Team)* சிறாரைப் பரிசோதிக்கும். பரிசோதனை, இரத்தம் எடுத்தல், மற்றும் எல்லா உருமாதிரி (specimen) சேகரிப்புகளும், OSCC-யில் மேற்கொள்ளப்படும். சேகரிக்கப்பட்ட உருமாதிரிகள் விசாரணைக்காகக் காவல் துறையினரிடம் கொடுக்கப்படும். OSCC-யில் பரிசோதனை முடிவடைந்த பிறகு, குழந்தை அல்லது மகளிர் நோய்ப் பிரிவில், சம்பந்தப்பட்ட சிறார் அனுமதிக்கப்படுவார்.
- தொடர் நடவடிக்கை எடுக்கும் நோக்கத்திற்காக, இந்த விசாரணை அறிக்கை, சிறாரைப் பரிசோதித்த மருத்துவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். மருத்துவர், சிறாரைச் சமூகப் பணியாளர் மற்றும் சிறார் மனநல மருத்துவரின் பார்வைக்குக் கொண்டு செல்வார். சம்பந்தப்பட்ட சிறார், சமூக நல இலாகா மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் கொண்டு செல்லப்படுவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறாருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனையும் வழங்கப்படும். சந்தேகத்திற்குரிய நபர் சிறாரோடு ஒரே வீட்டில் குடியிருந்தவராக இருந்தால், சிறார் குணமாகி வீட்டுக்குச் செல்லத் தயாராகும்பொழுது, அவர் பாதுகாப்பான வேறு இல்லத்தில் தங்குவதை உறுதி செய்யும் பொறுப்பு மாவட்ட சமூகநல அதிகாரியினுடையது.
*ஒவ்வொரு அரசாங்கம் மருத்துவமனையிலும் ‘சந்தேகத்திற்குரிய சிறார் கொடுமை மற்றும் புறக்கணிப்புக் குழு ‘(Suspected Child Abuse and Neglect (SCAN) Team) இருக்கிறது. இவர்கள் சிறார் பாலியல் கொடுமை சம்பவங்களைக் கண்காணிக்கிறார்கள். இந்தக் குழுவில் குழந்தை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவ சமூகப் பணியாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களோடு சேர்த்து அவசர சிகிச்சைப் பிரிவின், One Stop Crisis Centre (OSCC) மருத்துவர் மற்றும் தாதியரும் இருப்பர்.
சமூக நல இலாகாவின் உதவியைப் பெறுதல்
நீங்கள் சம்பவத்தைச் சமூகநல இலாகாவிலும் புகார் செய்யலாம். சமூகநல இலாகாவில் உள்ள சிறார் பாதுகாப்பாளர் (Pegawai Pelindung Kanak-Kanak) சிறாரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வார்.
- சிறார் கொடுமை சம்பவம் சமூக நல இலாகாவில் புகார் செய்யப்படும் பட்சத்தில், புகார் கிடைத்த பிறகு, அந்தச் சிறார் பாதுகாப்பாளரால் அரசாங்க மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் One Stop Crisis Centre (OSCC) கொண்டு செல்லப்பட்டு, பிறகு அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாரா என்பது மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்படும். சிறார் பாதுகாப்பாளர் அல்லது பொறுப்பாளர் முதலில் அங்குள்ள காவல்துறை முகப்பில் புகார் அளிக்க வேண்டும்.
- பிறகு அந்தச் சிறார், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். சிறார் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு, குழந்தை பாதுகாப்பாளர், சிறார் நலமாக இருப்பதை உறுதி செய்வதற்கும், தேவைப்பட்டால் சிறாருக்கும் அவருடைய பெற்றோருக்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் நீதிமன்ற உத்தரவோடு, அவருடைய வீட்டிற்கு வருகை புரியலாம்.
நான் சிறார் பாலியல் கொடுமையைத் தடுப்பது எப்படி?
உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும்
உங்கள் குழந்தையை யாரிடம் மற்றும் எங்கு விட்டுச் செல்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். பாலியல் கொடுமை செய்பவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சிறாருக்கு அறிமுகமானவர்கள்தான். சிறாருக்கு அறிமுகமற்றவர்களாக இருப்பது மிகவும் குறைவு. பெரும்பாலும் அந்நியர்கள்தான் சிறாரைப் பாலியல் கொடுமை செய்கிறார்கள் என்பது ஒரு கற்பனையாகும். உண்மையில் சிறாரோடு தொடர்பில் இருக்கும் எவரும் பாலியல் கொடுமைகளைச் செய்யலாம். புகார் செய்யப்பட்ட 90% சம்பவங்களில், குற்றவாளி சிறாருக்கு அறிமுகமானவரே. உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமையை இனங்காண கற்றுக்கொடுங்கள். பெற்றோர், ஆசிரியர் போன்ற அவர்களின் நம்பிக்கைக்குரிய வயது முதிர்ந்தவர்களிடம் சம்பவத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.
உடல் பாதுகாப்பு பற்றி சிறாருக்குக் கற்றுக்கொடுங்கள்
தங்கள் சொந்த உடலை மதிக்கவும் நேசிக்கவும் சிறாருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வயதில் முதிர்ந்தவர்கள் சிறாரிடம் எதைச் செய்யலாம் என்பதற்கு சில விதிகள் உள்ளன. அதோடு சரியான மற்றும் தவறான தொடுதல் முறைகளையும் வலியுறுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். தங்களுடைய சொந்த உணர்வுகளை நம்பி அதற்குச் செவிசாய்ப்பதன் மூலம் தங்களுக்கு நடப்பவை சரியா அல்லது தவறா என்பதனைச் சிறார்கள் மதிப்பிட முடியும். பின்வரும் வாக்கியங்களை குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள்:
இது என் உடல். என் உடல் தனிச்சிறப்புடையது மற்றும் முக்கியமானது. நான் அதனை நேசிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும்.
உள்ளாடையால் மூடப்பட்டவை உடலின் அந்தரங்கப் பாகங்கள் என்றும், அது சிறாருக்கு மட்டுமே சொந்தமானவை என்றும், அதை யாரும் தொடக்கூடாது அல்லது சிறாருடைய அனுமதியின்றி தொடக்கூடாது என்றும் சிறாருக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். உடல் தூய்மைக்காக அல்லது மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே அந்தரங்க உறுப்புகளைத் தொடலாம், (எ.கா: மருத்துவர் தொடுவது) என்று நீங்கள் வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
உடல்பாகங்களைக் குறிக்கும் சரியான பெயர்களைப் பயன்படுத்துதல்
ஆண்குறி, பெண்ணுறுப்பு, மார்பகம் போன்ற உடல் பாகங்களுக்கான வேறு மறைமுக வழக்குப் பெயர்களைப் பயன்படுத்தாது அவற்றின் சரியான பெயர்களைச் சொல்ல வேண்டும். சரியான பெயர்களைப் பயன்படுத்தினால்தான் சிறார்களின் அந்தரங்க உறுப்புகளை மற்றவர்கள் தொடும்பொழுது என்ன நடந்தது என்பதை அவர்களால் சரியாக விவரிக்க முடியும்.
தங்களின் உள்ளுணர்வுகளை செவிமடுக்குமாறு சிறாருக்குச் சொல்லிக்கொடுங்கள்
அடுத்தவர் பற்றி தங்களுக்கு ஏற்படும் சுய உணர்வை சிறார்கள் நம்பக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட தொடுதல் தவறு என்பதைச் சிறார்களின் உள்ளுணர்வே அவர்களுக்குச் சுட்டிக்காட்டிவிடும். ஒரு தொடுதல் சிறார்களுக்குக் குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் பட்சத்தில், உடனே அவர்களுடைய உள்ளுணர்வு அது தவறான தொடுதல் என்று சொல்ல ஆரம்பித்துவிடும். ஆக, உள்ளுணர்வை நம்புவதற்குச் சிறாருக்குச் சொல்லிக்கொடுங்கள்.
