மலேசியாவில் சட்டங்கள்

 

சிறார் பாலியல் கொடுமை தொடர்பான சட்டங்கள்

Child Act 2001 மற்றும் Child (Amendment) Act 2016

பிரிவு குற்றங்கள்/விதிமுறைகள் தண்டனை
15 ஊடக அறிக்கைகள் மற்றும் பிரசுரங்களுக்கான வரையறைகள் – இந்தச் சட்டத்தின் கீழ் இருக்கும் அல்லது குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் சிறாரின் விபரங்களை வெளிப்படுத்தும் வகையில் எந்த ஊடகமும் அவரது பெயர், முகவரி, கல்விக்கழகம், படம் அல்லது விபரங்களை வெளியிடக்கூடாது. அதிக பட்சம் 5 வருடங்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் RM10,000 அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.
27,28,29 அறவிக்க வேண்டிய கடமை- சிறார் மோசமாக நடத்தப்பட்டதால், புறக்கணிக்கப்பட்டதால், கைவிடப்பட்டதால், பாதுகாப்பளிக்கப்படாததால், அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதால் அவர் உடல் அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு மருத்துவ அதிகாரி அல்லது மருத்துவர், அல்லது குடும்ப உறுப்பினர், அல்லது சிறார் பராமரிப்பாளர் நம்பும் பட்சத்தில் அதனை உடனடியாகச் சமூகநல அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். அறிவிக்கத் தவறினால் – அதிக பட்சம் 2 வருட சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் RM5,000 அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும்.
29A அறிவிக்க வேண்டிய கடமை – பிரிவு 27, 28, 29-ல் குறிப்பிட்டுள்ளதைத் தவிர, வேறு எந்த நபரும் சிறார் மோசமாக நடத்தப்பட்டதால், புறக்கணிக்கப்பட்டதால், கைவிடப்பட்டதால், பாதுகாப்பளிக்கப்படாததால், அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதால் அவர் உடல் அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று நம்பும் பட்சத்தில் அதனைச் சமூகநல அதிகாரிக்கு அறிவிக்கலாம். அபராதம் இல்லை
31(1) சிறாரை மோசமாக நடத்துதல்- சிறாரைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள எவரும்- அ) உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிறாரை வதைத்தல், புறக்கணித்தல், கைவிடல், பாதுகாப்பளிக்காமல் அசட்டையாக இருத்தல்; அல்லது ஆ) சிறாரைப் பாலியல் கொடுமை செய்தல் அல்லது அவரைப் பாலியல் கொடுமை செய்யும் அளவுக்கு தூண்டிவிடுதல் அல்லது இணங்க வைத்தல். அதிக பட்சம் RM50,000 அபராதம் அல்லது அதிக பட்சம் 20 வருட சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டும். கூடுதலாக, நன்னடத்தைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு சமூக சேவை செய்யுமாறு ஆணையிடலாம்.
32 சிறாரை பிச்சையெடுக்கவோ அல்லது எந்த வித சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்தக்கூடாது – சிறாரை இவ்வித நடவடிக்கைகளுக்குத் தள்ளும் ஒருவர் தண்டிக்கப் படுவார். அதிக பட்சம் RM20,000 அபராதம் அல்லது அதிகபட்சம் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  கூடுதலாக, நன்னடத்தைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு சமூக சேவை செய்யுமாறு ஆணையிடலாம்.
33 முறையான கண்காணிப்பு இல்லாமல் சிறாரை விட்டுச்செல்வோர் தண்டிக்கப்படுவர். அதிக பட்சம் RM20,000 அபராதம் அல்லது அதிகபட்சம் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  கூடுதலாக, சமூக சேவை செய்யுமாறு ஆணையிடலாம்.
116 சிறாருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்ற தகவலைக் கொடுக்கும் எவர் மீதும் அவதூறு பரப்பியதாகவும் அல்லது நன்னடத்தை அல்லது நெறிமுறைகளை மீறியதற்காக அல்லது அத்தகைய தகவல்களைத் தருவதற்கான தரநிலை துறைசார் ஒழுக்கத்தை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்படமாட்டாது. தண்டனை கிடையாது.

