
மலேசியாவில் சட்டங்கள்
மலேசியாவில் குடும்ப வன்முறை தொடர்பான சட்டங்கள்
குடும்ப வன்முறை சட்டம் 1994 (Domestic Violence Act 1994)
மலேசிய அரசாங்கம் 1994-ல் குடும்ப வன்முறையை ஒரு தீவிரமான பொதுப் பிரச்சனையாக அங்கீகரித்து, குடும்ப வன்முறை சட்டம் 1994-ஐக் கொண்டு வந்தது. குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் மென்மேலும் கொடுமைப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
வாழ்க்கைத் துணை, முன்னாள் வாழ்க்கைத் துணை, நடப்பில் உள்ள (de facto) வாழ்க்கைத் துணை, குழந்தைகள் (தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் அடங்குவர்), மன அல்லது உடல் குறைபாடுள்ளோர் மற்றும் குடும்பத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் இதர நபர்கள் போன்ற குடும்பத்தின் நெருக்கமான அனைத்து உறுப்பினர்களுக்கும் குடும்ப வன்முறை சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. மிக முக்கியமாக, இந்தக் குடும்ப வன்முறை சட்டம் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாதோர், குடியுரிமை பெற்றவர், பெறாதவர் என்றும் எல்லோருக்கும் பொருந்தும்.
கொடுமை செய்தவரின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யும்பொழுது, தண்டனைச் சட்டத்தோடு (Penal Code) சேர்த்து குடும்ப வன்முறை சட்டமும் வாசிக்கப்படும். குற்றச்சாட்டுகளின் உதாரணங்களுக்கு கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும். இவை யாவும் குடும்ப வன்முறையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டவை.
பிரிவு | சட்ட வரையறை | தண்டனை |
321 & 323 | தன்னிச்சையாகக் காயங்களை ஏற்படுத்தியதற்கான தண்டனை | ஆகக் கூடுதலாக ஒரு வருட சிறைத் தண்டனை / RM2,000 அபராதம் அல்லது இவ்விரண்டும் |
324 | தன்னிச்சையாக ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு காயங்களை ஏற்படுத்துதல் | அதிகபட்சம் 10 வருடங்கள் சிறைத் தண்டனை /அபராதம்/கசையடி/ மேற்குறிப்பிட்ட ஏதாவது இரண்டு தண்டனை |
322 & 325 | தன்னிச்சையாக கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்கான தண்டனை | அதிகபட்சம் 7 வருடங்கள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் |
326 | தன்னிச்சையாக ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளின் மூலம் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் | அதிகபட்சம் 20 வருடங்கள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்/ கசையடி |
326A | வாழ்க்கைத் துணை, முன்னாள் வாழ்க்கைத் துணை, குழந்தை அல்லது குடும்ப உறுப்பினர்களுக்குக் காயம் விளைவித்தல் | அதிகபட்ச சிறைத்தண்டனையின் இரு மடங்கு |
507A | பின்தொடர்தல் | அதிகபட்சம் 3 வருடங்கள் சிறைத்தண்டனை / அபராதம் / இவ்விரண்டும் |
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326A-ன்படி, குடும்ப வன்முறை ஒரு கடுமையான குற்றம் என்பதை உணர்த்துவதற்காக, சொந்த குடும்ப உறுப்பினர்களுக்குக் காயத்தை விளைவித்தால், அதிகபட்ச அபராதத்தை விட இரு மடங்கு அதிகமான சிறைத்தண்டனை அளிக்கப்படும்.
2023-இல் ஒருவரைப் பின்தொடர்தலை ஒரு குற்றமாக உள்ளடக்கும் வகையில் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பின்தொடர்தல் (குறைந்தது இரு முறை) என்பது தொடர்ச்சியான தொந்தரவு நடவடிக்கையாகும். பின்தொடரப்படுபவருக்கு இது துன்பம், பயம், பாதுகாப்பு பற்றிய பீதி ஆகியவற்றை ஏற்படுத்தும். ஒருவரைப் பின்தொடர்வது, தொடர்புகொள்வது, அவர் அருகிலேயே நடமாடிக் கொண்டிருப்பது அல்லது அவருக்கு எதையாவது அனுப்பி வைப்பது எல்லாம் இதில் அடங்கும்.
குடும்ப வன்முறை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.