உங்கள் குழந்தைக்கு “வேண்டாம்!” என்று சொல்லக் கற்றுக்கொடுங்கள்
தன் உடல் மீது தனக்கு உரிமை உண்டு என்பதனைச் சிறாருக்கு நினைவூட்டுங்கள். சிறாருக்கு அசௌகரியமாக இருக்கும் விதத்தில் யாராவது அவர்களைத் தொட்டால், அவர்கள் உடனடியாக “வேண்டாம்!” என்று சொல்ல வேண்டும். சிறார் மிகவும் நேசிக்கும், நம்பும், மதிக்கும் அப்பா, அண்ணன், தாத்தா, மாமா அல்லது வயதில் முதிர்ந்த யாராக இருந்தாலும் முடியாது என்றே சொல்ல வேண்டும். ஒரு தொடுதல் அசௌகரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினால், சிறார் தன் நண்பர்களுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய வயது முதிர்ந்தோரிடம் அதைத் தெரிவிக்க ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் சிறாருக்கு உதவுவர்.
எந்த இரகசியங்களையும் வைத்திருக்க கூடாது என்று சிறாருக்குச் சொல்லிக்கொடுங்கள்
நல்ல
இரகசியங்கள் மற்றும் கெட்ட இரகசியங்களைப் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பெரும்பாலும் பாலியல் கொடுமையாளர்கள் “இது எனக்கும் உனக்குமான இரகசியம்” என்று சிறாரிடம் கூறுவர். இது சிறாரிடையே குற்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் வன்முறையை வெளிச்சொல்ல அவர்கள் பயப்படுவர். பாலியல் வன்முறையை வெளிச்சொல்வது சரியானதுதான் என்றும், தங்களுக்குப் பயத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் கெட்ட இரகசியங்களை மறைக்கக்கூடாது என்றும் சிறார்களுக்குப் புரிய வையுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிறார் பாலியல் கொடுமை சம்பவத்தை யார் புகார் செய்யலாம்?
பாலியல் கொடுமை சம்பவத்தை அறிந்த அல்லது சந்தேகிக்கும் எவரும், காவல்துறையில் புகார் செய்யலாம்.
சிறார் பாலியல் கொடுமை தொடர்பாக புகார் செய்தவர் மீது அவதூறு வழக்கு (saman malu) தொடுக்க முடியுமா?
சிறார் பாலியல் கொடுமை தொடர்பாகப் புகார் அளித்த எவர் மீதும் அவதூறு மற்றும் நிந்தை வழக்கு தொடரப்படுவதிலிருந்து Child Act 2001 பாதுகாப்பு அளிக்கிறது.
சிறார், தான் வெகு நாட்களுக்கு முன்பு பாலியல் கொடுமைக்கு ஆளானதைத் தெரிவித்தால், அது தொடர்பாக இப்பொழுது காவல்துறையில் புகார் செய்ய முடியுமா?
கடந்த காலங்களில் அல்லது வெகு நாட்களுக்கு முன்பு நடந்த பாலியல் கொடுமை தொடர்பாக நீங்கள் இன்னும் காவல் துறையில் புகார் செய்யலாம். ஆதாரங்களைத் திரட்டுவதற்காகக் காவல்துறை சம்பவத்தை விசாரணை செய்யும். போதிய ஆதாரங்கள் இருக்கும்பொழுது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு சிறார் பாலியல் கொடுமையையும் புகார் செய்ய வேண்டியது கட்டாயமா?
Child Act 2001-ன் படி, சிறார் பாலியல் கொடுமை செய்யப்பட்டிருக்கிறார் என்று உறுதியாக நம்பும் எவரும் அதனைச் சமூகநல இலாகா அல்லது காவல்துறைக்குப் புகார் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார். அப்படி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான தகவல்களைக் காவல்துறைக்குக் கொடுக்கத் தவறினால், Sexual Offences Against Children Act 2017-ன் படி உங்களுக்கு RM5,000 வரைக்கும் அபராதம் விதிக்கப்படும்.
