மலேசியாவில் சட்டங்கள்

பாலியல் தொந்தரவு தொடர்பான சட்டங்கள்

பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு சட்டம் 2022

இந்த காணொளியை பாருங்கள், இது 2022 ஆம் ஆண்டின் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு சட்டத்தின் வடிவமைப்புக்கு பெண்கள் அமைப்பின் முயற்சிகளை காட்டுகிறது.

இவ்வளவு நாள் நாம் எதிர்பார்த்திருந்த பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு சட்டம் 2022 (“சட்டம்”) (Anti-Sexual Harassment Act 2022) கடந்த ஜூலை 20223-இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 2022-இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆக்கப்பூர்வமான விடயமாகும்.  இச்சட்டம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஒருவருக்கு நியாயம் கோருவதற்கான உரிமையை வழங்குவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தீர்ப்பு மன்றத்தையும் நிறுவுகிறது.   இந்தத் தீர்ப்பு மன்றத்தின் மூலம் புகார்தாரர்கள் தங்களுக்கான இழப்பீட்டினைக் கோர முடியும்.  பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இது தொடர்பான ஆதரவுகளையும் வழங்குகிறது.

பாலியல் துன்புறுத்தலுக்கான விளக்கம்

இந்தச் சட்டத்தின் கீழ், பாலியல் துன்புறுத்தல் என்பது பாலியல் சம்பந்தப்பட்ட தேவையற்ற நடத்தைகளை வார்த்தைகள் மூலமாகவோ, அல்லது வார்த்தைகளற்று காட்சியாக, சைகை மூலமாக, உடல் இயக்கத்தின் மூலமாக நிகழும் துன்புறுத்தல் என்று வரையறுக்கப்படுகிறது; இது ஒருவருக்கு நிகழும்பொழுது அவர் துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாகிறார் அல்லது அவருடைய நலனுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

பாலியல் துன்புறுத்தல் பற்றிய விளக்கத்தில் நிலவும் முரண் பற்றிய வினாக்களுக்கு, பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு ஆலோசனைக் குழுக்களான JAG, ENGENDER மற்றும் “மாற்றத்தை உருவாக்கும் இளம் பெண்கள்” (Young Women Making Change) ஆகியோர் தயாரித்த குறிப்பாணையைப் பார்க்கவும்.

பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு தீர்ப்பு மன்றம்

இந்தச் சட்டம் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தீர்ப்பு மன்றத்தை நிறுவியுள்ளது.  இது நீதித் துறை மற்றும் சட்ட சேவையின் தற்போதைய உறுப்பினர்களிலிருந்து நியமிக்கப்பட்ட  தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரால் வழிநடத்தப்படும்.  நியமிக்கப்பட்ட பிற உறுப்பினர்கள் வருமாறு:

  1. நீதித்துறை மற்றும் சட்ட சேவையில் கடந்த கால அல்லது தற்போதைய உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டோர், அல்லது, குறைந்தது 7 வருடங்களுக்கு அனுபவமுள்ள வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர்;
  2. பாலியல் துன்புறுத்தல் விஷயங்கள் தொடர்பான அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ள ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்.

தீர்ப்பு மன்றத்தின் உறுப்பினர்களை, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நியமிப்பார்.  அமைச்சின் பொதுச் செயலாளர், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு நிர்வாகியாக செயலாற்றுவார்.

குற்றவியல் தொடர்பான நடத்தைகள் தவிர, தீர்ப்பு மன்றத்தில் பதிவு செய்யப்படும் புகார்கள் ஒரே தரப்பினருக்கு இடையிலான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்ட விடயங்களை உள்ளடக்கக்கூடாது.

தீர்ப்பு மன்றம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்ப்பு மன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும். இந்த தீர்ப்பு மன்றத்திற்கு ஒருவர் தலைமை தாங்க வேண்டும்.  அவர் தலைவர், துணைத்தலைவர்,  நீதித்துறை மற்றும் சட்ட சேவையில் பதவி வகித்த அல்லது வகிக்கும் உறுப்பினர் அல்லது குறைந்தது 7 வருடங்கள் அனுபவமுள்ள வழக்கறிஞர் அல்லது வழக்குரைஞராக இருக்க வேண்டும். எஞ்சிய இருவர், பாலியல் துன்புறுத்தல் விஷயங்களை கையாண்ட அறிவு அல்லது நடைமுறை அனுபவங்கள் உள்ளவராக இருக்க வேண்டும்.  இந்தக் குழுவில் குறைந்தது ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும்.

