English Version
Versi Bahasa Malaysia
中文版
உதவி பெறுதல்
நேச சந்திப்பின்பொழுது வன்முறைக்கு உள்ளானோர், அதனைப் பெரும்பாலும் இரகசியமாக வைத்துக்கொள்வர். நம் பெற்றோர், ஆசிரியர், பள்ளி ஆலோசகர் மற்றும் சுகாதார பாதுகாப்பு வழங்குநர் அல்லது பினாங்கிலுள்ள பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் போன்ற பெண்கள் பாதுகாப்பு மையங்களிலிருந்து வன்முறையைக் களைய உதவி கோருதல் முக்கியம்.
ஆரோக்கியமற்ற/நச்சு உறவில் இருக்கும்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உண்மையாக அக்கறை செலுத்தும் ஒருவர் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்ட வேண்டிய ஒருவர் உங்களை மிகவும் மோசமாக நடத்தினால், உங்கள் நிலைமை மிகுந்த சிரமத்திற்குள்ளாகும். பெரும்பாலான தருணங்களில், அவர் உங்களை நல்ல விதமாகவே நடத்தலாம். மோசமாக நடத்திய பின், அவர் மன்னிப்பு கேட்கவும் கூடும். அப்படி எதுவும் மோசமாக நடந்துவிடவில்லை அல்லது இனிமேல் அப்படி நடக்காது என்று நீங்கள் சொல்லிக்கொள்வது நன்றாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எல்லா நேரங்களிலும் மரியாதையாகவே நடத்தப்பட வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமற்ற உறவில் இருப்பீர்களேயானால், கீழ்கண்ட நடவடிக்கைகளின் மூலம் உங்களுக்கு உதவ முடியும்.
என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்
முதலில் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான உறவுக்கு எதிரானது வன்முறை உறவு. வன்முறை என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரை அடிப்பது, கத்துவது மற்றும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது போன்ற அடக்குமுறைகளும் காயப்படுத்துதலும் வன்முறையே.
உங்கள் நண்பன் அல்லது தோழி மீது உங்களுக்கு பயம் இருக்குமானால், அல்லது அவர்கள் என்ன செய்வர் அல்லது சொல்வர் என்று அச்சம் ஏற்பட்டால் நீங்கள் வன்முறையான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஏன் அவர் உங்களை இவ்வாறு நடத்துகிறார் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். உங்களைக் காயப்படுத்துபவர், “நான் கிண்டல் செய்தேன்”, “எனக்கு ஆத்திரம்”, “நீதான் என்னை அவ்வாறு செய்ய வைத்தாய்”, அல்லது “நீ எளிதில் உணர்ச்சிவசப்படுகிறாய்” போன்ற சாக்குப்போக்கு வார்த்தைகளை உங்களிடம் கூறலாம். உங்களை அடக்க நினைப்பவர், உங்கள் மீது கொண்ட அக்கறையால் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறலாம். ஆனால், உண்மையில் உங்கள் மீது மதிப்பு இல்லாத காரணத்தால்தான் அவர் அவ்வாறு நடந்துகொள்கிறார். உங்களை அடக்கவோ, காயப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் நண்பன்/தோழி உங்களை நடத்தும் விதம் உங்கள் தவறு கிடையாது. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் உங்கள் மீது வருத்தமோ ஆத்திரமோ அடைந்தாலும் கூட, அவர் உங்களிடம் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களிடம் பேசுவதன் மூலம் அவருடைய உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட வேண்டும்.
உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளுங்கள்
உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்வதுதான் அதிமுக்கியமான நடவடிக்கையாகும். ஏனெனில், உங்களுக்கு நீங்கள் முக்கியம். ஆகையால், உதவி கோருங்கள் அல்லது உங்களுக்கு உதவ முடிந்த ஒருவரிடம் பேசுங்கள். நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பேசுவது மற்றும் நிகழ்ந்தனவற்றைக் கூறுவது, பயம், பதற்றம் மற்றும் தாழ்வு உணர்விலிருந்து விடுபட உங்களுக்கு உதவி செய்யும். உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் அது உதவும். நீங்கள் சிறாராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் போன்ற நீங்கள் நம்பும் பெரியவர்களிடம் பேசவும். பினாங்கின் பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் போன்ற பெண்கள் பாதுகாப்பு மையங்களிலும் நீங்கள் உதவி கோரலாம்.
நீங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். உங்கள் நண்பன்/தோழி உங்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தால், உதவி கோருவதற்கான கூடுதல் தகவல்களைப் பெற இந்தப் பிரிவுகளைக் காணவும்.
நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு யாருமில்லை என்று எண்ணி விடாதீர். உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம்.
