கற்பனையும் உண்மை நிலையும்

கற்பனை: ஒரு பெண் ஆபாசமாக உடையணியும்பொழுது அல்லது ஆபாசமாக நடந்துகொள்ளும்பொழுது அவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக விரும்புகிறார்.

உண்மை நிலை: பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்களின் தோற்றம், உடையணியும் விதம், வயது மற்றும் நடத்தை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  பாலியல் தொந்தரவுக்குக் காரணம் பெண்களின் உடையல்ல.  பாலியல் தொந்தரவு கொடுப்பவரின் செய்கையே அதற்குக் காரணம்.

கற்பனை: இது சிறிய சமாச்சாரம்; சிறிது கொஞ்சலும் குலாவலும்தான்.  பெண்கள் அதனை விரும்பாதது போல் நடித்தாலும் உண்மையில் அவர்கள் சந்தோஷப்படவே செய்கின்றனர்.
உண்மை நிலை:
பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் நிச்சயமாக இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பெரும்பாலான தருணங்களில் பாலியல் தொந்தரவுக்கும் ஒருவர் குலாவுவதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை.  ஒருவரை இழிவுபடுத்துவதற்காக அவரின் பாலினவியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு அதிகார விளையாட்டுதான் பாலியல் தொந்தரவு. பாலியல் தொந்தரவிலிருந்து விடுபட, பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் வேலையை விட்டு விலகுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

கற்பனை: இளவயது பெண்கள் மட்டுமே பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.
உண்மை நிலை:
வயது, தோற்றம் மற்றும் திருமண அந்தஸ்து ஆகியவை பாராது பெரும்பாலான பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் தொந்தரவை எதிர்நோக்குகின்றனர். பாலியல் தொந்தரவு என்பது அதிகாரத் துஷ்பிரயோகம்.  அதிகாரத்தின் மேல் நிலையில் உள்ளவர் அவருக்குக் கீழே உள்ளவரை அச்சுறுத்தித் தொந்தரவு செய்கிறார்.

கற்பனை: நீங்கள் தொந்தரவுகளைப் புறக்கணிக்கும்பொழுது அது விலகியோடும்.
உண்மை நிலை:
அது அப்படி விலகியோடாது. ஒருவரின் பாலியல் தொந்தரவுகளைப் புறக்கணிப்பது பலனைக் கொண்டு வராது என்று ஆய்வுகள் காட்டுகின்றன; பாலியல் தொந்தரவு கொடுப்பவர் தன்னிச்சையாகவே தன் செய்கையை நிறுத்தமாட்டார். உங்களின் புறக்கணிப்பை ஒப்புதல் அல்லது உற்சாகப்படுத்துவதாகவும் அவர் எடுத்துக்கொள்ளலாம்.

கற்பனை: பாலியல் தொந்தரவுகள் அரிதாகவே நடக்கின்றன.
உண்மை நிலை:
பாலியல் தொந்தரவுகள் மிகவும் பரவலாக நடக்கின்றன. 40-60% வேலைக்குப் போகும் பெண்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

கற்பனை: தன்னை கோபத்திற்குள்ளாக்கிய நிறுவன முதலாளி அல்லது ஏனையோரைப் பழி வாங்குவதற்காகப் பெரும்பாலான பெண்கள் பாலியல் தொந்தரவு பற்றிய கதைகளைத் திரித்துக் கூறுகின்றனர். 
உண்மை நிலை:  இது முற்றிலுமாகச் சரி கிடையாது.  பாலியல் தொந்தரவுப் புகார்களில் வெறும் 1% மட்டுமே பொய்ப் புகார்கள். புகார் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகளிலும் கூட பெண்கள் புகார் செய்வது அரிதாகவே இருக்கிறது.