தீர்ப்புமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டாது. தனியுரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு சட்ட நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.  தீர்ப்பு விசாரணையில் சட்டச் சிக்கல்கள் இருந்தால் ஒழிய வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்படமாட்டாது.  ஒரு தரப்பினரைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டால், இன்னொரு தரப்பினருக்கும் அவ்வாறு அனுமதிக்கப்பட வேண்டும். இளவயதினர் அல்லது உடல் ஊனமுற்றோரை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பாளர் அல்லது அவருக்கு அடுத்த நண்பர் ஒருவர்,  தீர்ப்பு மன்றத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிரதிநிதிக்கலாம்

தீர்ப்புகளும் ஆணைகளும்

நடைமுறை சாத்தியமாக இருக்கும் பட்சத்தில், முதல் விசாரணைத் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் தீர்ப்பு மன்றம் தனது தீர்ப்பை அளிப்பது  கட்டாயமாகும்.

ஒரு தீர்ப்பை அளிக்கும்பொழுது, தீர்ப்பு மன்றம் பிரதிவாதிக்கு கீழ்கண்டவாறு உத்தரவிடலாம்:

  • புகார் அளித்தவருக்கு மன்னிப்பு கோரும் அறிக்கையை வெளியிடுதல் (குற்றச் செயல் பொதுவில் செய்யப்பட்டிருந்தால் பதிப்பு எடுக்கப்பட்ட பகிரங்கமான மன்னிப்பையும் கோர வேண்டும்; அல்லது
  • புகார் அளித்தவருக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது சேதத்திற்கு மவெ. 250,000-க்கு மேற்போகாத தொகையை அளித்தல். தீர்ப்பு மன்றம் தேவை என்று கருதும் எந்த ஒரு நிகழ்விலும் தீர்ப்பில் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ள தீர்ப்பு மன்றம் ஆணையிடலாம்.

ஒரு புகார் மிகவும் அற்பமானது அல்லது எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாகக் கருதப்பட்டால் , தீர்ப்பு மன்றம் அதனைத் தள்ளுபடி செய்யலாம்.

தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், தீர்ப்பில் உள்ளவாறு அது நிறைவேற்றப்பட வேண்டும்.  அப்படி செய்யாத பட்சத்தில் அது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம், சிறைவாசம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.   இழப்பீடு அல்லது சேதத்தொகை வழங்கப்பட்டதா என்பதனைப் பொருத்து இது முடிவு செய்யப்படும்.

தீர்ப்பு மன்றம் அளித்த தீர்ப்பு நீதிமன்ற ஆணையாகக் கருதப்படும்.  ஆகையால், இதுவே இறுதியான தீர்ப்பு என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் இதற்குக் கட்டுப்பட்டு ஆக வேண்டும்.

இந்தச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிடங்கள் உள்ளன.  பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை இனங்காண வேண்டும்.  இது தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ள, பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு ஆலோசனைக் குழுக்களான JAG, ENGENDER மற்றும் “மாற்றத்தை உருவாக்கும் இளம் பெண்கள்” (Young Women Making Change) ஆகியோர் தயாரித்துள்ள குறிப்பாணையைப் படிக்கவும்.

தண்டனைச் சட்டம் (Penal Code)

தண்டனைச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கலாம்.  ஆனாலும் அவை ஒரு வரம்புக்கு உட்பட்டே இருக்கின்றன.

பிரிவுகுற்றம்தண்டனை
354பாலியல் தாக்குதல் (ஒருவரை மானப்பங்கப்படுத்தும் நோக்கில் அவரைத் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல்).அதிக பட்சம் 10 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது இந்தத் தண்டனைகளில் ஏதாவது இரண்டு.
355ஒருவரை அவமதிக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல், அல்லது கோபத்தைத் தூண்டிவிடல்.அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.
377Dஒருவரை மானபங்கப்படுத்துதல்.அதிக பட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
509ஒருவரின் தன்மானத்தைக் குலைக்கும் நோக்கில் வார்த்தைகள் மற்றும் அங்க அசைவுகளை வெளிப்படுத்துதல்.அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

தொழிலாளர் சட்டம் 1955 (Employment Act 1955)