சிறார் பாலியல் கொடுமை தொடர்பாகக் காவல்துறைக்குப் புகார் செய்தவர், பிறகு அந்தப் புகாரை மீட்டுக்கொள்ள முடியுமா?
காவல்துறையில் புகார் செய்யப்பட்டவுடன், காவல்துறை அதற்கான விசாரணை அறிக்கையைத் திறந்து சம்பவத்தை விசாரணை செய்ய ஆரம்பித்துவிடும். இந்த விசாரணை அறிக்கையை காவல் துறை, துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்து, குற்றம் புரிந்தவர் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவாரா என்பதைக் கண்காணிக்கும். புகார் அளித்தவர் அதை மீட்டுக்கொள்ள நினைத்தால், அவர் காவல்துறைக்கும் துணை அரசு வழக்கறிஞருக்கும் அறிவிக்க வேண்டும். புகார் அளித்தவர் புகாரை மீட்டுக்கொண்ட பிறகு அந்த வழக்கைத் தொடர வேண்டுமா என்பதனை முடிவு செய்யும் அதிகாரம் துணை அரசு வழக்கறிஞருக்கு உண்டு.
ஒரு தந்தை ஆபாசப்படங்களை தன்னுடைய குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டினால் அது குற்றமாகுமா?
ஆம், அது ஒரு குற்றமே. சிறாருக்கு ஆபாசப் படங்களைக் போட்டுக் காட்டும் வயதில் முதிர்ந்த எவரும், Sexual Offences Against Children Act 2017-ன் கீழ், உடல் ரீதியற்ற பாலியல் வன்முறையை சிறாருக்கு விளைவித்த குற்றத்தைப் புரிந்ததாகக் கருதப்படுவார்.
பாலியல் கொடுமைக்கு ஆளான சிறாருக்கு மருத்துவமனையின் எந்தப் பிரிவு சிகிச்சை அளிக்கும்?
பாலியல் கொடுமைக்கு ஆளான எந்த சிறாருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு முதன்மையான அரசாங்க மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள One Stop Crisis Centre (OSCC)-ன் பிரத்தியேக அறையில் சிகிச்சை அளிக்கப்படும். 24 மணி நேரமும் இயங்கும் OSCC குடும்ப வன்முறை, பாலியல் தாக்குதல்கள், சிறார் வன்முறை மற்றும் புறக்கணிப்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் கவனிக்கப்படும்.
Child Act 2001 மலேசியர்கள் மற்றும் மலேசியர் அல்லாத இருவருக்குமே பொருந்துமா?
Child Act 2001 மலேசியாவில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
விந்துத்தள்ளுதல் இல்லாத ஊடுறுவல், கற்பழிப்பு என்று கொள்ளப்படுமா?
பாலுலுறவுக்கு ஆதாரமாக ஊடுறுவல் ஒன்றே போதுமானது என்பதால் இதுவே ஒருவர் கற்பழிப்பு குற்றத்தைப் புரிந்தார் என்பதற்குச் சான்றாகும்.
வசப்படுத்துதல் என்றால் என்ன?
வசப்படுத்துதல் என்பது வயதில் முதிர்ந்தவர் பாலியல் தொடர்பு கொள்ளும் நோக்கத்தோடு சிறாருடன் நெருக்கத்தை உருவாக்கிக் கொள்ளுதல். தன்னுடைய எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளின் மூலமாக சிறார், அவருடைய நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையை இவர் பெற முயற்சிப்பார். வசப்படுத்துதல் என்பது நடைமுறையாகவோ அல்லது இணையம் மூலமாகவோ நிகழலாம். நடைமுறையில் அது வீடு, அண்டைவீடு, பள்ளிக்கூடம் மற்றும் இன்னும் பல இடங்களில் நிகழலாம். ஒரு பாலியல் வன்முறையாளர் இணையத்தின் வழியாகவும் சிறாரிடம் சிநேகம் கொண்டு, அல்லது சிநேகம் கொள்வது போல் நடித்து நம்பிக்கையான உறவினை வளர்த்துக்கொள்வார்.