சிறாருக்கு எதிரான பாலியல் வன்முறை சட்டம் 2017

Sexual Offences Against Children Act 2017 (SOAC)

பிரிவு

குற்றம்

தண்டனை

5

சிறார் பாலியல் வன்முறைப் படங்களை உருவாக்குதல், தயாரித்தல், இயக்குதல்.

அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 6 கசையடிகள்.

6

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை உருவாக்கும், தயாரிக்கும் அல்லது இயக்கும் ஆயத்த வேலைகளில் ஈடுபடுதல்.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி கொடுக்கப்படலாம்.

7

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை உருவாக்கும், தயாரிக்கும், இயக்கும் ஆயத்த வேலைகளில் சிறாரைப் பயன்படுத்துதல்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 5 கசையடிகள்.

8

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை பரிமாறிக்கொள்ளுதல், பிரசுரித்தல்.

அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 3 கசையடிகள்.

9

சிறார் பாலியல் வன்முறைப் படத்தை சிறாருக்கு விற்றல்.

அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 5 கசையடிகள்.

10

சிறார் பாலியல் வன்முறைப் படத்தைக் காணுதல்.

 

அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சம் RM10,000 அபராதம் அல்லது இவ்விரண்டும்.

11

சிறாருடன் பாலியல் ரீதியாகத் தொடர்புகொள்ளுதல் (கல்வி, அறிவியல்/மருத்துவ காரணங்களைத் தவிர).

அதிகம் பட்சம் 3 வருட சிறைத்தண்டனை.

12

சிறாரை வசப்படுத்துதல்.

அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்  கசையடி.

13

சிறாரை வசப்படுத்திய பிறகு சந்தித்தல்.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்  கசையடி.

14

சிறார் மீது உடல் ரீதியான பாலியல் தாக்குதல்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.

15

 

 

சிறார் மீது உடல் ரீதியாக அல்லாத பாலியல் தாக்குதல். எ.கா: பாலியல் நோக்கத்திற்காகச் சிறார் தன் உடலை அடுத்தவருக்குக் காண்பிக்கச் செய்தல்.

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதிக பட்சம் RM20,000 அபராதம் அல்லது இவை இரண்டும்.

15A

 

சிறாரின் பாலியல் காட்சிகள்

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிக பட்சம் மவெ.50,000 அபாதம்

15B

பாலியல் பலாத்காரத்தின் வழி சிறாரிடமிருந்து பணம் பறித்தல்

அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

16

நம்பிக்கைக்குரிய ஓர் உறவு முறையில் உள்ள ஒருவர் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்திருந்தால், அதற்கான தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். நம்பிக்கைக்குரிய உறவுகளின் கீழ் வருபவர்கள் வருமாறு:-

அ) பெற்றோர்/காப்பாளர்/உறவினர்

ஆ) குழந்தை பராமரிப்பாளர்

இ) ஆசிரியர்/ விரிவுரையாளர்/விடுதிக் காப்பாளர்

ஈ) சுகாதாரப் பராமரிப்பாளர்கள்

உ) பயிற்றுநர்

ஊ) அரசுப் பணியாளர்

இவர்களின் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கப்படும் அதே வேளையில், கூடுதலாக, அதிக பட்சம் 5 வருட சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 2 கசையடிகளும் கொடுக்கப்படும்.

 

19

தகவல் கொடுக்கத் தவறுதல் – சிறார் பாலியல் கொடுமை பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுக்கத் தவறிய எவரும் குற்றம் புரிந்தவர் ஆவார்.

அதிக பட்சம் மவெ. 5,000 அபராதம் விதிக்கப்படுவர்.

