கற்பனையும் உண்மை நிலையும்

 

கற்பனை: இணையத் தளத்தில் நடப்பது எதுவும் உண்மை இல்லை.  பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒருவருக்கு உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை.
உண்மை நிலை: உண்மையில், இணையத் தளத்தில்தான், பாதிக்கப்பட்டவர் இன்னும் அதிகமான ஆபத்துகளுக்கு உள்ளாகிறார். ஏனெனில் குற்றம் புரிபவரின் உண்மையான விபரங்கள் எதுவும் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.  பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இல்லாமலேயே, அவரைக் குறி வைப்பவர் ஒரு விரல் சொடுக்கில் அவருக்குச் சேதத்தை உண்டு பண்ணிவிடலாம். ஒருவரின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு, அது தொடர்பான சேதத்தை விளைவிக்கும் படங்கள், காணொளிகள் மற்றும் இடுகைகள் அதிக நாட்களுக்கு இணையம் வழி உலாவரலாம். இதனை மற்றவர்கள் எண்ணிலடங்கா முறை பகிரக்கூடும்.

கற்பனை: பாதிப்புக்கு உள்ளானவர் தன்னுடைய கணினி/கைப்பேசியை முடக்கிவிட்டால் வன்முறை நின்றுபோகும்.
உண்மை நிலை: வன்முறை முடிவுக்கு வராது. பாதிக்கப்பட்டவர் இணையவழித் தொடர்புகள் மூலம் தன்னுடைய நிலைத்த அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதால், குறிவைப்பவர் அவரைப் பற்றிய எல்லா விபரங்களையும் எளிதில் பெற்று இணையத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ அவரைத் தொந்தரவு செய்ய, மிரட்ட மற்றும் ஆட்கொள்ள முனைவார். உதாரணத்திற்கு, யாரைக் குறி வைக்கிறாரோ அவரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.

கற்பனை: இணையவழி வன்முறை இயல்பான ஒன்றுதான்.  பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து எளிதில் விடுபட்டுவிடலாம்.
உண்மை நிலை: இணையவழி வன்முறை இயல்பான ஒன்றல்ல.  அப்படி ஏற்றுக்கொள்ளவும் கூடாது. இது போன்ற வன்முறைகளை இணையவெளிகளிலும் கூட இயல்பென்று வாளா இருத்தல் கூடாது.

கற்பனை: சம்பவத்திற்குப் பிறகு, குற்றமிழைத்தவர் தன்னுடைய கருத்துகள், படங்கள் மற்றும் இடுகைகளை அழித்துவிட்ட பிறகு அது இணையவழி வன்முறையாகக் கருதப்படமாட்டாது.  ஏனெனில் உள்ளடக்கங்கள் அதற்குப் பிறகு இணையத்தில் இருக்காது.
உண்மை நிலை: குற்றமிழைத்தவர் தன்னுடைய இடுகைகளை அழித்துவிட்டிருந்தாலும்,  அது தொடர்ந்து ஒரு வன்முறை மற்றும் துன்புறுத்தலாகவே கருதப்படும். அழிக்கப்பட்ட கருத்துகள், படங்கள், காணொளிகள் அல்லது இடுகைகள் தொடர்ந்து இணையத்தில் உலாவரலாம். ஏனெனில் அவற்றை வேறு ஒருவர் தன்னுடைய இணையத்தளம் வழியாகப் பகிர்ந்திருக்கக்கூடும்.

கற்பனை: தொழில்நுட்ப நுணுக்கங்களை நன்கறிந்த முகம் தெரியாத அந்நியர்தான் இணையவழி வன்முறையை மேற்கொள்வார்.
உண்மை நிலை: இணையவழி வன்முறையை மேற்கொள்பவர், யாரைக் குறி வைக்கிறாரோ அவருக்கு நன்கு அறிமுகமானவராகக் கூட இருக்கலாம்.  உதாரணத்திற்கு, நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை போன்றோர். எளிதில் கைக்கு எட்டக்கூடிய, பயன்படுத்தக்கூடிய இணையப் பயன்பாட்டு மென்பொருள்கள்  நிறையவே இருக்கின்றன.  ஒருவரைக் குறி வைப்பவர் இதனை அவருடைய கைப்பேசி போன்றக் கருவிகளில் பொருத்திவிட்டு, பிறகு அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணித்துப் பின்தொடர்வார்.

கற்பனை: இணையவழி வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் ஒன்றும் செய்ய இயலாது.
உண்மை நிலை: தனக்கு ஏற்பட்ட இணையவழி வன்முறையை நிறுத்த பாதிக்கப்பட்டவர் நிறைய நடவடிக்கைகளை எடுக்கலாம்.  சம்பந்தப்பட்ட சமூக ஊடகத்தளத்திற்குப் புகார் அறிக்கை அனுப்புதல், காவல்நிலையத்தில் புகார் செய்தல் மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு MCMC) மற்றும் சைபர்999-இல் புகார் பதிவு செய்தல். (உதவி கோருதல் பிரிவைப் பார்க்கவும்).

கற்பனை: இணையவழி வன்முறை ஒரு குற்றம் கிடையாது.  ஏனெனில் இதற்கென்று ஒரு பிரத்தியேகச் சட்டம் கிடையாது.
உண்மை நிலை: இணையவழி வன்முறை ஒரு குற்றம் ஆகும். குற்றம் இழைத்தவர் மீது குற்றம் சாட்டுவதற்கென்று நிறைய சட்டங்கள் உள்ளன. தண்டனைச் சட்டம், தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (மலேசியாவின் சட்டங்கள் பிரிவைப் பார்க்கவும்).

கற்பனை: தன் மீது மற்றவர்களுக்கு ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காகப் பெண்கள் இணையவழி இடுகை மேற்கொள்கிறார்கள். ஆகையால், அதற்கு எதிராக மற்றவர்கள் வீசும் மறுமொழிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
உண்மை நிலை: கிடையாது. பெண்கள் பற்றிய பாலியல் கருத்துகள், இகழ்ச்சியுரைகள் மற்றும் இணையவழித் தொந்தரவுகள் தவறு என்பதோடு இது ஒருவர் மீதான வன்முறை பிரயோகிப்பு ஆகும். தன் கருத்துகளை ஒரு பெண் எந்த நோக்கத்தோடு இணையத்தில் பகிர்கிறார் என்பது இங்கு ஒரு பொருட்டு கிடையாது.

இணையவழி தொடர்பான பயனான தகவல்களைப்  பாருங்கள்.

இணையவழி வன்முறை பக்கத்திற்குத் திரும்பவும்.