ஆரோக்கியமற்ற உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்தல்
ஆரோக்கியமற்ற/நச்சு உறவிலிருந்து வெளிவருவது கடினமானதும் ஆபத்தானதும் கூட. ஆரோக்கியமற்ற, நச்சு உறவில் சிக்கிக்கொண்டது உங்கள் தவறு கிடையாது. எனவே, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாதீர். அதே உறவில் நிலைத்திருந்தால் உங்கள் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். அதற்கு ஒரு முடிவு கட்டுங்கள்.
நீங்கள் ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் உணர்ந்தால், அல்லது உங்கள் உறவினை முடிவுக்குக் கொண்டு வர எண்ணினால், ஆனாலும் அவ்வாறு செய்ய பயந்தால், கீழ்குறிப்பிட்ட நடவடிக்கைகள் உங்களுக்கு உதவும்:
- வன்முறை பிரயோகிப்பவரோடு தனியாக இருக்காதீர்.
- அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம் என்று உணரும் பட்சத்தில் ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி அந்த சூழலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.
- நீங்கள் எங்கு செல்லத் திட்டமிட்டுள்ளீர்கள் மற்றும் எப்பொழுது திரும்புவீர்கள் என்பதனை எப்பொழுதும் யாரிடமாவது அறிவியுங்கள்.
- உறவிலிருந்து வெளியேறும் பட்சத்தில் குடியிருப்பதற்கான இடத்தை தயார் செய்து கொள்ளுங்கள். கைப்பேசியையும் பணத்தையும் கைவசம் வைத்திருங்கள்.
- உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் – ஏதாவது சரியில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அந்த சூழலிருந்து உடனடியாக வெளியேறிவிடுங்கள்.
- குறிப்பிட்ட நபரின் தொடர்பை உங்கள் கைப்பேசிப் பதிவிலிருந்து துண்டித்துவிடுங்கள். நீங்கள் உறவை முறித்துக்கொண்ட பிறகு, தொடர்ந்து தொல்லைகளுக்கு உள்ளாவதை இது தடுக்கும்.
- பினாங்கின் பெண்கள் மறுமலர்ச்சி நிலையம் போன்ற ஏதாவது ஒரு பெண்கள் மையத்திடம் உதவி கோருங்கள்.
- நீங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால் காவல் நிலையத்தினரை அழைக்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பதின்மர் நேச சந்திப்புகளில் ஈபடுபடுவது சரிதானா?
உங்கள் நண்பன்/தோழி உங்கள் மீது மதிப்பு வைத்திருந்து, உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் ஆதரவாக இருக்கும் பட்சத்தில், நேச சந்திப்பு என்பது ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும். ஆனாலும், பெரும்பாலான பெற்றோர்கள் நீங்கள் இளமைப் பருவத்தில் நேச சந்திப்பில் ஈடுபடுவதை எதிர்க்கின்றனர். ஏனெனில், நீங்கள் எளிதில் நிலைதடுமாறவும், உங்கள் பள்ளிப் படிப்பு பாதிக்கப்படும் என்றும் அவர்கள் பயப்படுகின்றனர்.
என் நண்பன்/தோழி பிரயோகிக்கும் வன்முறையை நான் நிறுத்த இயலுமா?
உங்களால் முடியாது. உங்களை அடக்குபவர் அல்லது காயப்படுத்துபவர், அவராகவே வன்முறையை நிறுத்தினால்தான் உண்டு. உங்கள் நண்பன்/தோழி அவரின் குணத்தை மற்றும் நடத்தையை மாற்றிக்கொண்டு உங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், வன்முறை நிற்க வழியில்லை. மாறாக, அது இன்னும் மோசமாகும். உங்கள் நண்பன்/தோழியின் நடவடிக்கைகளுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் நடத்தையை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நீங்கள் முடிவெடுக்கலாம். நண்பன்/தோழி தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளாவிடில், நீங்கள் அவரை சந்திப்பதை நிறுத்திவிட்டு உங்களுக்கிடையேயான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
என்னுடைய நண்பன்/தோழி என் மீது வன்முறையைக் கையாளுகிறார் என்று தெரிந்தவுடன் நான் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா?
உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பது மிகவும் சிரமமான காரியம். உங்கள் நண்பன்/தோழியை நீங்கள் இன்னமும் நேசித்துக் கொண்டிருக்கலாம். அதனால், அவருடைய பிரிவு உங்களை வாட்டக்கூடும். நீங்கள் அவரை விட்டுப் பிரிந்தால் அவரின் நிலை என்னவாகும் என்று நீங்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாகி பயப்படக்கூடும். ஆனால், அந்த உறவில் நீங்கள் மதிக்கப்படவில்லை என்பது உறுதியானால், உறவினை முடிவுக்குக் கொண்டு வருவதே உத்தமம். வன்முறை உறவில் நிலைத்திருப்பது பாதகங்களைக் கொண்டு வருவதோடு வன்முறை இன்னும் தீவிரமாகவும் கூடும். உங்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் மட்டுமே நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து சிந்திக்க வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்பதனை உங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்கள் போன்ற நீங்கள் நம்பும் நபர்களுடன் கலந்தாலோசிக்கலாம்.