25

கசையடி தொடர்பான சட்டங்கள்:  இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் 50 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்தால்.

இவருக்கும் கசையடி கொடுக்கப்படலாம்.

 

26

புனர்வாழ்வு ஆலோசனை.

கொடுக்கப்பட்ட தண்டனையையும் சேர்த்து, ஒருவர் தடுத்து வைக்கப்படும் காலக்கட்டம் வரைக்கும், நீதிமன்றம் அவரின் புனர்வாழ்வுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆணையையும் பிறப்பிக்கலாம்.

27

காவல்துறை கண்காணிப்பில் இருத்தல்.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில், அவருடைய தண்டனை முடிவடைந்த பிறகு, ஒரு வருடத்திற்குக் குறையாமலும் மூன்று வருடத்திற்கு மேற்போகாமலும் காவல்துறை கண்காணிப்பின் கீழ் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடலாம்.

தண்டனைச் சட்டம் (Penal Code)

பிரிவு குற்றம் தண்டனை
354 பாலியல் தாக்குதல் (Molestation) (ஒருவரை மானபங்கப்படுத்தும் வகையில் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல் ) அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது இதில் ஏதாவது இரு தண்டனைகள்.
355 ஒருவரை அவமதிக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்துதல், அல்லது கோபத்தைத் தூண்டிவிடல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.
372 விபச்சார நோக்கங்களுக்காக எந்தவொரு நபரையும் பயன்படுத்துதல். கசையடியோடு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
375 (a, g) & 376 கற்பழிப்பு (Rape) என்பது மனைவி அல்லாத பெண்களோடு அவர்களின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வது. சட்டப்பூர்வ கற்பழிப்பு என்பது 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணுடன் அவரின் அனுமதியோடு அல்லது அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்வது. அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.
376 (2) (d, e) Statutory rape – ஒரு பெண்ணின் (16 வயதுக்குக் கீழ்ப்பட்ட) சம்மதம் இல்லாத சட்டப்பூர்வ கற்பழிப்பு மற்றும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதம் இல்லாத உடலுறவு. குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கும், அதிகபட்சம் 30 வருடங்களுக்கும் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.
376 (4) கற்பழிக்கும்பொழுது அல்லது கற்பழிக்க முயற்சி செய்யும்பொழுது ஒரு பெண்ணுக்கு மரணத்தை விளைவித்தல். மரணதண்டனை அல்லது குறைந்த பட்சம் 15 வருடங்களுக்கு, அதிகபட்சம் 30 வருடங்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 10 கசையடிகள்.
376A & 376B கூடா பாலுறவு (Incest) (சட்டம், மதம் மற்றும் மரபு முறையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத ஓர் உறவு முறையில் உள்ளவரோடு உடலுறவு கொள்ளுதல்) குறைந்த பட்சம் 10 வருடங்களுக்கும், அதிகபட்சம் 30 வருடங்களுக்கும் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.
377A & 377B முறையிலா புணர்ச்சி (Sodomy) (இயற்கைக்குப் புறம்பான பாலுறவு.  ஆண்குறியை இன்னொருவரின் ஆசனவாய்க்குள் அல்லது வாய்க்குள் செலுத்துவதன் மூலம் பாலுறவு கொள்ளுதல்) அதிக பட்சம் 20 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.
377C ஒருவரின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒருவர் இன்னொருவருக்கு மரணம் அல்லது காய பயத்தை உருவாக்குதல். குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கும் , அதிகபட்சம் 20 வருடங்களுக்கும் சிறைத்தண்டனை  மற்றும் கசையடி.
377CA ஒருவரின் பெண்குறி அல்லது ஆசனவாயில் அவருடைய சம்மதம் இல்லாமல் பொருட்களை உட்செலுத்துவதன் மூலம் பாலியல் தொடர்புகொள்ளுதல். குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கும், அதிக பட்சம் 30 வருடங்களுக்கும் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.
377D ஒருவரை மானபங்கப்படுத்துதல். அதிக பட்சம் 2 வருடங்களுக்கு சிறைத்தண்டனை.
377E 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறாரை  மிக இழிந்த செயலை புரியத் தூண்டுதல் குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு, அதிக பட்சம் 15 வருடங்களுக்குச் சிறைத்தண்டனை மற்றும் கசையடி.
509 ஒருவரின் தன்மானத்தைக் குலைக்கும் நோக்கில் வார்த்தைகள் மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்துதல். அதிகபட்சம் 5 வருடங்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும்.