ஏன் சிறார் பாலியல் கொடுமையை உடனடியாகத் தங்கள் பெற்றோரிடம் கூறுவதில்லை?
சிறார் பாலியல் கொடுமையை உடனடியாகத் தன் பெற்றோரிடம் சொல்லாததற்கு பல காரணங்கள் உண்டு. பெரும்பாலான தருணங்களில் தாங்கள் துன்புறுத்தப்படுகிறோமா, வசப்படுத்தப்படுகிறோ அல்லது அன்பு காட்டப்படுகிறோமா என்பதை அவர்களால் இனங்கண்டு கொள்ள முடியாமல் குழப்பத்திற்கு ஆளாவர். அதோடு பாலியல் கொடுமை செய்பவர், தன்னுடைய செயலைச் சம்பந்தப்பட்ட சிறார் வேறு யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என்றும், அப்படியே தெரிவித்தால் கூட அதை யாரும் நம்பமாட்டார்கள் என்றும் சிறாருக்குச் சொல்லி நம்ப வைத்திருப்பார். சில நேரங்களில், பாலியல் கொடுமை செய்பவர் சிறாரின் பெற்றோருக்குத் தெரிந்தவராகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருப்பார்.
ஒரு சிறார் இன்னொரு சிறாரைப் பாலியல் கொடுமை செய்வது ஏன்?
ஒரு சிறார் இன்னொரு சிறாருக்குச் செய்யும் பாலியல் கொடுமைக்குத் தெளிவான பதில் கிடையாது. இதனைப் புரிந்துகொள்வது சிக்கலான காரியமாகும். பாலியல் கொடுமைகளைச் செய்யும் சிறார் இதற்கு முன்பு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியிருக்கலாம் அல்லது பாலியல் நடவடிக்கை அல்லது படங்களைப் பார்த்திருக்கலாம். இது அவர்களுக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்தி இள வயதில் பாலியல் நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றிருக்கலாம்.
சிறார்களிடையே நிகழும் பாலியல் வன்முறைகள் குற்றமாகக் கருதப்படுமா?
சிறார் 10 வயதுக்குக் கீழ்ப்பட்டு இருப்பாரேயானால் சட்டப்படி அது ஒரு குற்றம் கிடையாது. ஆனால் 10-லிருந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறார் தன்னுடைய செயல்களுக்கான பின்விளைவுகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவராக இருந்தால், அவர் மீது குற்றஞ்சாட்டப்படலாம்.
சில சமயங்களில் பாலியல் வன்முறைகளை நிகழ்த்த வேண்டும் என்ற கெட்ட நோக்கங்கள் எதுவும் சிறார்களுக்குக் கிடையாது. எதிர்பாலினத்தவரின் உடல் பாகங்களை அவர்கள் ஆராய்ந்து பார்க்க நினைப்பர். ஆகையால் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், மதிப்பளித்தல் மற்றும் ஒருவருக்கான எல்லைகள் என்னென்ன என்பது பற்றியும் சிறார்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தங்களுடைய குழந்தைகள் அவர்களாகவே ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
என்ன காரணத்திற்காகத் தங்களுடைய குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள் என்பதனைப் பெற்றோர் ஆராய வேண்டும்? ஆர்வக் கோளாறு, நண்பர்கள் சகவாசம், ஆபாசப் படங்களுக்கு அடிமையாகுதல் போன்ற இன்னும் பல காரணங்களால் இவ்வாறு நிகழலாம். சிறார் தொடர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்து வந்தால், பெற்றோர் அவர்களை ஒரு நல்ல ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறார் பாலியல் கொடுமை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