நான் என் நண்பன்/தோழியிடம் ஏற்கெனவே உடல் ரீதியாக நெருக்கமாக இருக்கிறேன். என் அந்தரங்கப் படங்களை அவருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கிறார். இது எனக்கு அசௌகரியத்தை உண்டாக்குகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களின் அந்தரங்கப் படங்கள் மற்றும் காணொளிகளை யாருக்கும் அனுப்பிவிடாதீர். எந்த உறவும் காலத்திற்கும் நீடித்திருக்கப் போவதில்லை. ஆனால், இயங்கலையில் உங்கள் படத்தைப் பகிரும்பொழுது அந்தப் படம் உங்கள் கட்டுக்குள் இல்லாமல் போய்விடும். நீங்கள் அனுப்பும் படம் ஒருவருக்கும் மேற்பட்டு பார்க்கப்படும். உங்களோடு அவருக்கிருந்த கடந்த கால அந்தரங்கங்களைச் சுட்டிக்காட்டி உங்களை அச்சுறுத்தினாலோ அல்லது மிரட்டினாலோ, நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் இதனை அறிவித்துவிட்டு, உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். நீங்கள் விரும்பாத ஒன்றைச் செய்யுமாறு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது.
நான் பாலுறவுத் தொடர்பில் இருக்கிறேன். நான் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
நீங்கள் ஏற்கெனவே பாலுறவுத் தொடர்பில் இருந்தால், சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பாலுறவு கொள்வது என்பது பெரிய பொறுப்புகள் சார்ந்ததும் மற்றும் உணர்வு ரீதியான நெருக்கத்தையும் உள்ளடக்கியது. இதில் அவரவரின் உணர்வு மற்றும் எல்லைகளை மதிக்க வேண்டியது அவசியம். அதோடு, நீங்கள் கருவுறுதல் மற்றும் பாலியல் நோய்களால், (உதா: கொனோரியா, சிபிலிஸ்) பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது சிரமங்கள் ஏற்படுமாயின் உங்களுடன் இருக்கும் நபர் நம்பிக்கைக்கு உரியவராகவும் பொறுப்புடன் செயல்படுபவராகவும் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நான் 16 வயதுக்குட்பட்ட பெண். நான் பாலியல் உறவில் உள்ளேன். இதனால் என் நண்பன் ஏதேனும் பிரச்சனைக்கு உள்ளாவார்களா?
ஆம்! உங்கள் வயது 16-க்கும் கீழ்ப்பட்டு இருக்கும் பட்சத்தில், உங்கள் அனுமதியோடு அல்லது அனுமதி இல்லாமல் நடக்கும் பாலியல் உறவு, சட்ட ரீதியாகக் கற்பழிப்பு என்று கருதப்பட்டு உங்கள் நண்பன் மீது குற்றவழக்கு தொடரப்படலாம். உங்கள் நண்பன் 18 வயதுக்குக் கீழ்பட்டிருந்தால், அவர் மீதும் சிறார் சட்டப்படி, சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம்.
பாலுறவுத் தொடர்பின் மூலம் எனக்கு பால்வினை நோய்கள் ஏற்படுமா?
பால்வினை நோய் என்பது நெருங்கிய உடலுறவின்பொழுது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் தொற்று ஆகும். ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம். பால்வினை நோய்களுக்கான அறிகுறிகள் உங்களுக்கு எதுவும் தென்படுமானால், நீங்களும் மற்றும் உங்கள் நண்பன்/தோழியும் உடனடியாக அருகில் உள்ள கிளினிக்கிற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கு ஆலோசனைகள், இரத்தப் பரிசோதனை, பஞ்சுருட்டு (swabs) மற்றும் கருத்தடை தொடர்பான தகவல்கள் கொடுக்கப்படும். பால்வினை நோய் பீடித்த ஒருவர், அதற்கான எந்த அறிகுறிகளும் வெளித்தெரியாமல் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கலாம். ஆகையால், கவனமாக இருக்கவும். மனித பாபில்லோமா நோய்க்கிருமி (HPV) போன்றவை கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தலாம். ஆகையால், பாலியல் உறவில் இருக்கும் எல்லாப் பெண்களும் உள்ளூர் கிளினிக்கில் அவ்வப்பொழுது பாப் ஸ்மியர் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
பதின்மர் &நேச சந்திப்பு வன்முறை தொடர்பான பயனான தகவல்களைக் காணவும்.