சிறார் சாட்சி சட்டம் 2007 மற்றும் அது தொடர்பான திருத்தங்களுக்கான சான்றுகள்

குற்றச் செயல்களைக் காண நேரிட்ட சிறார் (18 வயதுக்குக் கீழ்ப்பட்ட எவரும்) அதிக மன அழுத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகாமல் சாட்சியம் வழங்க, சிறார் சாட்சி சட்டம் 2007 மற்றும் அது தொடர்பான திருத்தங்களுக்கான சான்றுகள் (ECWA), அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி உதவுகிறது. 2017-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் இதுவரை 2023 மற்றும் 2024 என இரு முறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

சிறார் சாட்சி சட்டம் 2007 மற்றும் அது தொடர்பான திருத்தங்களுக்கான சான்றுகள், நீதிமன்ற செயல்பாட்டின் பொழுது சாட்சியம் கூறும் சிறாருக்குக் கீழ்கண்ட முக்கிய வழிகளில் உதவி புரிகின்றன.

  • குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராகச் சிறார் சாட்சி சொல்லும் பொழுது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் சிறாருக்கும் இடையே திரை வைக்கப்படலாம். நேரடி காணொளி உரையாடல், காணொளிப் பதிவு அல்லது சிறப்பு விசாரணையும் மேற்கொள்ளப்படலாம்.
  • ஒரு சிறார் சாட்சியாளரைப் பரிசோதிப்பது மற்றும் கேள்வி எழுப்புவது ஆகியவற்றை ஒரு நடுவர் மூலமாகவும் மேற்கொள்ளலாம். சிறாரும் நீதிமன்றமும் தொடர்பு கொள்வதை இவர் எளிமையாக்குவார்.
  • நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, சிறாரிடம் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்பதை (எ.கா. தவறான கோணத்தில் கேட்பது, அவமதிப்பது, திரும்பத் திரும்பக் கேட்பது) நீதிபதி தடுத்து நிறுத்தலாம்.
  • சிறார் சாட்சியளிக்கும் நேரத்தில் ஒரு சிநேகமான, இதமான சூழலை உருவாக்கும் பொருட்டு, நீதிபதி சீருடை அணியாமல் சாதாரண ஆடைகளில் தோற்றமளிக்கலாம்.
  • சிறார் சாட்சியாளர், சாட்சியளிக்கும்பொழுது அவரோடு பெரியவர் ஒருவர் இருக்கலாம். அவர் நீதிமன்ற நடவடிக்கைகளின் பொழுது இடையூறுகளை விளைவிக்கக்கூடாது.
  • வழக்குக்கான முன் விசாரணையின்பொழுது, சிறாரின் வயது மற்றும் குறிப்பிட்ட தேவைகள் (இதில் இயலாமையும் அடங்கும்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு சிறார் சாட்சியாளர் எப்படி சாட்சியம் கூறுவார் என்பதற்கான பிரத்தியேகக் கோரிக்கைகளை முன் வைக்கலாம். சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இவ்வாறான வழக்கு நிர்வகிப்புகள் கட்டாயமாகும்.

 

குற்றவியல் நீதிமன்ற செயல்முறை பற்றிய கூடுதல் தகவலுக்கு, சர்வைவிங் கோர்ட் என்ற எங்கள் பயனர்-சிநேக வழிகாட்டி புத்தகத்தைப் பார்க்கவும்.