2012-ல் தொழிலாளர் சட்டம் 1955-ன் XVA பகுதியில் பாலியல் தொந்தரவு உள்ளடக்கப்பட்டுள்ளது.  பிரிவு 2-ல் பாலியல் தொந்தரவுக்கான விளக்கம் தரப்பட்டுள்ளது.  பாலியல் தொந்தரவு என்பது ஒருவருடைய தொழில் காரணமாக அல்லது பணியாற்றும்பொழுது, அவரை அவமதிக்கும் அல்லது அவமானப்படுத்தும் அல்லது அவருடைய நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் வாய்மொழியாக, வாய்மொழியற்ற, காட்சி வடிவில், சைகை அல்லது உடல் ரீதியான, எந்தவொரு விரும்பத்தகாத பாலியல் நடத்தைகள் ஆகும்.  பணியாற்றும் இடங்களில் உள்ள பாலியல் தொந்தரவுகளை மட்டுமே இந்தச் சட்டப் பிரிவு வரையறுத்துள்ளது.

பகுதி XVA, பிரிவு 81A-விலிருந்து 81G வரை, பணியாற்றும் இடங்களில் நிகழும் பாலியல் தொந்தரவுகளை எப்படிப் புகார் செய்வது மற்றும் பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க முதலாளிகளுக்கு இருக்க வேண்டிய கட்டாயப் பொறுப்புகளைப் பற்றிப் பேசுகிறது.  ஆனாலும் இந்தச் சட்டத்தில் நிறைய வரையறைகள் உள்ளன.  (Employment Act 1955)

தொழிற்துறை தொடர்பு சட்டம் 1967 (Industrial Relations Act 1967)

நீங்கள் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அல்லது பாலியல் தொந்தரவு காரணமாக வேலையை விட்டு விலகியிருந்தால், தொழிற்துறை தொடர்பு சட்டம் 1967 பிரிவு 20-ன்படி நீங்கள் நியாயமற்ற முறையில் பணீநிக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் உங்களைத் திரும்ப வேலைக்கு அமர்த்த அல்லது இழந்த வேலைக்கான இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க உதவி செய்யும். (Industrial Relations Act 1967)

பணியாற்றும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளைத் தடுப்பதற்கு மற்றும் ஒழிப்பதற்கான நடப்பு விதிமுறைகள்

பணியிடங்களில் நிகழும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க மற்றும் துடைத்தொழிக்க 1999 (Code of Practice on the Prevention and Eradication of Sexual Harassment in the Workplace)-ல் மனித வள அமைச்சு நடப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. முதலாளிகள் இந்த நடப்பு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு பாலியல் தொந்தரவுகளைத் தடுப்பதற்கான இயக்க முறைகளைத் தொழிலிடத்தில் ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

நிறுவனங்கள் பாலியல் தொந்தரவைக் கையாளுவதற்கு சொந்த இயக்க முறைகளைக் கொண்டு வர வேண்டும்.  துரதிருஷ்டவசமாக, இந்த நடப்பு விதிமுறைகள் பலன் தருவதில்லை.  ஏனெனில் இந்த விதிமுறைகள் வெறும் வழிகாட்டிகளே. நிறுவனங்கள் அதனைச் செயல்முறைப்படுத்துவது கட்டாயமாக்கப்படவில்லை. (Code of Practice on the Prevention and Eradication of Sexual Harassment in the Workplace)

புதுப்பிக்கப்பட்ட பொதுச்சேவைத் துறை சுற்றறிக்கை 2018

பணியிடங்களில் அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பாலியல் தொந்தரவுகளைக் கையாளும் பொருட்டு ஒரு விரிவான வழிகாட்டிக்கான சுற்றறிக்கையை 2018-ல் பொதுச் சேவை இலாகா வெளியிட்டது. (Garis Panduan Mengendalikan Gangguan Seksual di Tempat Kerja Dalam Perkerjaan Awam)

தகவல் தொடர்பு & பல்லூடக சட்டம் 1998 (Communications & Multimedia Act 1998)

தகவல் தொடர்பு & பல்லூடக சட்டம் 1998-ல் சில பிரிவு 233 இயங்கலை மூலமாகக் கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகளுக்குச் சிறிது பாதுகாப்பு கொடுக்கிறது. (Communications & Multimedia Act 1998)

பாலியல் தொந்தரவு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.

பாலியல் தொந்தரவுகள் முகப்புப்பக்கத்திற்குத் திரும்பு